

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, வீரர்களின் சம்பள ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விளையாடிக்கொண்டிருந்த கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திவிட்டு சென்றது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் இந்தியக் கிரிக்கெட் சபை, இலங்கை அணியுடன் விளையாடுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட இலங்கைக் கிரிக்கெட்
சபை, இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதாக உறுதியளித்தது.
ஏற்கனவே இந்தியக் கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையைத் தணிப்பதற்குச் சரியான தருமாகக் கருதி கிரிக்கெட் சபை எடுத்த இந்த முடிவுக்கு இலங்கை வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. எனிலும், தொடர் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய - இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெறும் இப்போட்டிகள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணிக்கே ஆரம்பமாவதால், பகல்-இரவு ஆட்டங்களாகவே நடைபெறவுள்ளன. முதலாவது ஆட்டம் இன்றாகும். (போட்டி அட்டவணை வரைபடத்தில் தரப்பட்டுள்ளது)
இரு அணிகளும் இதுவரை ஒட்டுமொத்தமாக 144 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 78இலும் இலங்கை 54இலும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்த காலப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது. அதேபோல இந்தியாவில் நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் பார்த்தாலும் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்படுகிறது.
இத்தகைய கடந்த காலப் பெறுபேறுகளுடன் தற்போது களமிறங்கும் இரு அணிகள் குறித்தும் பார்க்கையில்,
இலங்கை அணிக்கு, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க இல்லாதமை பந்துவீச்சுக்குப் பெரும் பின்னடைவாகும். அவர் காயம் காரணமாகப் பங்கேற்கவில்லை. எனினும், துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜோடியுடன் டில்ஷான், மத்யூஸ் ஆகியோரின் அனுபத்துடன் ஏனைய வீரர்களதும் சிறப்பான ஆட்டமும் பலமாக அமையும்.

டோனி இல்லாத இடைவெளி தவிர இந்திய அணியின் துடுப்பாட்டம் உடைக்கமுடியாத பலம்பொருந்தியதாகவே உள்ளது. முரளி விஜய், கோஹ்லி, ரெய்னா, ரஹானே, ஜடேயா, தவான் என அந்த அணியின் துடுப்பாட்ட வரிசை சிறப்பானதாக நீண்டுகொண்டே போகிறது.
பந்துவீச்சிலும் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், வருன் ஆருண், அமித் மிஷ்ரா, ஜடேயா என பலமாகவே உள்ளது.
இன்று ஆரம்பமாகும் இத்தொடரில் இந்திய அணிக்கு, இலங்கையின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்குச் சிரமாக இருக்காது. அதேபோல, இலங்கை அணியும் இந்தியாவின் பந்துவீச்சை ஓரளவுக்குச் சமாளித்து ஆடக்கூடிய நிலையே காணப்படுகிறது.
ஏற்கனவே மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடருக்காகத் தயாராகிருந்த இந்திய அணி, எந்த வகையிலும் இத்தொடருக்காகத் தயாராகத நிலையில் உள்ள இலங்கை அணியை எதிர்கொள்வதாலும், சொந்த மண்ணில் விளையாடுவதாலும் அந்த அணியின் பலம் மேலோங்கிக் காணப்படுகிம் என எதிர்பார்க்கலாம்.
எனினும், இலங்கையின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்து, இத்தகைய எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
எது எப்படியோ இத்தொடர் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டாலும், இரு அணி ரசிகர்களுக்கும் எதிர்பாராமல் கிடைத்த நல்லதோர் விருந்தாக இது அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எஸ்.ஜெயானந்தன்
No comments:
Post a Comment