Monday, November 3, 2014

தேசிய விளையாட்டு : மேற்கின் ஆதிக்கமும் வடக்கின் பின்னடைவும்


இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் மாகாணங்களுக் கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டிகளின் 40ஆவது அத்தியாயம் அண்மையில் வட மத்திய மாகாணத்தின் தலைநகராக விளங்கும் அனுராதபுரத்தில் நடைபெற்றுமுடிந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் வீர-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

எதிர்பார்க்கப்பட்டதுபோல போட்டிகளின் இறுதியில் மேல் மாகாணம் முதலிடத்தைப் பிடித்தது. அம்மாகாணம் 75 தங்கங்கள் 54 வெள்ளிகள் மற்றும் 57 வெண்கலங்களை அள்ளிச் சென்றுள்ளது.
அதேவேளை, மத்திய மாகாணம் 37 தங்கங்கள் 38 வெள்ளிகள் மற்றும் 39 வெண்கலங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்க, 24 தங்கங்கள் 21 வெள்ளிகள் மற்றும் 38 வெண்கலங்களைப் பெற்ற வடமேல் மாகாணம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த வரிசையில் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மாகாணங்களான வடக்கு, கிழக்கு என்பன கடைசி இரு இடங்களையே பெற்றுள்ளன.
6 தங்கங்கள் 3 வெள்ளிகள் 16 வெண்கலங்களைப் பெற்ற கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்தைப் பெற, 4 வெள்ளிகள் 10 வெண்கலங்களை மாத்திரமே பெற்ற வடக்கு கடைசி இடத்தைப் (9) பிடித்தது.
அதேவேளை, போட்டிகளை நடத்திய வட மத்திய மாகாணமானது 16 தங்கங்கள், 19 வெள்ளிகள், 37 வெண்கலங்களைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
இப்போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சிறந்த தடகள வீரராக தென்மாகாணத்தைச் சேர்ந்த மஞ்சுள குமார தெரிவுசெய்யப்பட்டார். கடந்த ஆண்டு நாவலப்பிட்டி மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகள் என தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இவரே
சிறந்த தடகள வீரராகத் தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறந்த தடகள வீராங்கனையாக சந்திரிகா சுபாஷனி ரஷ்நாயக்கே தொடர்ந்து இரண்டாவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாகாணங்களில் வட மாகாணம் மாத்திரமே எந்தவொரு தங்கத்தையும் பெறவில்லை.
அந்த மாகாணத்துக்கு தங்கம் கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதைபந்தாட்டம் மற்றும் கோலூன்றிப் பாய்தலில் கூட தங்கம் வெல்லும் வாய்ப்புத் தவறவிடப்பட்டமை வருந்தற்குரியதே.
உதைபந்தாட்டப் போட்டியில் இறுதிவரை முன்னேறிய வட மாகாணம், தென் மாகாணத்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தையே பெறமுடிந்தது.
அதேவேளை, கோலூன்றிப் பாய்தலில் தேசிய ரீதியிலான
சாதனையில் முதலிடத்தில் இருக்கும் இரு வீராங்கனைகளில் ஒருவரான அனித்தா சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும் ஏமாற்றமளித்தார்.
குறித்த போட்டி நடைபெற்ற மைதானப் பகுதியில் பெய்திருந்த மழை காரணமாக அங்கு போட்டியில் சிறப்பாகப் பங்கேற்க முடியாமல் போனதாகவும், அதனால் முதல் மூன்று இடங்களுக்குள் கூட அவரால் இடம்பிடிக்கமுடியவில்லை என அவரது  பயிற்றுநர் ஆதங்கப்பட்டிருந்தார்.
ஒட்டுமொத்தப் போட்டிகளின் அடிப்படையில் பின்னடைவைச் சந்தித்துள்ள வட மாகாணத்துக்கு, அடுத்த வருடம் கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடாகியுள்ள 41ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டக்கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அதேவேளை, பல்வேறு விளையாட்டுக்களில் சாதிக்கக்கூடிய ஏராளமான வீர, வீராங்கனைகள் அங்கு உள்ளனர். எனினும், அவர்களுக்கு உரிய முறையிலான பயிற்சிகள் இன்மையாலும் அதற்குரிய வளங்கள் இல்லாமையாலும் சாதிக்க முடியவில்லை என வட மாகாண விளையாட்டுத்துறை சார்ந்தோர் வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜெயானந்தன்

No comments:

Post a Comment

Total Pageviews

8,866