Monday, October 27, 2014

அனுசரணைகள் கிடைத்தால்
சர்வதேச ரீதியிலும் சாதிக்கலாம்

கே.அனித்தா
ண்மையில் நடைபெற்றுமுடிந்த அகில இலங்கைப் பாடசாலை களுக்கிடையிலான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான கே.அனித்தா, பாடசாலை ரீதியில் சாதனை ஒன்றைப் படைத்ததுடன், தேசிய ரீதியில் திறந்த போட்டிகளில் கடற்படையைச் சேர்ந்த பி.ஏ.அனோமா கருணோவத்த நிகழ்த்திய சாதனையான 3.31 மீற்றர் என்ற உன்னத சாதனையையும் சமநிலைப்படுத்தியிருந்தார்.

குடும்ப மாத வருமானமாக வெறும் ஐயாயிரம் ரூபாவையே பெறும் குடும்பத்தில் ஒருவராக உள்ள 17 வயதேயான அனித்தா, தேசிய ரீதியில் கோலூன்றிப் பாய்தலில் தற்போது முதலிடத்தில் உள்ள இரு வீராங்கனைகளில் ஒருவராக உள்ளார்.
அத்துடன், நேற்றையதினம் அனுராதபுரத்தில் ஆரம்பமாகிய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் முனைப்பில் தயாராகிக் கொண்டிருந்த அவரிடம், அவரது கடந்தகால  சாதனை குறித்தும் எதிர்கால இலக்குகள் குறித்தும் வினவியபோது அவர் கூறியவை வருமாறு-

கே-கோலூன்றிப் பாய்தலில் ஆர்வம் எப்படி வந்தது? அதற்கு யாரேனும் தூண்டுதலாக இருந்தார்களா?
ப- யாழ்ப்பாணம், மகாஜனாக் கல்லூரியில் தரம் 06 இலிருந்து கல்வி கற்றுவரும் நான், சிறுவயதில் 100 மீற்றர், 200 மீற்றர் சட்டவேலி, நீளம் பாய்தல், ஈட்டி எறிதல் போன்ற மெய்வல்லுநர் போட்டிகளில் ஈடுபட்டுவந்தேன். 2012ஆம் ஆண்டில் எமது கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராகக் கடமைபுரிந்த கமலமோகனின் வழிகாட்டலில் முதன்முதலாக கோலூன்றிப் பாய்தலுக்காக பயிற்சிபெற்றேன். பின்னர் சிறிது காலம் ரமணன் ஆசிரியரிடமும் பயிற்சிபெற்று வந்தேன். இவர்களையடுத்து 2013 ஆம் ஆண்டு சுபாஸ்கரன் ஆசிரியர், எமது பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த பின்னர் அவரிடம் பெற்ற பயிற்சிகளின் பயனாக 2013, 2014ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறக்கூடியதாக இருந்தது. 
கே-கோலூன்றிப் பாய்தல் தவிர, வேறு விளையாட்டுகளிலும் ஏதேனும் வெற்றிகள் பெற்றுள்ளீர்களா?
ப- ஈட்டி எறிதலில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்பெற்றுள்ளேன். அத்துடன், உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட குழு நிலைப் போட்டிகளில் மாகாண மட்ட ரீதியில் முதலிடம் பெற்ற எமது பாட
சாலை அணியில் நானும் ஒருவராக விளையாடியுள்ளேன்.
கே- உங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான ஆதரவு எப்படி உள்ளது? மேலும் உங்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறதா?
ப-பயிற்சிக்குத் தேவையான வசதிகள் போதியளவு அற்ற எமக்கு, தற்போதைய சாதனையின் பின்னர் உரிய வசதிகள் வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். அதன் முதற் கட்டமாக கோலூன்றிப் பாய்தல் பயிற்சிக்கு உகந்த மெத்தை ஒன்றை எமக்கு அவர் வழங்கி உதவியுள்ளார். 
மேலும், எமது பாடசாலையின் விளையாட்டுத்துறைக்கு வேண்டிய வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தித் தருவதில் முன் னிற்கும் பாடசாலை அதிபர் ம.மணிசேகரன், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், சக மாணவர்கள் மற்றும் என்னைப்பயிற்றுவித்த சகல ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
கே-தேசிய ரீதியில் கோலூன்றிப் பாய்தலில் நிகழ்த்திய 
சாதனை குறித்து...
ப- இத்தேசிய சாதனையானது எனக்கு சர்வதேச ரீதியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதனால் நான் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொள்வதில் உறுதியாகவுள்ளேன். எனினும், அதற்கான வளங்கள் தாராளமாகக் கிடைக்கும் பட்சத்திலேயே அது  சாத்திய மாகும்.
.............

யார் செய்த

குற்றம் இது?
விளையாட்டுக்களில் அவ்வப்போது வீரர்கள் தவறு இழைப்பதும் நடுவர்கள் தவறு இழைப்பதும் வழக்கமான ஒன்று.
ஒரு விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது என்றால், அந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர் அல்லது வீராங்கனைகளின் திறமையே அவர்களது வெற்றிக்கு முதல் காரணியாக அமைகின்றது. சில வேளைகளில் துரதிஷ்டவசமாக குறித்த போட்டியில் நடுவராகப் பணியாற்றுபவரின் தவறான தீர்ப்புகளும் போட்டியின் வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்துவிடுவதும் உண்டு.
அந்த வகையில்தான் அண்மையில் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் ‘லைட்வெயிட்’ பிரிவின் (57-60 கிலோ) அரையிறுதியில் இந்திய வீராங்கனையான சரிதாதேவி, தென்கொரியாவின் ஜினா பார்க்குடன்  மோதிய ஆட்டத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இது குறித்த 
சர்ச்சை தற்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
குறிப்பிட்ட போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சரிதாதேவி தனது ஆக்ரோஷத்தைக் காட்டியபோதும், நடுவர்கள் உள்ளூர் வீராங்கனைக்கு ஆதரவாகச் செயற்பட்டு 0-3 என்ற கணக்கில் சரிதா தேவியைத் தோல்வியடையச் செய்துவிட்டனர்" என்பது இந்தியத் தரப்பு வாதம்.
இதன் விளைவாக பரிசு வழங்கப்படும் அரங்கில் அழுத முகத்துடன் காணப்பட்ட சரிதா தேவி, தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை ஏற்கமறுத்ததுடன், பதக்கத்தை கழுத்தில் அணியமறுத்து கையில் வாங்கிக்கொண்டார். பின்னர் அருகில் நின்ற ஜினாவின் கழுத்தில் அணிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சர்வதேச குத்துச்சண்டை 
சங்கத்தின் விதிகளின்படி பதக்கத்தை திரும்பிக் கொடுப்பது என்பது ஒழுங்கீனமான செயல். சரிதாவின் இந்த செயல் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அவர் இனிவரும் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படுவதற்கு சாதகமாக அமையும் எனக் கருதப்பட்டது. 
எனினும், பின்னர் தனது செயல் குறித்து மன்னிப்புக் கோரும் கடிதம் ஒன்றை சரிதா, சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடம் கையளித்தார். இதனை ஏற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு மன்னிப்பும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில், ‘சரிதாதேவி செய்தது, அவரும் அணியினரும் இணைந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் போலதெரிகிறதெனவும், இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மற்றவர்களும் இதைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவர்’ என சர்வதேச குத்துச்சண்டை சங்க தொழில்நுட்ப அதிகாரி கருத்துத் தெரிவித்தமை மீண்டும் இந்த விவகாரத்தைச் சூடுபிடிக்கவைத்தது.
பின்னர் இப்பிரச்சினை குறித்த அறிக்கை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையால் சரிதா தேவியின் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
எதிர்பார்க்கப்பட்டது போலவே தற்போது சர்வதேச குத்துச்சண்டைச் சங்கம்,  சரிதா தேவியை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள அதேவேளை, இவரது பயிற்றுவிப்பாளர்களான குர்பாக்ஸ் சாந்து உட்பட 3 பேர் மற்றும் இந்திய அணி இயக்குநர் அடில் சுமரிவாலாவும் தடைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக இந்தத் தண்டணை குறித்த மறுஅறிவித்தல் வரும்வரை இவர்கள், எவ்வித போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
இதனால், தென்கொரியாவின் ஜேஜு நகரில் அடுத்த மாதம் 13 முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில், சரிதா தேவி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இங்கு சர்வதேச குத்துச் 
சண்டை சங்கம் இந்தியத் தரப்பினருக்கு வழங்கியுள்ள தண்டனை சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கலாம். ஆனால், ஆரம்பத்தில் சரிதாவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, பின்னர் திடீரென அவருக்கு எதிராக தண்டனை வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டமை தற்போது பெரும் 
சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஏன் இந்தக் குத்துக்கரணம்? பின்னணி என்ன? போன்ற விவரங்கள் குறித்தும் தண்டனையைத் தீர்மானித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயவேண்டியது இவற்றுக்குப் பொறுப்பானவர்களின் கடமையாகும்.
குற்றத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர் மேற்கொள்வது அல்ல. அப்படி மன்னிப்புக்குப் பின்னரான நடவடிக்கையானது அநாகரிகமான ஒன்றாகவே உலகியல் வழக்கில் கருதப்படுகிறது.
அதன்படி உலகக் குத்துச்
சண்டை சங்கம் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்டமை கவலைக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.
எனவே, இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் போட்டி நடுவர் செய்தது குற்றமா? பதக்கத்தை வாங்க மறுத்த சரிதாவின் செயல் குற்றமா? இல்லையேல் மன்னிப்பு வழங்கிவிட்டு திடீரென தண்டனை வழங்கிய உலக குத்துச்சண்டை சங்கம் செய்தது குற்றமா? யார் செய்தது குற்றம்?


எஸ்.ஜெயானந்தன்


No comments:

Post a Comment

Total Pageviews

8,866