Monday, November 17, 2014

வழி மாறிய வீரர்

1964ஆம் அண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி இங்கிலாந்தின் கிளவுசெசரில்
பிறந்தவர்தான் டேவிட் வலென்ரைன் லாவ்ரென்ஸ்.
இவர் தனது 24ஆவது வயதில், 25 ஆகஸ்ட் 1988ஆம் ஆண்டு லோட்ஸில் ஆரம்பித்த இலங்கை அணிக்கு எதிரான  டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சாளராகக் களமிறங்கினார்.
பின்னர் மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதியன்று வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு
எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒருநாள் அரங்கிற்கும் அறிமுகமானார்.
எனினும் இவர் விளையாடிய கடைசியும் முதலுமான போட்டியாக இந்த ஆட்டமே அமைந்தது. அதன் பின்னர் அவர் எந்தவொரு ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
அதேவேளை, 1992ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகிய நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே இவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமைந்தது.
அந்தப் போட்டியின் பின்னர், காயம் காரணமாக அவர் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
இவர், அப்போதைய காலகட்டத்தில் 55 ஓவர்களாக நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் விளையாடி 66 பந்துகளை வீசி, 67 ஒட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இங்கிலாந்து அணிசார்பாக இவரே அதிக விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். அந்தப்போட்டியில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை.
அதேவேளை, மொத்தம் 5  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட்,  60 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். அத்துடன் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் 1089 பந்துகளை வீசி 676 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 18 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். இவரது ஓர் இன்னிங்ஸிற்கான சிறந்த பெறுபேறாக 106 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தமையைக் குறிப்பிடலாம்.
இத்தகைய கிரிக்கெட் பெறுபேறுகளுடன் தனது கிரிக்கெட் வாழ்ககையை முடித்துக்கொண்ட டேவிட், பின்னர் சிறிது காலத்தில் தனது பாதையை மாற்றியமைத்தார். அதற்காக அவர் தெரிவுசெய்த விளையாட்டு உடல் கட்டமைப்பு  ஆகும்.
பல்வேறு சம்பியன்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இவர் பல தடவைகள் சம்பியனாகவும் தெரிவாகியுள்ளார். இதுவரை இவர் 40 பட்டங்களை வென்று வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது வயது 50 என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜெயானந்தன்

No comments:

Post a Comment

Total Pageviews

8,866