Saturday, November 29, 2014

காலனின் விளையாட்டு!


எஸ்.ஜெயானந்தன்

லக விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பரபரப்பான கட்டங்களைக் கடந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தை எந்தளவுக்கு அளிக்கின்றனவோ, அந்தளவுக்கு பரிதாபகரமான சோக நிகழ்வுகளையும் பதியத் தவறுவதில்லை.
அந்தவகையில் ஆசியர்களான எமக்கு மிகவும் பரீட்சயமான விளையாட்டான கிரிக்கெட்டில் சோக நிகழ்வொன்று நடந்துள்ளது.


கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியர்களின் ஆதிக்கம் அண்மைக்காலமாகச் சற்றுக்குறைந்துள்ளபோதும், சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் அசைக்கமுடியாத ஒரு கட்டத்தில் இருந்துள்ளனர். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கு முந்தைய மூன்று தொடர்களில் தொடர்ந்து சம்பியன் பட்டம் வென்றமை அவர்களின் அந்தக் காலகட்ட ஆதிக்கத்தைப் பறைசாற்றவல்லது.
அவர்கள் கையாளும் பந்துவீச்சு முறைமையும் அவர்களது வெற்றிக்கு ஒரு சிறந்த காரணமாக அமைகின்றது. பந்துவீச்சின் ஒரு பகுதியாக வீசப்படும் பந்துவீச்சுத்தான் ‘பௌண்சர்’. இது துடுப்பாட்ட வீரர் ஒருவரின் அதிரடியையோ அல்லது நிதான ஆட்டத்தையோ நிலை குலையச்செய்யவல்லது.
துடுப்பாட்ட வீரரின் தலைப்பகுதியைத் தாக்குவதே இந்தப் பந்துவீச்சின் முக்கிய நோக்கம். மிகவும் ஆபத்து மிகுந்ததாக இந்த முறைமை விளங்குவதால் ஓர் ஓவரில் ஒரு/இரண்டு பந்துகளை மாத்திரமே ‘பௌண்ஸர்’ பந்தாக வீசமுடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் அணிகளுள் இந்தப் பந்துவீச்சுக்குப் பெரிதும் பெயர்போனவர்கள் அவுஸ்திரேலியர்கள்தான். பெரும்பாலும் இந்தப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுபவர்கள் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களாகவே உள்ளனர். ஏனெனில், ஆசிய வீரர்களின் உயரம் ஏனைய கண்டங்களைச் சேர்ந்த வீரர்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆசியர்கள் பௌண்சர் பந்துவீச்சுக்கு இரையாவது வழமை. பெரும்பாலும் அவுஸ்திரேலியர்கள் ஆசியர்களை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தும் மிகவும் உயரிய யுக்திதான் இது.

1932-33இல் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய ஜாம்பவான்  பிராட்மேனைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள், பின்னர் அவரை மிரட்டும் வகையில் பௌண்சர்களை வீசினர். அந்தத் தொடருக்குப் பின்னர்தான் ‘பௌண்சர்’ பிரபலமானது.
1970, 80 களில் மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதை அதிகம் பயன்படுத்தினர். தற்காலத்தில் இந்தப் பந்துவீச்சைக் கையாள்பவர்களாக அவுஸ்திரேலியர்களே அதிகமாகவுள்ளனர்.
இந்தப் பந்துவீச்சின் நோக்கத்தை அவுஸ்திரேலிய வீரர்கள் ஒத்துக்கொண்ட பதிவுகளும் உள்ளன. தற்போது இத்தகைய பந்துவீச்சின் பாதகத்தன்மை அவர்களுக்கே
‘நீங்காத காயத்தை’ ஏற்படுத்தி மோசமான கட்டத்தை அடைந்துள்ளது.


அவுஸ்திரேலியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியான ‘ஷெபீல்ட் ஷீல்ட்’ தொடர் நடந்து வந்தது. இதில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பித்த போட்டி ஒன்றில் தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.
4 நாட்கள் கொண்ட இப்போட்டியின் முதல் நாளில் தெற்கு அவுஸ்திரேலியா, நாணயச் சுழற்சியில் வென்றதுடன் துடுப்பெடுத்தாடவும் தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிலிப் ஹியுஸ் - மார்க் ஹோஸ்கிரவ் ஆகியோர் களமிறங்கினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் இரண்டு சரிந்தபோதும், மறுமுனையில் சலிக்காது நின்று ஆடிய ஹியுஸ், அணி 136 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை, தனது பங்குக்கு 161 பந்துகளை எதிர்கொண்டு 9 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களைச்
சேர்த்திருந்த நிலையில், 48.3ஆவது ஓவரில் எதிரணிப் பந்துவீச்சாளரான சியான் அபாட், அபாரமாக ஓடி வந்து தன்னை வீழ்த்துவதற்கு பௌண்ஸர் பந்துவீச்சை பிரயோகித்ததை உணர்ந்தார். உடனே அதை அடித்து நொறுக்க முற்படுகிறார்.
ஆனால், அவரை ஏமாற்றிய பந்து அவரது தலைக்கவசத்தின் பாதுகாப்பையும் தாண்டி அவரது இடது காதின் அருகே தலையில் தாக்கியது. தாக்குதலுக்கு உள்ளாகிய ஹியுஸ், தனது இடது முழங்காலில் இடதுகையை ஊன்றி
சாய்ந்துவிழாதவாறு நிற்க எத்தனித்தார். எனினும், அவர் நிலை குலைந்து முகம் நிலத்தில் அடிபட கீழே விழுந்தார். அங்கு ஓடிவந்த  வீரர்கள் மற்றும் ஊழியர்கள் முதலுதவிச் சிகிச்சைகளை அளித்து, அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஹியுஸை இவ்வாறு நிலை குலையச்செய்ய வைத்த பந்தை வீசிய சியான் அபாட், மைதானப்பகுதியில் நின்று ஹியுஸை மிகவும் அவதானத்துடன் தூக்கி அனுப்பியதுடன், தன்மீது வெறுப்படைந்தவர்போல அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்.
பின்னர் ‘ஹெலிகாப்டர்’, மூலம் உயர்
சிகிச்சைக்காக செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு ஹியுஸ் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் அங்கு கோமா நிலையில் இருந்துள்ளார். ‘ஸ்கேன்’ செய்யப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவருக்கு  சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. இவரது மூளைக்கு அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க, ஊசிகள் செலுத்தி மருந்துகளின் உதவியுடன் ‘கோமா’ நிலையில் வைக்கப்பட்டார்.
ஹியுஸின் இந்த நிலைமையை அறிந்து உலக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தமது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, அவர் சுகம் பெற பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
எனினும், காலன் அவரை காவு கொள்ளும் தனது முயற்சியைக் கைவிடவில்லை போலும்.
கடந்த 27ஆம் திகதி அவரது உயிர் இந்த உலகை விட்டுப் பிரிந்தது. (கழுத்துப் பகுதியில் பந்து தாக்கியதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார்.)
பந்துத் தாக்குதலுக்கு உள்ளானபோது...
செய்தியறிந்த கிரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியது. அவரது குடும்பத்தினர் கண்ணீர் பெருக்கில் நனைந்து பித்துப்பிடித்தவர்களாயினர்.
சக வீரர்களோ செய்வதறியாது கண்ணீர் மல்கி திகைப்படைந்து நின்றார்கள்.
ஹியுஸுக்குப் பந்துவீசிய சியான் அபாட், மனநிலை பாதிப்புள்ளாகி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறுபவர்களும் ஒருபுறம் இருந்தனர்.
ஹியுஸின் பிரிவையடுத்து நடைபெற்றுக்கொண்டிருந்த அனைத்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கிரிக்கெட் பிரபலங்கள் பலவும் தமது இதய அஞ்சலிகளை கனத்த இதயத்திலிருந்து வெளிப்படுத்தினர். கிரிக்கெட் உலகம் பெரும் மீளாத் துயரில் ஆழ்ந்தது.
சிறுவயது முதல் இறுதிவரை...
ஹியுஸ், தனது 18ஆவது வயதில் (2007) அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான நியூ சௌத் வேல்ல் அணிக்காக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
பின்னர் பல்வேறு உள்ளூர் அணிகளுக்காக விளையாடி வந்த அவர், தனது திறமையான ஆட்டம் மூலம் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி ஜோகனஸ்பேர்க்கில் ஆரம்பித்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார்.
அந்த ஆட்டத்தில் ஆரம்ப வீரராகக் களமிறங்கிய ஹியுஸ், முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் 75 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்தார்.
டெஸ்ட் போட்டியில் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியுள்ள இவர், அவுஸ்திரேலிய அணிக்காக இதுவரை 26 டெஸ்ட்களில் துடுப்பெடுத்தாடி 1,535 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அதேபோல, 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி மேல்பேர்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம், ஒருநாள் அரங்கிற்கு அறிமுகமான அவர், தனது முதலாவது ஆட்டத்திலேயே சதம் (112) அடித்து அசத்தினார்.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக விளையாடிய இவர், இதுவரை மொத்தம் 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 826 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
அதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஒக்டோபரில் அபுதாபியில் நடைபெற்ற ஒரே ஒரு இருபது-20 போட்டியில் விளையாடி 6 ஓட்டங்களைச்
சேர்த்துள்ளார்.
இன்றையதினம் (30ஆம் திகதி) தனது 26ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவிருந்த ஹியுஸ், எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்ததுடன், அடுத்த வருடம் தாய்நாட்டில் (அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து இணைந்து நடத்தும்) நடைபெறவிருந்த ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்பதற்கான ஆர்வத்துடன் காத்திருந்தார்.
எதிர்காலத்தில் அவுஸ்திரோலிய அணியின் முக்கிய - நட்சத்திர வீரராக பிரகாசித்து, எதிரணி வீரர்களின் பந்துவீச்சுகளைத் துவம்சம் செய்து அணிக்கு வெற்றிகளைக் குவிப்பார் என எதிர்பார்ப்பைக் கிளறிவிட்ட ஹியுஸ்,
கடந்த 25ஆம் திகதி சியான் அபாட்டின் கையிலிருந்து எமன் வடிவத்தில் புல்லட்டாகப் பாய்ந்த பந்து பதம் பார்த்த மூன்று தினங்களில் பெரும் ஏமாற்றத்தை மிச்சமாக்கிவிட்டு  காலனிடம் சரணைந்துவிட்டார்.

............
கிரிக்கெட்டில் ஏற்பட்ட விபரீதங்களில் சில...

1933இல் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வுட் வீசிய பந்து தாக்கியதில் அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் பெர்ட் ஓல்டுபீல்டுக்கு மண்டைஓடு உடைந்தது.

1962இல் மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிப்பித்தின் தாக்குதலில் இந்திய அணித்தலைவர் நரி கான்ட்ராக்டருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு 6 நாட்கள் சுயநினைவே இன்றியிருந்து, உயிர் தப்பிய இவர் அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

1975ஆம் ஆண்டு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் லெவர் வீசிய பந்தில் நியூஸிலாந்து வீரர் இவென்
சாட்பீல்டின் (ஹெல்மெட் இல்லை) நெற்றியைத் தாக்கியது. இதில் நாக்கு வெளியே வந்து, மூச்சுத்திணறினார். எனினும், பின்னர் காப்பாற்றப்பட்டார்

1977ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த நூற்றாண்டு கால நினைவு டெஸ்டில் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் பொப் வில்லிஸின் பந்துவீச்சில், அவுஸ்திரேலிய வீரர் ரிக் மெக்கோஸ்கரின் தாடை நொறுங்கியது. எனினும் பின்னர் அவர் 2ஆவது இன்னிங்ஸிற்காக, தலையில் கட்டுபோட்டுக் கொண்டு துடுப்பெடுத்தாடினார்.

1986ஆம் ஆண்டு மே.இ.தீவுகள் பந்துவீச்சாளர் மால்கம் மார்ஷல் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கின் மூக்கு உடைந்தது.

1998ஆம் ஆண்டு பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் மெகராப் அடித்த பந்து, களத்தடுப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய வீரர் ராமன் லம்பாவின் தலையைத் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்று, மூன்று நாட்களின் பின்னர் மரணமடைந்தார்.

1999இல் கொழும்பில் நடைபெற்ற டெஸ்டில் இலங்கையின் மஹேல அடித்த பந்தைப் பிடிப்பதற்காக ஓடி ஒருவருடன் ஒருவர் மோதியதில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்ரீவ்வோர்க் தனது மூக்கையும் ஜோசன் ஹில்லெபியர் தனது வலது காலையும் உடைத்துக்கொண்டனர்.

2002ஆம் ஆண்டு இந்திய வீரர் அனில் கும்பிளே துடுப்பெடுத்தாடிய போது, மே.இ.தீவுகளின் தில்லான் வீசிய பந்தில் முகத்தில் காயமடைந்தார். தாடை எலும்பு உடைந்து ரத்தம் கொட்டியது. அதன் பிறகும் அவர் 20 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு 14 ஓவர்கள் பந்து வீசியதுடன், லாராவின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

2005 ஆஷஸ் தொடரில், இங்கிலாந்தின் ஹார்மிசன் வீசிய ‘பௌன்சர்’ பட்டு அப்போதைய அவுஸ்திரேலிய அணித்தலைவர் பொண்டிங் முகத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

2006இல் ஜோகனஸ்பேர்க்கில் நடைபெற்ற டெஸ்டில் தென்னாபிரிக்காவின் நிடினி வீசிய பௌன்சரில் அவுஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் காது பகுதியில் காயம் அடைந்து, சுருண்டு விழுந்தார்.

2009இல் அவுஸ்திரேலிய வீரரான ஷேர்ன் தைட் வீசிய பந்தில் தென்னாபிரிக்காவின் எபி டி வில்லியர்ஸின் இடுப்பு உடைந்தது.

2012ஆம்ஆண்டு பயிற்சி கிரிக்கெட்டின் போது, பந்து பட்டு ஸ்டம்ப் மீது வைக்கப்பட்டிருந்த பெய்ல்ஸ் குத்தியதில் தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் மார்க் பௌச்சரின் இடது கண் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனது
சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்க வேண்டியதாகி விட்டது.

நடப்பு ஆண்டில் (2014) ஓல்டு டிரபோர்ட் டெஸ்டில், இந்திய வீரர் வருண் ஆரோன் வீசிய பந்து, ஹெல்மெட்டினுள் புகுந்து இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட்டின் மூக்கை உடைத்தது.

நவம்பர் 25ஆம் திகதி நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில், பௌண்சர் பந்து தலையில் பட்டு, மருத்துவமனையில் ‘கோமா’ நிலையில்
சேர்க்கப்பட்ட அவுஸ்திரேலிய வீரரான ஹியுஸ், 3 தினங்கள் கழிந்த நிலையில் (27) மரணமடைந்தார்.

.........
இலங்கைக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஹியுஸ்

இலங்கை அணியுடனான ஆட்டத்தில் சதம் அடித்தபோது
2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் அதேமாதம் 23ஆம்
திகதிவரை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர், 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளைப் பெற்ற அதேவேளை, ஒரு போட்டி காலநிலை சீரின்மையால் முடிவை எட்டமாலே முடிந்தது.
இத்தொடர் மூலம் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக சர்வதேச அரங்கில் களமிறங்கிய ஹியுஸ், அந்தத்தொடரில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற இரண்டு போட்டிகளுக்கும் முக்கிய பங்காற்றி, இரு சதங்களை அடித்ததுடன், ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றிருந்தார்.
இவரது ஆட்டமே இலங்கை அணி, அத்தொடரை வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பத்தைச் சிதறடிக்கக் காரணமாக இருந்தமை
சிறப்பம்சமாகும். ஒருநாள் அரங்கில் அவர் பெற்ற இரு சதங்களும் அத்தொடரில் - இலங்கைக்கு எதிராகப் பெறப்பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது.
..................

பெயர் - பிலிப் ஹியுஸ்
பிறந்தது - 30 நவ. 1988
(நியூ சௌத்வேல்ஸ்)
வயது - 26 (இன்று)
விளையாட்டு - கிரிக்கெட் (துடுப்பாட்டம்)
அணிகள் - அவுஸ்திரேலியா,
அவுஸ்திரேலியா ஏ, கிழக்கு ரொரன்ஸ், ஹம்சியர், மிடில்
செக்ஸ், மும்பை இந்தியன்ஸ், நியூசௌத்வேல்ஸ், தெற்கு அவுஸ்திரேலியா
அறிமுகம் - பெப்.26-மார்ச் 02, 2009 (டெஸ்ட்)
எதிரணி - தெ.ஆ. (ஜோகனஸ்பேர்க்)

டெஸ்ட்
போட்டி ஓட்டம் சிறந்தது 100 50 4 6
   26 1535 160 3 7 199 11
ஒருநாள்
   25 826 138* 2 4 91 5
இருபது-20
   1 6 6 0 0 1 0
விருதுகள்
2009இல் இளம் துடுப்பாட்ட வீரர்
2013இல் அவுஸ்திரேலிய சிறந்த வீரர்

ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எனது கட்டுரையும் பக்கவடிவமைப்பும்


No comments:

Post a Comment

Total Pageviews

8,866