எஸ்.ஜெயானந்தன்
மஹேல போல வருமா?
இலங்கைக் கிரிக்கெட் அணியின் நடப்புக் காலத்தின் இரு தூண்களாக விளங்குபவர்கள் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரே.
இவர்கள் இருவரும் எதிர் அணி வீரர்களுக்கு எப்போதுமே சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள். இதனால் எதிரணிப் பந்துவீச்சாளர்கள் இவர்களை ‘பெவிலியன்’ அனுப்பும் வரை மூச்சுவிட முடியாத நிலை.
அந்த வகையில் மஹேல - சங்கக்கார இருவரும் இணைந்து விளையாடிய ஒவ்வொரு இன்னிங்ஸையும் எவராலும் மறக்க முடியாது. இந்த ஜோடி இணைந்தாலே போதும் அரங்கமே அதிர ஆரம்பிக்கும்.
இந்த ஜோடி தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பெற்றுக்கொண்ட 624 ஓட்டங்களே இன்றுவரை
சிறந்த இணைப்பாட்டமாக விளங்குகின்றமை இந்த ஜோடியின் ஆட்டத்தைப் பறைசாற்றவல்லது.
இத்தகைய சிறப்பு மிக்க ஜோடியாயிருந்த இவர்கள் இருவரும் கடந்த இருபது-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு இருபது-20 போட்டிகளுக்கு விடை கொடுத்தனர்.
இதனால், ஏனைய வகை ஆட்டங்களிலும் (டெஸ்ட்-ஒருநாள்) இவர்கள் தமது நட்புக்கு இலக்கணமாக ஒரே நேரத்திலேயே ஓய்வுபெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இலங்கை அணியின் நலன் கருதி டெஸ்ட் போட்டிகளிலிருந்தான ஓய்வை தனியாகவே அறிவித்து மஹேல, அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிகரமான டெஸ்ட் தொடரையடுத்து ஓய்வும் பெற்றார்.
சங்கக்கார - மஹேல ஜோடி டெஸ்ட் ஆட்டத்தில் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்துகொண்டமை இலங்கைக் கிரிக்கெட்டை மாத்திரமின்றி உலகக் கிரிக்கெட்டையே கண்கலங்க வைத்துவிட்டது.
மஹேலவின் டெஸ்ட் ஓய்வு, அவர் பிடித்த இடத்தில் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது மாத்திரமின்றி, அவருடன் இணைந்து அதிகளவான போட்டிகளில் கலக்கியுள்ள சங்கக்காரவுக்கும் சிறந்த ஜோடியை இழந்த பரிதவிப்பு இல்லாமல் இல்லை. இனிமேல் இலங்கை அணிக்கு இந்த ஜோடிபோல அமைவது அவ்வளவு சுலபமல்ல. இந்த ஜோடியை ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே நாம் இனி பார்க்கமுடியும். அதுவும் குறுகிய கால எல்லைக்குள் மாத்திரமே முடியும்.
மஹேலவின் ஓய்வு குறித்த முடிவை இலங்கைக் கிரிக்கெட் மீது பற்றுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை உள்ளபோதும், இது அவரது சுய விருப்பு என்பதால் அவரின் சிறப்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு மனப்பூர்வமாக வழி அனுப்பி வைப்பதே சிறந்தது.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்றுமுடிந்த இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னரே மஹேல, தனது ஓய்வு குறித்த முடிவை அறிவித்தார்.
இதனால், அவர் விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் இது என்பதால் அவர், காலியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் களமிறங்கியபோது பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. மஹேல முறையே இரு இன்னிங்ஸ்களிலும் 59, 26 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
பின்னர், கடந்த 14தொடக்கம் 18ஆம் திகதி வரை கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழக மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் நடைபெற்றது. இப்போட்டியே மஹேலவின் இறுதி டெஸ்டாகவும் அமைந்தது.
தனது கடைசி ஆட்டத்தில் களமிறங்கிய மஹேல ஜெயவர்தன, அந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் வெறும் 4 ஓட்டங்களைப் பெற்று ஏமாற்றமளித்தபோதும், அடுத்த இன்னிங்ஸில் அரைச்சதம் (54) அடித்து தனது 50ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார்.
தான் அறிமுகமான எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அரைச்சதம் அடித்ததுபோலவே, தற்போதும் கடைசி டெஸ்டிலும் அதே மைதானத்தில் அரைச்சதம் அடித்து வியக்கவைத்தார்.
மஹேலவை வெற்றியுடன் அனுப்பவேண்டும் என்ற இறுமாப்புடன் கடைசி டெஸ்டில் ஆடிய இலங்கை வீரர்கள், தாம் நினைத்தபடியே அதில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அவருக்குச் சமர்ப்பித்தனர்.
மஹேலவின் ஓய்வைக் கௌரவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வகையில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டி நடைபெற்ற எஸ்.எஸ்.சி. மைதானத்துக்கு வருகை தந்து அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கௌரவித்துச் சென்றார்.
இவரது ஓய்வு இவ்வாறிருக்க இவரது கடந்தகால பெறுபேறுகள் குறித்தும் சிறிது பார்க்கலாம்.
1977ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பில் பிறந்த மஹேல, பாடசாலைக் காலத்தில் மிகவும் பிரபல்யமிக்க வீரராகத் திகழ்ந்தார். அப்போது 16 வயதே நிரம்பிய தனது தம்பியைப் பறிகொடுத்த கவலையில் தனது கிரிக்கெட் ஆட்டத்துக்கும் முழுக்குப் போட எண்ணியிருந்தார். எனினும், அவர் சார்ந்தோர் அவர் தொடர்ந்து விளையாடும் வகையில் அவரது மனதை ஆறுதல் படுத்திவைத்தனர்.
பின்னர் தனது ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், பாடசாலைக் காலத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, எஸ்.எஸ்.சி. கழகத்துடன் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.இதன் பயனாக அவருக்கு இலங்கைக் கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைத்தது.
தனது சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை, 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 தொடக்கம் 6ஆம் திகதிவரை கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மூலம் ஆரம்பித்தார். இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸிற்காக மத்திய வரிசையில் களமிறங்கிய இவர் அரைச்சதம் (66) அடித்து அசத்தினார். (இந்த ஆட்டத்தில் இலங்கை அணி பெற்ற 952 ஓட்டங்களே இன்றுவரை டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம் என்ற சாதனையாகவுள்ளது.)
தொடர்ந்து தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி படிப்படியாக வளர்ந்த அவர், இலங்கை அணியின் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்ததுடன், இலங்கை அணியில், எல்லா விதமான போட்டிகளிலும் நிலையான வீரராகவும் இடம்பிடித்தார்.
149 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 252 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள இவர், மொத்தம் 11,814 ஓட்டங்களைச்
சேர்த்துள்ளார். அதில் 34 சதங்கள், 50 அரைச் சதங்கள் அடங்குகின்றன. அத்துடன், 61
சிக்ஸர்கள் மற்றும் 1387 பௌண்டரிகளையும் விளாசியுள்ள இவரின் ஓர் இன்னிங்ஸுக்கான சிறந்த பெறுபேறாக 374 ஓட்டங்களைப் பெற்றமையைக் குறிப்பிடலாம். இவரது ஓட்ட சராசரி 49.84ஆக உள்ளது.
பகுதி நேரப்பந்துவீச்சாளராகவும் அவ்வப்போது செயற்பட்ட இவர் 22 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 589 பந்துகளை வீசி 310 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியமையைக் குறிப்பிடலாம்.
அதேவேளை, டெஸ்ட் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்களைச் (374)
சேர்த்த இலங்கை வீரர்களுள் முதலிடம் வகிக்கும் இவர், சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். எனினும், முதலாவது (400*) மற்றும் மூன்றாவது (375) இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவே உள்ளமையால் வீரர்கள் அடிப்படையில் பார்த்தால் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஒரு மைதானத்தில் கூடுதலான ஓட்டங்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையும் மஹேலவுக்கு உண்டு. இந்த வரிசையில் அவரே முதலிரண்டு இடங்களையும் பிடித்துள்ளார். சிங்கள விளையாட்டுக்கழக மைதானம் (2,867), காலி சர்வதேச மைதானம் (2,382) ஆகிய மைதானங்களிலேயே இவர் கூடுதலான ஓட்டங்களைச் சேர்த்துள்ளார்.
அதிக சதங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் மஹேலவுக்கு 6ஆவது இடம். இவர் 34 சதங்களை விளாசியுள்ளார். அதேவேளை, அதிக இரட்டைச் சதம் அடித்தவர்கள் வரிசையில் நான்காவது இடத்தை இங்கிலாந்தின் ஹம்மண்டுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் 7 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார். முதல் மூன்று இடங்களில் பிரட்மன் (12),
சங்கக்கார (10), லாரா (9) ஆகியோர் உள்ளனர்.
அதேவேளை, ஒருநாள் (11681) மற்றும் டெஸ்ட் (11814) ஆகிய இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 11 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தை மஹேல பிடித்துள்ளார். சச்சின், பொண்டிங், கலிஸ் மற்றும் சங்கக்கார ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்பான பெறுபேறுகளைத் தன்னகத்தை கொண்டுள்ள மஹேல ஜெயர்வர்தனவின் ஓய்வு இலங்கைக் கிரிக்கெட்டுக்கு பெரும் இழப்பாகவே காணப்படுகிறது.
அவரது ஓய்வு இலங்கை ரசிகர்களுக்கு மாத்திரமின்றி சக வீரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. இவரது இடைவெளியை நிரப்ப இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும் என்றால் அதற்கு மாற்றுக் கருத்துக்கூற எவராலும் இயலாது.
முழுப்பெயர் - தெனகமகே பிரோபத் மஹேல டி சில்வா ஜயவர்தன
பிறந்தது - 27 மே 1977 (கொழும்பு)
வயது - 37
அணிகள் - இலங்கை, ஆசிய லெவன் டில்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெபன் பஞ்சாப், கோச்சி டஸ்கர்ஸ் கேரளா, சிங்கள விளையாட்டுக் கழகம், ரினிடாட் அன்ட் டுபாகோ ரெட் ஸ்ரீல், வயம்ப
வகை - துடுப்பாட்டம்
அறிமுகம் - 2-6 ஆகஸ்ட் 1997 கொழும்பு (ஆர்.பி.எஸ்), இந்தியாவுக்கு எதிராக
கடைசி ஆட்டம் - 14-18 ஆகஸ்ட் 2014, கொழும்பு (எஸ்.எஸ்.சி.), பாகிஸ்தானுக்கு எதிராக
விருதுகள்
விஸ்டன் விருது - 2007
ஐ.சி.சி. விருது 2013
துடுப்பாட்டத்தில் (1997-2014)
விளையாடிய போட்டிகள் - 149
இன்னிங்ஸ் - 252
ஓட்டங்கள் - 11814
சராசரி - 49.84
சிறந்த ஆட்டம் - 374
100கள் - 34
50கள் - 50
சிக்ஸர்கள் - 61
பௌண்டரிகள் - 1387
பிடியெடுப்புகள் 205
12 தடவைகள் ஆட்டநாயகன் விருதுகளையும் 2 தடவைகள் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்
டெஸ்டில் பெற்ற ஓட்டங்கள் 11,814
இலங்கையில்
போட்டி 80 (129 இன்.)
ஓட்டம் 7167
வெளிநாடுகளில்
போட்டி-68(123 இன்.)
ஓட்டம் - 4647
கால அடிப்படையில்
காலம் போ ஓ. சராசரி 100/50
2000 வரை 25 1673 44.02 4/8
ஜன.2001-டிச.05 49 3633 49.76 9/19
ஜன.2006-டிச.10 42 4221 63.95 15/11
ஜன.2011-டிச.13 23 1284 29.86 3/7
2014 10 1003 59.00 3/5
மொத்தம் 149 11,814 49.84 34/50
பகுதி நேரப்பந்துவீச்சாளராகவும் அவ்வப்போது செயற்பட்ட இவர் 22 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 589 பந்துகளை வீசி 310 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
அணித்தலைவராக மஹேலவின் பெறுபேறுகள்
அணித்தலைவராக 38 போட்டிகளை வழிநடத்தியுள்ளார்
இலங்கை அணித்தலைவர்களின் செயற்பாடுகள்
வீரர் ஆண்டு போ வெ தோ சமன் சராசரி
சனத் 1999-2002 38 18 12 8 34.41
மஹேல 2006-2013 38 18 12 8 37.11
ரணதுங்க 1989-1999 56 12 19 25 31.56
அத்தப்பத்து 2002-2005 18 8 6 4 34.58
மத்யூஸ் 2013-2014* 13 6 2 5 44.32
சங்கக்கார 2009-2011 15 5 3 7 43.66
ஓர் ஆண்டில் கூடுதல் ஓட்டம் பெற்றோர்
வீரர் ஆண்டு போ ஓட். சராசரி 100/50
பிரட்மன் 1948 8 1025 113.88 5/2
மஹேல 2014 10 1003 59.00 3/5
கூப்பர் 2002 12 896 49.77 3/3
ஜோன் ரெய்ட் 1965 13 871 36.29 1/6
டேரன் லெக்மன் 2004 12 803 40.15 2/6
தாய் மண்ணில் சிறந்த சராசரி (4000 ஓட்டங்களுக்கு மேல்)
வீரர் போ ஓட். சராசரி 100/50
பிரட்மன் 33 4322 98.22 18/10
ஹரி சோபெர்ஸ் 44 4075 66.80 14/12
சங்கக்கார 71 6552 63.61 22/23
கிளார்க் 52 4519 61.90 16/13
மியாண்டட் 60 4481 61.38 14/17
மஹேல 81 7167 59.72 23/34
லாரா 65 6217 58.65 17/26
சந்திரபோல் 76 5825 58.25 18/38
ஒரு மைதானத்தில் கூடுதல் ஓட்டம்
வீரர் மைதானம் போ. ஓட். சராசரி 100/50
மஹேல எஸ்.எஸ்.சி. 27 2921 74.89 11/9
மஹேல காலி 23 2382 70.05 7/12
சங்கக்கார எஸ்.எஸ்.சி. 21 2231 76.93 8/6
கலிஸ் கேப்டவுண் 22 2181 72.70 9/9
கூச் லோட்ஸ் 21 2015 53.02 6/5
சங்கக்கார காலி 21 1808 54.78 7/7
பொண்டிங் அடிலெய்ட் 17 1743 60.10 6/6
பிரட்மன் எம்.சி.ஜி. 11 1671 128.53 9/3
இணைப்பாட்டத்தில் கூடுதல் ஓட்டம் பெற்ற ஜோடி (ஒட்டு மொத்தம்)
வீரர் இன். ஓ. சராசரி 100/50
சச்சின்-டிராவிட் 143 6920 50.51 20/29
மஹேல-சங்ககார 120 6554 56.50 19/27
கிரீனிட்ஸ்-ஹெனெஸ் 148 6482 47.31 16/26
ஹைடன்-லான்செர் 122 6081 51.53 14/28
குக்-ஸ்டிராஸ் 132 5253 40.40 14/21
ஹைடன்-பொண்டிங் 76 4765 67.11 16/22
இணைப்பாட்டத்தில் கூடுதல் ஓட்டம் பெற்ற ஜோடி (ஓர் இன்னிங்ஸ்)
வீரர் ஓட் விக் எதிரணி ஆண்டு
மஹேல-சங்ககார (இல.) 624 3 தெ.ஆ. 2006(எஸ்.எஸ்.சி.)
சனத்-மஹானம(இல.) 576 2 இந்தியா 1997(ஆர்.பி.எஸ்.)
ஜோன்-கிரோச்(நியூஸி.) 467 3 இல. 1991(வெலிங்டன்)
பொன்ஸ்-பிரட்மன்(ஆஸி.) 451 2 இங். 1934(ஓவல்)
நாஸர்-மியாண்டட்(பாக்.) 451 3 இந்தியா 1983(ஹைதராபாத்)
..........................................................................................
ஸ்பெய்னில் ஆரம்பமாகும் கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணம்
‘பிபா’ (ஊஐஆஅ) நடத்தும் 17ஆவது உலகக் கிண்ண கூடைப்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஸ்பெய்னின் மார்ட்டிட் நகரில் ஆரம்பமாகிறது. இத்தொடர் அடுத்த மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறும்.
1950ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர், இவ்வருடம் நடைபெறும் தொடருடன் 17ஆவது அத்தியாயத்தை எட்டுகின்றது.
இதுவரை நடைபெற்ற 16 தொடர்கள் அடிப்படையில் முறையே, ஆர்ஜென்ரீனா(1950), அமெரிக்கா (1954), பிரேஸில் (1959), (1963), சோவியத் ஒன்றியம் (1967), யுகோஸ்லாவியா (1970), சோவியத் ஒன்றியம் (1974), யுகோஸ்லாவியா (1978),
சோவியத் யூனியன் (1982), ஐக்கிய அமெரிக்கா (1986), யுகோஸ்லாவியா (1990), ஐக்கிய அமெரிக்கா (1994), யுகோஸ்லாவியா (1998), (2002), ஸ்பெய்ன் (2006), ஐக்கிய அமெரிக்கா (2010) ஆகிய நாடுகள் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.
யுகோஸ்லாவியா 5 தடவைகள் சம்பியனாகி அதிக தடவைகள் பட்டம் வென்ற நாடாக உள்ளது.
2014ஆம் ஆண்டுக்கான தொடரில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை நான்கு பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தமது பிரிவிலுள்ள ஏனைய அணிகளுடன் மோதும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலை வகிக்கும் தலா 4 அணிகள், ‘16 அணிகள்’ சுற்றுக்கு முன்னேறும். இதில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் (4) அரையிறுக்கு முன்னேறும். பின்னர் அதில் வெற்றிபெறும் இரு அணிகள் இறுதியாட்டத்துக்கு தெரிவாகும். இதிலிருந்து சம்பியன் அணி தெரிவுசெய்யப்படும்.
ஏ
பிரேஸில்
எகிப்து
பிரான்ஸ்
ஈரான்
செர்பியா
ஸ்பெய்ன்
பி
ஆர்ஜென்ரீனா
குரோஷியா
கிறீஸ்
பிலிப்பைன்ஸ்
பூர்டோ ரிகோ
செனகல்
சி
டொமினிக்கன் குடியரசு
பின்லாந்து
நியூஸிலாந்து
துருக்கி
உக்ரைன்
ஐக்கிய அமெரிக்கா
டி
அங்கோலா
அவுஸ்திரேலியா
கொரியா
லித்துவேனியா
மெக்ஸிக்கோ
ஸ்லோவேனியா
.........................................................
2014இன் இறுதி
கிராண்ட்ஸ்லாம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற டென்னிஸ் தொடர்களுள் இறுதியாக நடைபெறும் அமெரிக்க ஓப்பின் தொடர் நாளையதினம் அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. நாளையதினம் ஆரம்பிக்கும் இத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும்.
இத்தொடர் வழமைபோல ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் எனப் பல பிரிவுகளில் நடைபெறும்.
No comments:
Post a Comment