
இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கான விசாரணைகள் முடியும் தருவாயில் உள்ளமையால், எந்தளவுக்குத் தீர்வு நிலையை அடையும் என்பது குறித்த எதிர்பார்ப்புத்தான் தற்போது மேலோங்கிக் காணப்படுகிறது.
கடந்த மாதத்தின் பிற்பகுதியில் ஊடகங்களில், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் பெண்களை சேர்த்துக்கொள்வதற்கு அதிகாரிகள் ‘பாலியல் லஞ்சத்தை’ கேட்கின்றார்கள் என்றும், அணியில் இடம்பிடித்தவர்களாயினும் அவர்கள் தொடர்ந்தும் தமது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் அத்தகைய இணக்கப்பாட்டுக்கு உட்படவேண்டும் எனவும் சர்ச்சைகளுடன் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதையடுத்து, இலங்கைக் கிரிக்கெட் மட்டத்தில் அவசர கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக இலங்கைக் கிரிக்கெட் சபையின் துணைத்தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, துணைச் செயலாளர் ஹிரந்த பெரேரா ஆகியோருடன் தேசிய அணித் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூர்யா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டது, அவர்களின் விசாரணைகள் எந்தளவுக்குச் சென்றுள்ளன போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகத நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குறித்த சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில் சுயாதீன குழுவொன்றை அமைக்குமாறும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் இலங்கைக் கிரிக்கெட் சபையைப் பணித்திருந்தார்.
அமைச்சரின் பணிப்பின் பேரில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணை கடந்த வாரம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாரத்தின் ஆரம்ப நாட்களில் முடிவுறும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கிடையில், இந்தக் குழுவினால் வழங்கப்படுகின்ற அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகளை அமைச்சர் முன்னெடுப்பார் என்று இலங்கை கிரிக்கெட் சபை விடுத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகள் ஒருபுறமிருக்க, ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி நோக்கில் குறிப்பிட்ட ஒரு சிலரே இத்தகைய அநாகரிக லஞ்சத்தைக் கோரியிருக்கின்றனர் என்பது தெட்டத்தெளிவாகிறது. அதேவேளை, பாதிப்புக்கு உள்ளானவர்கள் சாட்சியம் கூற முன்வரும் பட்சத்திலேயே இது குறித்த விசா ரணைகள் முழுமைபெறும்.
அதேவேளை, பாதிப்புக்குள்ளானவர்கள் முன்வரும் பட்சத்தில் அவர்கள் குறித்த விவரங்களை வெளியே கசியவிடாது இரகசியம் காப்பது மிக முக்கியமான விடயமாக எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் அவ நிலையால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிவிடும்.
அத்துடன், இத்தகைய ‘பாலியல் லஞ்சம் கோரியோர் அடையாளம் காணப்பட்டு அவர்களது முகத்திரையைக் கிழித்து வெளிக்கொணர்வதுடன், அவர்களுக்குரிய தண்டனையையும் கால தாமதமின்றி நிறைவேற்றவேண்டும்.
அத்துடன், ‘பாலியல் லஞ்சம்’ என்ற பதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில்தான் இலங்கைக் கிரிக்கெட் மீது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒரு பிடிப்பு ஏற்படுவதற்கு வழிகோலும். அத்துடன் இலங்கைக் கிரிக்கெட்டும் தனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகத் தொடரமுடியும். நடவடிக்கைகள் தக்கபடி இல்லையேல் பெண்கள் கிரிக்கெட் என்பது வெறும் கனவாகவே கலைந்துபோகவேண்டிய நிலைதான் ஏற்படும்.
எது எப்படியோ, இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் இப்படியொரு
சர்ச்சை நிகழ்ந்திருப்பதானது, இலங்கைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கிரிக்கெட் மீதான இலங்கைப் பெண்களின் ஈடுபாடுகள் குறைவடைந்து விடும் நிலைமையும் ஏற்பட ஏதுவாக அமைந்துவிட்டது என்பதுதான் யதார்த்தம்.
எஸ்.ஜெயானந்தன்
No comments:
Post a Comment