Sunday, November 17, 2013

கனத்த இதயத்துடன்...

1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி பம்பாயில் (தற்போது மும்பை) ஓர் அதிசய மனிதனின் பிறப்பு நிகழ்கிறது. ரமேஸ் டெண்டுல்கர் - ரஜினி டெண்டுல்கர் தம்பதியருக்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் பிறந்துள்ள நிலையில், நான்காவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்ததும் அந்தக் குடும்பத்தில் பெரும் ஆனந்த வெள்ளம் புரண்டோடியது. ஜாதகத்தைப் பார்த்த பெற்றோர் அதிசயித்துப்போனார்கள்.
இந்தக் குழந்தை ஓர் அதிசயக் குழந்தை, இது சாதிக்கப் பிறந்துள்ளது என ஜோதிடர் கணித்துக் கூறியதும் ரமேஸுக்கும் ரஜினிக்கும் இனம்புரியாத வியப்புடன் கூடிய மகிழ்ச்சி.
இந்திய இசையமைப்பாளராக விளங்கிய சச்சின் தேவ் பர்மனின் தீவிர ரசிகரான ரமேஸ், அவரது நினைவாக தனது நான்காவது குழந்தைக்கு சச்சின் எனப் பெயர் சூட்டினார்.
சச்சின் என்ற பெயரில் அந்தக் குழந்தை, சிறுவனாக பரிணாம வளர்ச்சி காண்கிறது. ஷாரதாஸ்ராம் வித்யாமன்டிர் என்ற பாடசாலையில் கல்வியைத் ஆரம்பிக்கிறது. அந்தப் பாடசாலையின் அனைவர் கண்களும் இந்தச் சிறுவனை ஓர் அதிசமாக நோக்குகின்றன.
டென்னிஸ் விளையாட்டு வீரரான ஜோன் மெக்என்ரோவைப் பின்பற்றிய இந்தச் சிறுவன் சச்சின், அவரைப் போலவே நீளமாக முடிவளர்த்து அவரது பாணியைப் பின்தொடர்ந்தான். இதனால் அவரது தோழர்களும் அவரை மெக்என்ரோ என்றே அழைத்தனர்.
டென்னிஸ் வீரரின் பாணியைத் தொடர்ந்த இந்தச் சிறுவனுக்கு, தான் கல்வி கற்கும் பாடசாலையில் பிரபல்யம் பெற்றதாக விளங்கிய கிரிக்கெட் மீது மோகம் வந்தது. இதனால் கிரிக்கெட்டுக்குள் இவரது கவனம் திரும்பியது. சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வரவேண்டும் என்ற அவாவில் கிரிக்கெட்டுக்குள் புகுந்த சிறுவனை,
""உனக்குப் பந்துவீச்சுச் சரிவராது. வேண்டுமானால் நீ துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்து''
என அவரது பயிற்றுவிப்பாளர் பணித்தார். இதையடுத்துத் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த இச்சிறுவன், இளைஞனாக சிறிது சிறிது வளர ஆரம்பித்து, தனது நண்பனான காம்பிளியுடன் (இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்) இணைந்து பாடசாலைகளுக்கிடையிலான போட்டி ஒன்றில் 664 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த ஆட்டத்த்துடன் அவரது பாதையும் நீளத் தொடங்கியது. 1988d89 ஆண்டுக் காலப்பகுதியில் மாநிலங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி சார்பாக சிறுவனாகக் களமிறங்கிய சச்சின் (15 வயது), சதம் அடித்து இந்தியக் கிரிக்கெட்டின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார்.
இதன் விளைவாக, 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி கராச்சியில் ஆரம்பமான பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். (இந்த ஆட்டம் இந்திய முன்னாள் வீரரான கபில்தேவுக்குச் சிறப்பு வாய்ந்த ஓர் ஆட்டமாகவும் விளங்கியது. இதுதான் அவரது 100ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது).
அந்த முதலாவது ஆட்டத்தில் அவர், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பந்துவீச்சுப் பணியைச் செய்தார். ஓர் ஓவரை மாத்திரம் வீசிய அவர் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தபோதும் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. பின்னர் இந்திய அணிக்காகத் துடுப்பெடுத்தாடிய அவர், 24 பந்துகளை எதிர்கொண்டு 2 பெளண்டரிகள் அடங்கலாக 15 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் முதல் முதலில் எதிர்கொண்ட பந்துவீச்சாளரும் வக்கார் யூனிஸ்தான். வக்கார் யூனிஸுக்கும் இதுதான் அறிமுகப் போட்டியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் 4 ஓவர்களை வீசி 15 ஓட்டங்களை விட்டுக்கெடுத்திருந்தார். துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்தத் தொடரில் நடைபெற்ற 4 ஆட்டங்களும் அதிசயிக்கத் தக்க வகையில் சமநிலையில் முடிந்தமையால் தொடரும் வெற்றிதோல்வியின்றியே முடிந்தது.
டெஸ்டில் அறிமுகமாகிய சச்சினுக்கு ஒருநாள் ஆட்டங்களிலும் வாய்ப்புக் கிடைத்தது. 1989ஆம் ஆண்டு 18ஆம் திகதி ஆரம்பமாகிய பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரிலேயே அவரது ஒருநாள் போட்டிகளின் பயணமும் ஆரம்பமாகியது.
அந்த நாள் முதல் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த சச்சின், இந்திய அணியின் அசைக்க முடியாத ஒரு வீரராகத் தொடர்ந்தும் அணியில் இடம்பிடித்தார்.
அஞ்சலியைத் தனது மனைவியாகக் கரம்பிடித்த சச்சினுக்கு, அர்ஜூன் என்ற மகனும், சாரா என்ற மகளும் உள்ளனர். இவர்களது வரவும் சச்சினுக்கு அதிஷ்டத்தை அள்ளிக்கொடுத்த வண்ணமே இருந்தது. இதனால் இவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக மாத்திரமின்றி சாதனைகளின் சிகரமாகவும் மேலோங்க ஆரம்பித்தார்.
463 ஒருநாள் ஆட்டங்களில் ஆடிய அவர், 18426 ஓட்டங்களைச் சேர்த்திருந்த நிலையில் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி டாக்கவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தையை தனது கடைசி ஆட்டமாக ஆடினார். அத்துடன் அவர் தனது ஓய்வை அறிவித்தார்.
இருபது d 20 ஆட்டங்களைப் பொறுத்தவரையில் இவர், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஜோகனஸ்பார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மாத்திரமே பங்கேற்றார். இதில் அவர் 10 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
டெஸ்ட் தவிர்ந்த ஏனைய வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள சச்சின், தற்போது நடைபெற்றமுடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியுடன் ஓய்வுபெற்றார். முதலாவது ஆட்டத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது ஆட்டம் கடந்த 14ஆம் திகதி மும்பையில் ஆரம்பமாகியது.  இந்தப் போட்டி மூன்றாது நாளிலேயே முடிவடைந்தது. இதிலும் இந்தியா வெற்றியைப்பெற்றது.

பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக் காரரான சச்சினின் ஓய்வு நாளை சிறப்புற நிகழ்த்த இந்தியக் கிரிக்கெட் உலகம் பெருமெடுப்பில் நிகழ்வுகளை ஒருங்கமைத்தது. அவுஸ்திரேலிய ஜாம்பவானான பிரட்மனுக்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின், இந்தப் போட்டியுடன் தனது ஒட்டுமொத்தக் கிரிக்கெட் ஆட்டத்துக்கே முழுக்குப்போட்டதால், கிரிக்கெட் என்ற ஆட்டமும் தனித்துவிடப்படுவதாக ஓர் உணர்வு எழுகின்றது.
இப்பொடியொரு வீரரின் ஆட்டத்தை இனி எப்போது பார்ப்பது? அப்படிப் பார்க்கத்தான் முடியுமா? இவரது ஓய்வுடன் கிரிக்கெட்டின் பரபரப்பும் முடிந்துவிடுமா என்றளவுக்கு இவரது ஓய்வு முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது.
வீரர் என்று ஒருவர் இருந்தால் அவருக்கு ஓய்வு என்ற ஒன்று தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கும். இதுபோலவே சச்சினும் தற்போது ஓய்வு நிலையை எட்டியுள்ளார். 40 வயதான அவர், 23 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடியமையும் பல சாதனைகளைப் பரப்பியமையும் கிரிக்கெட்டுக்குப் பெருமை சேர்க்கும் விடயங்களாகும். இவர் போன்ற ஒரு சிறந்த வீரர் மாத்திரமின்றி ஒழுக்கம் மிக்க மனிதர் ஒருவர் கிடைத்தமையையிட்டு கிரிக்கெட்டும் பெருமைகொள்கிறது.
எது எப்படியோ பனித்த இதயத்தைச் நாம் சாந்தப்படுத்திக்கொண்டு சச்சினின் ஆட்டங்கள் ஓய்ந்தாலும் அவரது கிரிக்கெட்டுடனான உறவு தொடருமென்ற நம்பிக்கையுடன் அவரை வாழ்த்தி வழி அனுப்புவோமாக...

- எஸ்.ஜெயானந்தன் -


No comments:

Post a Comment

Total Pageviews

8,866