Tuesday, October 7, 2014


இந்தியா-மே.இ.தீவுகள் 
மோதும் கிரிக்கெட் சமர்!

மூன்று வகைப் போட்டிகளிலும் பலப்பரீட்சை
ஒருநாள் தொடர் எட்டாம் திகதி ஆரம்பம்

ந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் எட்டாம் திகதி முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய ‘ஏ’ அணியுடன் நேற்றுமுன்தினம் பயிற்சிப் போட்டி ஒன்றில் விளையாடியது. இரண்டாவது பயிற்சியாட்டம் இன்று நடைபெறுகிறது.
இப்பயிற்சியாட்டங்களையடுத்து எதிர்வரும் எட்டாம் திகதி முதல் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 5 ஒருநாள் போட்டிகள், ஒரு ‘இருபது-20’ போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றமையால், ஒருநாள் போட்டிகள் குறித்து பார்ப்போம்.
முதலாவது ஒருநாள் ஆட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி பகல் - இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் ஆட்டம் ஆரம்பிக்கிறது. ஏனைய நான்கு ஒருநாள் ஆட்டங்களும் முதலாவது ஆட்டத்தைப் போலவே பகல்-இரவு ஆட்டமாகவே நடைபெறும். இந்த 4 ஆட்டங்கள் முறையே 11, 14, 17, 20ஆம் திகதிகளில் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நடைபெறும்.
ஒருநாள் ஆட்டங்களைப் பொறுத்தவரையில் இரு அணிகளும், 1979ஆம் ஆண்டுமுதல் ஒன்றை ஒன்று எதிர்த்து ஆடிவருகின்றன. இதுவரை 112 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கமே மேலோங்கிக் காணப்படுகிறது. அந்த அணி 59 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா 50 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஓர் ஆட்டம் சமநிலையிலும், இரு ஆட்டங்கள் முடிவின்றியும் முடிந்தன.
தற்போதைய போட்டிகள் இந்தியாவில் நடைபெற வுள்ளமையால் இந்தியாவில் இரு அணிகளும் மோதிய போட்டிகள் அடிப்படையில் பார்த்தாலும் மேற்கிந்தியத் தீவுகளின் கையே ஓங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 47 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் 25 போட்டிகளிலும் இந்தியா 22 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இரு அணிகளுக்குமி டையிலான போட்டிகளின் ஆரம்ப காலத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. எனினும், அண்மைக்காலமாக இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது.
இந்திய அணியின் பலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் மேற்கிந்தியத் தீவுகள் இல்லை என்றபோதிலும், அந்த அணியில் உள்ள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணரக்கூடிய வீரர்கள் என்பதால், அந்த அணியால் இந்திய அணிக்கு சவால் விடுக்கக்கூடிய பலம் உள்ளது. அதேவேளை, அந்த அணியில் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இல்லாதமை அந்த அணிக்கு பெரும் பாதிப்பாகவே இருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்- டுவைன் பிராவோ (அணித்தலைவர்), டேரன் பிராவோ, ஹோல்டர், லியான் ஜோன்சன், சுனில் நரைன், போலார்ட், ராம்டின், ராம்போல், கீமர் ரோச், ரசல், டேரன் சமி, சாமுவேல்ஸ், சைமன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.
(இந்தப் பத்தி எழுதப்படும்போது விளையாடவுள்ள இந்திய அணியின் விவரம் எதுவும் அறிவிக்கப்பட்டிருக்க வில்லை.)

எஸ்.ஜெயானந்தன்

...................

ஆசியாவில் 
ஓர் அதிசயம்


லீ நா
லக விளையாட்டுக்கள் அனைத்திலும் வெற்றிகளைக் குவித்துவரும் சீனாவுக்கு, உதைபந்தாட்டம், கிரிக்கெட், டென்னிஸ் ஆகிய உலகப் பிரசித்தம் பெற்ற போட்டிகளில் பெரு வெற்றிகளைப் பெறுவது கடினமானதாகவே கடந்த காலங்களில் இருந்து வந்தது.
இன்றும் உதைபந்தாட்டம், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களில் ஜொலிக்க முடியாதபோதும், டென்னிஸ் போட்டிகளில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி, சீனாவின் பெயரை டென்னிஸ் உலகில் பொறித்து வைத்தவர் என்றால் அது லீ நாவையே சாரும்.
1982ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி சீனாவின் குபேயில் பிறந்தவர்தான் லீ நா.
விளையாட்டில் உலகளவில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவில் பிறந்தபடியால் லீ நாவுக்கும் விளையாட்டில் ஆர்வம் தொற்றியது. இதன் விளைவாக 8 வயதில் பட்மிண்டன் வீராங்கனையாக உருவெடுத்தார். எனினும். ஜியா ஜியாவோ என்பவர் அவரின் போக்கை மாற்றி டென்னிஸ் விளையாடப் பணித்தார்.
அதன்பின்னர் டென்னிஸ் மட்டையைப் பிடித்த அவர், 1999ஆம் ஆண்டுமுதல் சர்வதேச அளவிலான போட்டிகளில் களமிறங்கினார்.
எனினும், 2002 ஏப்ரல் தொடக்கம் 2004 மே வரையான காலத்தில் ஓய்விலிருந்த லீ நா, மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். தீவிர பயிற்சிகளிலும் பல போட்டிகளிலும் பங்கேற்று தனது ஆட்டத்தை மேம்படித்திய நா லீ, தனது உழைப்புக்குக் கிடைத்த முதல் முன்னேற்றமாக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் காலிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்று தனது
சிறப்பிடத்தைப் பதிவு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறி புது நம்பிக்கையளித்தார்.
பின்னர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ் ஓப்பின் பட்டத்தை வென்று ஆசியக் கண்டத்திலேயே புதியதொரு சரித்திரம் படைத்தார். இந்த வரலாற்று வெற்றியையடுத்து ஆசியக் கண்டம் மாத்திரமின்றி முழு உலகமுமே இவர் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது.
தனது வெற்றிப் பயணத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2014) ஆரம்பத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓப்பின் டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்து, டென்னிஸ் வரலாற்றில் தனது சிறந்த இடத்தைப் பரிணமித்து பதிவேற்றினார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துப் பெற்ற நான்கு தொடர்களில் பிரெஞ் ஓப்பின் (2011), அவுஸ்திரேலிய ஓப்பின் (2014) ஆகியவற்றில் சம்பியன் பட்டங்களை வென்ற இவரால், விம்பிள்டனில் (2006, 2010, 2013) காலிறுதிக்கும், அமெரிக்க ஓப்பினில் (2013) அரையிறுதிக்குமே முன்னேற முடிந்தது.
தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால் முழங்காலில் ஏற்படும் காயத்தின் வலியைக் குறைத்துக் கொள்வதற்காக கறுப்புப் பட்டையை அணிந்து விளையாடி வந்த லீ நா, அண்மையில் நடைபெற்றுமுடிந்த அமெரிக்க ஓப்பினில் காயத்தின் உக்கிரம் காரணமாக விளையாடாமலே தவிர்த்தார்.
தொடர்ந் தும் காயம் வதைத்தெடுக்க, உடல் அவரை வருத்தியது. இதன் விளைவாக டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் முடிவை அவசர அவசரமாக எடுத்த அவர், கடந்த மாத இறுதியில் டென்னிஸ் ஆட்டத்துக்கு முழுக்குப் போட்டார்.
ஆசியாவுக்கே பெருமை சேர்த்த லீ நாவின் ஓய்வால் ஆசியக் கண்டம், இனியொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நுகரும் வாய்ப்புக் குறித்து பேச முடியாமல் வாயடைத்துப் போயுள்ளது.
இவரது கடந்தகால சிறப்பான பெறுபேறுகளைக் கௌரவிக்கும் பொருட்டு, சீனாவில் நடைபெற்றுவரும் டென்னிஸ் தொடரின்போது அவர் கௌரவிக்கப்பட்டார்.
எது எப்படியோ, இவரது ஓய்வு ஆசியக்கண்டத்திலே பெரியதொரு இடைவெளியை இட்டுச் சென்றுள்ளது என்றால் அது மிகையில்லை.

எஸ்.ஜெயானந்தன்
..................

ட்ராகன் பாலே

வேல்ஸின் நட்சத்திர உதைபந்தாட்ட வீரராகத் திகழ்பவர் ஹேரத் பாலே. இவர் கடந்த வருடம் ஸ்பெய்னின் உள்ளூர் கழகமான ரியல் மார்டிட்டுன் இணைந்தார். இதே அணியில்தான் போர்த்துக்கல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விளையாடி வருகிறார்.
தற்போது ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் ‘லா லீகா’ உதைபந்தாட்டத் தொடரில் ரியல் மார்டிட் அணி சார்பாகப் பங்கேற்றுவரும் பாலே, இனிவரும் போட்டிகளில் தான் அணிந்து விளையாடப்போகும் ‘காலணி’களை (பூட்ஸ்) வித்தியாசமானதாகத் தெரிவுசெய்துள்ளார். இந்தத் தகவலை அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜப்பானின் யோக்ஜி யமமோரோ என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காலணிகள், ட்ராகன் (ஞீணூச்ஞ்ணிண) ஒன்றை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இடது பக்கக் காலணி பச்சை நிறத்தைப் பிரதானமாகவும் அதேபோல வலது பக்க காலணி நீல நிறத்தைப் பிரதானமாகவும் கொண்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலணிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பாலே, ‘இனிவரும் போட்டிகளில் மேலும் மேலும் கோல்களைப் போட எனக்கு இந்தக் காலணிகள் மிகவும் துணையாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
................

சாதனைகளைத் தகர்த்து சரித்திரம்படைத்த
மகாஜனாக் கல்லூரி மாணவி அனித்தா!

கில இலங்கைப் பாடசாலைகளுக் கிடையிலான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான கே.அனித்தா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நான்கு கட்டங்களாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவருகின்றன.
மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், நான்காம் கட்டமாக தடகளப் போட்டிகள் தற்போது சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றன.
இதில், 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் வட மாகாணம்
சார்பாகப் பங்கேற்ற தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி மாணவியான கே. அனித்தா, அனைத்துச் சாதனைப் படிகளையும் உடைத்து 3.32 மீற்றர் வரையான உயரத்தைக் கடந்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் ஏற்கனவே (2013) அருணாதயாக் கல்லூரி மாணவியான பவித்திராவால் நிகழ்த்தப்பட்ட 3.1 மீற்றர் என்ற
சாதனையையே அனித்தா முறியடித்துள்ளார். இதுமாத்திரமின்றி திறந்த - தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கடற்படையைச்
சேர்ந்த பி.ஏ.அனோமா கருணோவத்த நிகழ்த்திய சாதனையான 3.31 மீற்றர் என்ற உன்னத சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய தற்போது அகில இலங்கை ரீதியில் கோலூன்றிப் பாய்தலில் முதல் நிலை - சாதனை
வீராங்கனையாக திகழ்கின்ற  அனித்தா, கடந்த வருடம் 18 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866