எஸ்.ஜெயானந்தன்
கரப்பந்தாட்டத்தில் வெற்றி நடைபோடும்
இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்
இவ்வருடம் 11 தொடர்களில் பங்கேற்று
9 சம்பியன் பட்டங்களை வென்றது
யாழ். கரப்பந்தாட்டச் சங்கம் நடத்திய நடப்பு ஆண்டுக்கான கரப்பந்தாட்டத் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த ஆண்டுக்கான சம்பியன் நாமத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சூடிக்கொண்டது.
யாழ். மாவட்டத்தில் உள்ள கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரை, யாழ். மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் வருடம் தோறும் நடத்திவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தொடரை கரப்பந்தாட்டச் சங்கம் கடந்த ஜூன் மாதத்தில் ஆரம்பித்தபோதும், கழகங்கள் நடத்தும் உள்ளூர் தொடர்கள் அக்கால கட்டத்தில் குறுக்கிட்டமையால் இம்மாதத்திலேயே முடிக்கக்கூடியதாக இருந்தது.
முதற்கட்டப் போட்டிகள் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்திலும், இறுதிப் போட்டிகள் அச்சுவேலி ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்திலும் நடைபெற்றன.
இக்கரப்பந்தாட்டத் தொடர் ஆண்கள் பிரிவில் ‘ஏ’, ‘பி’ என இரண்டு தரங்களாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட அதேவேளை, பெண்களுக்கான போட்டிகளையும் ஊக்குவிக்குமுகமாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியும் நடைபெற்றது.
‘ஏ’ பிரிவில், ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம், ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம், புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழகம், அச்சுவேலை விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
முதல் கட்ட சுற்றுப் போட்டிகளின் முடிவில் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகமும் மத்திய விளையாட்டுக்கழகமும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.
அச்சுவேலி ஸ்டார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில், அபாரமாக ஆடிய இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் 3-0 என்ற கணக்கில் மத்திய விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி 2014இன் யாழ். மாவாட்ட சம்பியன் அணியாகத் தெரிவுசெய்யப்பட்டது.
இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் கபிலக்ஷன் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதே அணியைச் சேர்ந்த நிதர்ச்சிக்கு சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டது.
யாழ். உள்ளூர் அணிகளுக்கிடையில் நடத்தப்படும் பெரும்பாலான இறுதியாட்டங்களுக்கு ஆவரங்காலைச் சேர்ந்த இவ்விரு அணிகளுமே தெரிவாகின்ற அதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை உள்ளூர் கழகங்கள் மற்றும் கரப்பந்தாட்டச் சங்கத்தின் இத்தொடருடன் சேர்ந்து மொத்தம் 11 தொடர்களில் பங்கேற்ற இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் 9 போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, 20 அணிகள் பங்கேற்ற ‘பி’ பிரிவுக்கான தொடரின் இறுதியாட்டத்தில், மானிப்பாய் வசந்த சிறி விளையாட்டுக்கழகம் 3-1 என்ற சுற்றுக் கணக்கில் அச்சுவேலி, தோப்பு கலைமகள் விளையாட்டுக்கழகத்தை வென்றது.
பெண்களுக்கான பிரிவில் பங்கேற்ற யாழ். பல்கலைக்கழக அணி 2-1 என்ற சுற்றுக்கணக்கில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தை வென்றது.
.......................
கொடி கட்டிப் பறக்கும்
யாழ். பல்கலைக்கழகம்
யாழ். பல்கலைக்கழகத்தால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் சம்பியன் பட்டத்தை யாழ். பல்கலைக்கழக அணியினர் கைப்பற்றினர். அத்துடன் நடப்புச் சம்பியனாகக் களமிறங்கிய அவ்வணியினர் இரண்டாவது வருடமாகவும் சம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக்கொண்டனர்.
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமிடையில் உதைபந்தாட்டத் தொடர் வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டுக்கான தொடரை அண்மையில் யாழ். பல்கலைக்கழகம் நடத்தியது. இதற்கான ஏற்பாட்டை யாழ். பல்கலைக்கழக உடற்கல்விப் பிரிவினர் செய்திருந்தனர். இப்போட்டிகள் யாழ். பல்கலைக்கழக மைதானம் மற்றும் யாழ்ப்பாணக்கல்லூரி மைதானங்களில் நடைபெற்றன.
மொத்தம் 14 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதியாட்டத்தில் யாழ். பல்கலைக்கழக அணி, தென்கிழக்குப் பல்கலைக்கழக அணியை எதிர்கொண்டது.
இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து மல்லுக்கட்டின. எனினும், யாழ். பல்கலைக்கழக அணியின் கையே முதல் பாதியில் ஓங்கியிருந்தது.
யாழ். பல்கலைக்கழக முன்கள வீரரான ஞானரூபன் தனக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களில் இரண்டை (4 மற்றும் 20ஆவது நிமிடங்களில்) தனக்குச் சாதகமாக அமைத்துகொண்டு எதிரணியின் கோல் கம்பங்களுக்கிடையில் பந்தை உதைத்து இரண்டு கோல்களை தனது அணிக்காகப் போட்டார்.
முதல் பாதி முடிவில் யாழ். பல்கலைக்கழக அணி 2-0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலை பெற்றமையால், பிற்பாதியிலும் கோல்கள் விழக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், பிற்பாதியில் இரு அணிகளாலும் கோல் எதுவும் போடமுடியவில்லை. இதனால், யாழ். பல்கலைக்கழக அணி 2-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. அதேவேளை, கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டியில் வென்ற சம்பியன் பட்டத்தையும் தக்கவைத்துக்கொண்டது.
இத்தொடரில் யாழ். பல்கலைக்கழக அணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய ஞான ரூபன், இறுதியாட்டத்தின் நாயகன் மற்றும் தொடரின் நாயகன் என இரு பட்டங்களை வென்று அசத்தினார்.
ஏற்கனவே 10 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள யாழ். பல்கலைக்கழக அணிக்கு இது 11ஆவது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டே புகழ்பெற்ற விளையாட்டாக உள்ளது. எனினும், யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் உதைபந்தாட்டத்துக்கே ‘மவுசு’ அதிகம். இதற்கு எடுத்துக்காட்டாக யாழ். பல்கலைக்கழக அணியினர் தேடித்தரும் வெற்றிகள் அமைகின்றன.
1977ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றுவரும் யாழ். பல்கலைக்கழக அணி, அவ்வப்போது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல போட்டிகளில் பங்கேற்றவில்லை. எனினும், தாம் பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளையை வெளிப்படுத்தியுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் நடைபெறும் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றுவரும் யாழ். பல்கலைக்கழக அணியினர் வெற்றிகளைப் பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடற்குரியது.
யாழ். பல்கலைக்கழக அணியின் பெறுபேறுகள்
ஆண்டு இ ட ம்
1977 3
1979 1
1980 1
1982 3
1992 1
1995 1
1998 1
2001 1
2004 3
2005 1
2009 1
2010 2
2011 1
2012 3
2013 1
2014 1
No comments:
Post a Comment