சுழல் பந்துவீச்சை
அச்சுறுத்தும்
15'
உலகக் கிரிக்கெட்டில் அன்று முதல் இன்றுவரை பல்வேறு சர்ச்சைகளும் தடைகளும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால், அண்மைக் காலமாக கிரிக்கெட்டில் ஜொலிக்கும் முன்னணிப் பந்துவீச்சாளர்கள், எதிர்பாராத வகையில் திடீரென தடைசெய்யப்படும் அளவுக்கு, முறை தவறி பந்தை எறிகின்றனர் என்ற விவகாரம் சூடு பிடித்துள்ளது.
15 டிகிரிக்கு அதிகமாக முழங்கையை வளைத்துப் பந்துவீசுவது முறையற்றது என்பது ஐ.சி.சி.யின் விதி. இந்த 15 டிகிரி விவகாரம்தான் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எப்போதுமே கேடாக அமைகின்றது.


எனினும், அவர் மீதான சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் அவரது ஓய்வுக்குப் பின்னரும் அவரை விட்டபாடாக இல்லை. 1995-96இல் மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்டில், கிரிக்கெட்டின் சர்ச்சைக்குரிய நடுவரான அவுஸ்திரேலியாவின் டேரல் ஹேர், முரளிதரன் பந்தை எறிவதாக முதன் முறையாக குற்றஞ்சுமத்தினார். அதன் பின்னர் பல்வேறுபட்ட காலகட்டத்தில் பல்வேறுபட்ட
சோதனைகளின்போது தன்னை சரியான முறையில் முரளி நிரூபித்திருந்தார்.
மீண்டும் தற்போது அதே ஹேர், ‘பந்துவீச்சு என்ற பெயரில் பந்தை எறிபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, 1995இல் ஐ.சி.சி.க்கு வாய்ப்பு வந்தது. எனினும் அப்போது தவறவிட்டுவிட்டது. ஆனால் தற்போது 20 ஆண்டுகள் கழித்து, அத்தகையவர்களை போட்டிகளிலிருந்து வெளியேற்ற முன்வந்துள்ளது.
இந்த தாமதமான செயல் காரணமாக, முரளிதரன், சக்லைன் முஸ்டாக் (பாகிஸ்தான்), ஹர்பஜன் ஆகியோரைப் பார்த்து, ஒரு தலைமுறையே பந்தை எறியத் தொடங்கி விட்டது என தனது ஒன்றுக்கும் உதவாத பழைய பல்லவியைப் பாடியுள்ளார். இதற்கு தக்க பதிலடியை ஹர்பஜன் சிங்உடனடியாகவே கொடுத்துவிட்டார்.
ஹர்பஜன் சிங் மீதும் கடந்த காலங்களில் பந்துவீச்சு முறைமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் அவரும் தனது திறமையை நிரூபித்திருந்தவர்.
தற்போது கடந்த ஒரு வருடத்துக்குள் ஐ.சி.சி. கடுமையாக நடந்துகொள்வது போன்றதொரு தோற்றப்பாடு வெளிக்கொணரப்பட்டுள்ளது.
ஏனெனில், அண்மையில் சில பந்துவீச்சாளர்கள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீதான தடையும் உடனடியாகவே அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் அதுவும் கடந்த மூன்று மாதங்களுக்குள் 6 சுழல்பந்துவீச்சாளர்கள் சோதனையை எதிர்கொண்டுள்ளனர்.
அதன்படி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ட்ரினிடாடில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது நியூஸிலாந்தின் வில்லியம்சனின் பந்துவீச்சு குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டதன் விளைவாக, கார்டிஃவ் மெட்ரோபொலிட்டான் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அவரது பந்துவீச்சில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு தடைக்கும் உள்ளாக்கப்பட்டார்.
அதேபோல, பந்தை வீசி எறிகின்றனர் என குற்றஞ்சாட்டப்பட்டு பங்களாதேஷ் அணியின் சொஹாக் காஷி, சிம்பாவே கிரிக்கெட் அணியின் வீரர் ப்ரோஸ்பர் உட்செயா ஆகியோர் மீதும் சர்வதேசக் கிரிக்கெட்
சபை அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களது பந்துவீச்சுக்கும் தடை விதித்தது.
அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் போட்டியின்போது
சொஹாக் காஷி விதிமுறைகளை தாண்டி பந்து வீசுகின்றார் என நடுவர்களால் குற்றம் சுமத்தப்பட்டது.
அதேபோல, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியின்போது சிம்பாப்வேயின் ப்ரோஸ்பர் உட்செயா விதிமுறைகளை தாண்டி பந்து வீசுகின்றார் எனவும் நடுவர்களால் குற்றஞ்சுமத்தப்பட்டதன் விளைவாகவே அவர்கள் மீது தடைபோட நேர்ந்தது.
இந்நிலையில், நடப்புக் கால கட்டத்தில் உலகின் முன்னிலை சுழல் பந்துவீச்சாளராக விளங்கிவந்த பாகிஸ்தானின் சைத் அஜ்மல் மீதும் பந்துவீச்சுக் குறைபாடு உள்ளதாக குற்ற ஏவுகணை பாய, கிரிக்கெட் அரங்கில் பந்துவீச்சு விவகாரம் பரபரப்பை எட்டியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின்போதே அஜ்மல் மீதான குற்றச்சாட்டை நடுவர்கள் எழுப்பினர். பின்னர் கடந்த மாதம் ஆரம்பத்தில் இயந்திர தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டபோது, அவரது பந்துவீச்சுக்குத் தடைபோடும் முடிவு வந்ததது. இதனால், அவருக்கும் பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
முன்னணி வீரரான இவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்டில் ஐந்தாவது இடத்திலும் இருபது-20இல் பத்தாவது இடத்திலும் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக
சிறந்த பெறுபேறுகளை அண்மைக் காலமாகப் பதிவுசெய்து வருபவர் மேற்கிந்தியத் தீவுகளின் சுழல் பந்துவீச்சாளரான சுனில் நரைன். இவரும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த உள்ளூர் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் இருபது-20 தொடரின்போது பந்துவீச்சு முறைமை குறித்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற டொல்பின்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி
சார்பாக பந்துவீசியபோதே அவர் மீது போட்டி நடுவர்கள் சந்தேகம் வெளியிட்டனர். இதையடுத்து எஞ்சிய போட்டிகளில் அவருக்குப் பந்துவீசத் தடை விதிக்கப்பட்டது. சம்பியன்ஸ் லீக் போட்டிகள் இந்தியக் கிரிக்கெட் சபையின் வழிநடத்துதலில் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படலாம் என்ற ஐயம் காரணமாக தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாட அவர்
சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அவர் தனது பந்துவீச்சு முறைமையை சரிசெய்த பின்னர் அணியுடன் இணைந்துகொள்வார்.
இவர் மீது இதுவரை சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கீழ் நடைபெறும் போட்டிகளில் குற்றச்சாட்டுகள் எதுவும் எழுப்பப்படாமையால் போட்டித் தடை மற்றும் பரிசோதனைகளுக்கும் இவர் உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அத்துடன், ஐ.பி.எல். தொடரிலும் இவரது பெறுபேறுகள் சிறப்பான இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும்.
மொத்தத்தில் மேற்குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில், ஐ.சி.சி. அண்மைக்காலமாக குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை புலனாகின்றது. அது கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் சர்வதேச விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு பந்துவீசக்கூடிய சிறந்த வீரர்களை உருவாக்க உதவும் செயற்பாடாகும்.
அதேவேளை, பந்துவீச்சாளர்களின் தவறைக் கண்டுபிடிக்கும் பட்சத்தில் ஐ.சி.சி., உடனடியாகவே தடை உத்தரவை விடுக்கும் அதேவேளை, தடைக்குள்ளான வீரர்கள் தமது பந்துவீச்சு முறைமையை மாற்றி விதிகளுக்கு அமைவாக வீசும் பட்சத்தில் மீண்டும் பந்துவீச அனுமதிக்கின்றமை, வீரர்கள் தமது தவறுகளை திருத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே அமைகின்றது.
அந்த வகையில், கடந்த இங்கிலாந்துத் தொடரின்போது பந்துவீச்சு முறைமை தவறானது என்பது நிரூபிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் சசித்திர சேன நாயக்க, தற்போது தனது பந்துவீச்சு முறைமையை மாற்றியமைத்து விதிகளுக்கமைய பந்துவீசுவதால் அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபை அனுமதித்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதியையும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு வீரர்களும் தமது கிரிக்கெட்
சபைகளின் வழிநடத்தலின்படி தமது பந்துவீச்சுப் பாணியைத் திருத்தியமைத்து மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுழல் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சில சமயங்களில் வீரர்களின் பந்துவீச்சு முறைமை அவர்களை அறியாமலேயே மாறிவிடுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. எனினும், அவர்களது தவறுகளைத் திருத்தியமைப்பது சம்பந்தப்பட்ட வீரர்களதும் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் சபைகளின் கடமையாகும். அவை தவறும் பட்சத்தில் ஐ.சி.சி.யின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உட்பட்டே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வேகப்பந்துவீச்சாளர்களும் இத்தகைய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றபோதும், அண்மைக்காலமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கே 15 டிகிரி விவகாரம் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது.
எஸ்.ஜெயானந்தன்
..................
தேசிய மட்டத்தில் அருணோதயாக் கல்லூரி சாதிப்பு; அதிபர் பாராட்டு
அண்மையில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக்குவித்த வடமாகாணத்தைச் சேர்ந்த அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் மாணவர்களுக்கு அதிபர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மட்ட போட்டிகளில் வடமாகாணம் பெற்றுக்கொண்ட 9 தங்கப்பதக்கங்களில் 4 தங்கப்பதக்கங்களையும், 9 வெள்ளிப்பதக்கங்களில் 3 வெள்ளிப்பதக்கங்களையும் 4 வெண்கலப்பதக்கங்களில் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்றதுடன் வர்ண விருது ஒன்றையும் அருணோதயக்கல்லூரி பெற்றது.
அதேவேளை, வடமாகாணம் 189 புள்ளிகளைப்பெற்று 5ஆம் இடத்தினை பெற்று மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தமைப்பு அருணோதயாக்கல்லூரி பெற்றுக்கொடுத்த 78 புள்ளிகளும் காரணமாக அமைகின்றன. அருணோதயாக் கல்லூரி வரலாற்றில் கோலூன்றிப்பாய்தலில் 4 தங்கப்பதக்கங்களை ஒரே தடவையில் பெற்றுக்கொண்டதும் இதுவே முதற்தடவை ஆகும்.
இச்சாதனைகளை படைத்த மாணவர்களையே கல்லூரி அதிபர் வாழ்த்தியுள்ளார். அத்துடன், டன் இவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி பொறுப்பாசிரியர்த.பாகீஸ்வரன் மற்றும் மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் சென்று ஊக்கமளித்த ஆசிரியர்கள் மற்றும் பழையமாணவர்களான ம.கபிலன், திருமதி.க.கிருபானந்தன், செல்வி. செ.சிவசோதி, ந.சுகுனேந்திரன் ஆகியோருக்கும் அதிபர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பதக்கங்களை வென்றோர் விவரம்-
க.நப்தலிஜொய்சன் - 17 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் 3.90 மீற்றர் (தங்கம்)
மோ. தனிஸ் 17 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் 3.30 மீற்றர் (நிறவிருது)
ப.சாத்வீகா 17 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப்பாய்தல் 2.60 மீற்றர் (தங்கம்)
எஸ்.மேரிநிலக்சனா 17 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப்பாய்தல் 2.35 மீற்றர் (வெண்கலம்)
பா.நிதுசன் 19 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் 4.05 மீற்றர் (தங்கம்)
ம.சாள்ஸ் அன்ரனி 19 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் 3.95 மீற்றர் (வெள்ளி)
பா.லவணன் 21 வயதுப்பிரிவு ஆண்கள் கோலூன்றிப்பாய்தல் 3.85 மீற்றர் (வெள்ளி)
அ.பவித்திரா 21 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப்பாய்தல் 3.17 மீற்றர் (தங்கம்)
ஐ.மேரிபவுஸ்தீனா 21 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றிப்பாய்தல் 2.85 மீற்றர்
(வெள்ளி)
No comments:
Post a Comment