Sunday, August 10, 2014

10_08_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

16 இல்
ஆரம்பம்
கூடைப்பந்தாட்டத்துக்கு
தயாராகும் அம்பாந்தோட்டை

ஆறாவது 'கால்டன்' கிண்ண கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கிறது.
'கால்டன்' கிண்ண கூடைப்பந்தாட்ட 'சம்பியன்ஷிப்' தொடர் இலங்கையின் முன்னணிக் கழகங்களுக்கிடையில் நடைபெறும் பிரபல்யமிக்க பிரீமியர் தொடராகும்.

2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர், இந்த ஆண்டு ஆறாவது கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கொழும்பில் நடைபெற்ற இத்தொடரின் பிரிவு 1இல் சம்பியனாக அம்பாந்தோட்டை நீல அணி தெரிவாகியது.
அதேவேளை, பிரிவு 2இல் கொழும்பு அணி வெற்றிபெற்றது.
கடந்தவருட பெறுபேறுகள் இவ்வாறிருக்க, இம்முறையும் கடந்த தொடர் போலவே போட்டிகள் கழகங்கள் மற்றும் பாடசாலை அணிகளுக்கிடையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
அதன்படி
* ஆண்கள் பிரிவு-1 பிரீமியர் லீக்
* ஆண்கள் பிரிவு-1 ரெகுலர் சீசன்
* பெண்கள் பிரிவு-1 சம்பியன்ஷிப்
* ஆண்கள் பிரிவு-2 சம்பியன்ஷிப்
* மாஸ்டர்ஸ்-5 சம்பியன்ஷிப்
* பாடசாலை அணிகளுக்கிடையில் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கிடையிலான தொடர்
* பாடசாலை அணிகளுக்கிடையில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கிடையிலான தொடர்
ஆகிய தனித்தனிப்பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான வாசக மாக ‘விளையாட்டுக்கான காதல்’ என அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
கால்டன் கிண்ண சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது தொடர் அம்பாந்தோட்டையில்தான் இடம்பெற்றது. அதன் பின்னர் தற்போது அங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பிரபல்யமிக்க விளையாட்டுக்களுள் கூடைப்பந்தாட்டமும் ஒன்றாக விளங்குகின்றபோதும், ஆசியப் பிராந்தியத்தில் இப்போட்டிகளுக்கு அவ்வளவாக வரவேற்பில்லை. அந்த நிலைமையே இலங்கையிலும் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையை இலங்கையில் மாற்றியமைக்கும் விதமாகவே கால்டன் சம்பியன் ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடற்குரியது.

...................

பார்வை ஒன்றே போதும்

கசகஸ்தானிலிருந்து புறப்பட்டு தாய்வான் தலைநகரில் மையங்கொண்டு சுழற்றியடித்த புயலில் சிக்கித் தவித்த உலக விளையாட்டு உள்ளங்கள், இன்றும் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தூக்கம் தொலைத்து நிற்கத்தான் செய்கின்றன.
என்ன இது...
கசகஸ்தானிலிருந்து ஆரம்பித்து தாய்வானில் தாக்கிய சூறாவளியா? இது எப்போது நடந்தது என்று விழித்துப் பார்க்கிறீர்களா?
கடந்த மாதம் தாய்வானின் தலைநகரான தைபேயில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கரப்பந்தாட்டப் போட்டியும் ஓர் அம்சமாகும்.
பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முதலிடத்தைப் பிடித்துச் சம்பியன் பட்டத்தையும் பெற்றது. இரண்டாவது இடத்தை ஜப்பானும் மூன்றாவது இடத்தை கொரியாவும் பிடித்தன. இந்தியா ஆறாவது இடத்தைப் பிடிக்க நமது நாடு இலங்கை எந்தவொரு வெற்றியையும் பெறாது எட்டாவது இடத்தைப் பிடித்தது.
அதேவேளை, இப்பத்தியுடன் தொடர்புடைய கசகஸ்தானுக்கு ஏழாவது இடம் கிடைத்தது. அந்த அணி வீராங்கனைகள் எதிர்கொண்ட மூன்று போட்டிகளில் இரண்டில் ஜப்பானிடம் 3-0 என்ற செற் கணக்கிலும், இந்தியாவிடம் 3-2 என்ற கணக்கிலும் தோற்றது. இலங்கையை மாத்திரமே கசகஸ்தானால் 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற முடிந்தது.
அந்த அணியின் பெறுபேறுகள் இவ்வாறிருக்க, அந்த அணியை மிகவும் பிரபல்யப்படுத்தும் அளவுக்கு அந்த அணியில் இடம்பிடித்த ஓர் அழகுப் பொம்மை பெரும் சூறாவளியை ஏற்படுத்திவிட்டது.
1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி கசகஸ்தானில் பிறந்த இந்த அழகு பொம்மையான சபீனா அல்டின்பெகோவா, கரப்பந்தாட்டம் விளையாடுவதற்கேற்பவே 6 அடி உயரத்தையும் கொண்டவர்.
தாய்வானின் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள இவர், நடைபெற்று முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கசகஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தார்.
அவரது ஆட்டம், இத்தொடரில் விளையாடிய ஏனைய வீராங்கனைகளுடன் ஒப்பிடுகையில் சொல்லும்படியாக இல்லை என்பது யதார்த்தமாக இருந்தபோதும், இவரது அழகு இவரைப்பற்றி உலகம் முழுவதும் பேசவைத்துவிட்டது.
திறமையான வீராங்கனைகள், அணிகள் என்ற அனைத்தும் அங்கு மையங்கொண்டிருந்தபோதும், பெரியளவில் உலகம் முழுவதும் பேசப்படாதளவில் நடைபெற்ற இப்போட்டி, சபீனாவின் அழகு மூலம் உலகம் முழுவதும் பேசப்படலாயிற்று.
உயரமான உருவம், பொம்மை போன்ற அழகிய முகம், முகத்துக்கேற்ற தலையலங்காரம் என அனைத்தையும் உள்ளடக்கிய அவரது சீரான உடலமைப்பும் நிறமும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இது மாத்திரமின்றி அவர் விளையாடும் பாணி மற்றும் அவரது புன்சிரிப்பு, படபடக்கும் கண் இமைகள் என்பன அவரது அழகுக்கு அழகு
சேர்க்க்கின்றன.
இத்தகைய வசிகரிப்பால் ரசிகர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு-பித்துப்பிடித்துத் தூக்கம் தொலைத்துவிட்டார்கள் என விளையாட்டு உலகமே புலம்ப ஆரம்பித்துவிட்டது.
இவரது இத்தகைய அழகை, கரப்பந்தாட்டத் தொடர் நடைபெற்ற காலத்தின் ஆரம்பத்தில் கசகஸ்தான் மற்றும் தாய்வானில் உள்ளூர் ஊடகங்கள் முதலில் வர்ணித்தன. இதன் பின்னர் சர்வதேச ஊடகங்களின் பார்வையும் அவர் மீது பட, குறுகிய காலத்துக்குள் அவர் பிரபல்யமாகிவிட்டார்.
அதுமாத்திரமின்றி அவர் கடந்த 22ஆம் திகதி ஆரம்பித்த தனது பெயரிலான ‘பேஸ் புக்’ பக்கம் தற்போது இரண்டு லட்சம் ‘லைக்’குகளைப் பெற்றுள்ள அதேவேளை, ‘யூடியூப்’பிலும் இவரைத் தேடும் பயனர்களின் எண்ணிக்கை லட்சங்களைக் கடந்துள்ளது. இவரது உருவத்தை அனிமேசன் மற்றும் கார்டூன்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தனது அழகால் உலகையே கட்டுப்போட்டுவிட்ட சபீனா, விளையாட்டு  வீர, வீராங்கனைகள் தமது திறமையால் மாத்திரமின்றி அழகு இருந்தாலே உலகளவில் பிபரல்யமாகவிடலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகிவிட்டார்.

.................

ரசிகரின் கோபம்

சச்சின் டெண்டுல்கர்- மரியா ஷரபோவா. இந்த இருவர் பற்றிய செய்திகளே இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மாத்திரமின்றி இந்திய ஊடகங்களிலும் அண்மைய சில வாரங்களாக தாறு மாறாகப் பேசப்பட்டு வந்த விடயமாகும்.
சச்சின் டெண்டுல்கர்:
இவர் உலகக் கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைச் சேர்த்தவர், இரு பிரிவுகளிலும் சேர்த்து சதத்தில் சதம் கடந்தவர், ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்த முதல்வர் எனப் பல்வேறுபட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர். கிரிக்கெட்டின் கடவுள் என இந்திய ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ஜாம்பவான்.
மரியா ஷரபோவா:
இவர் ரஷ்யாவின் பிரபல்ய டென்னிஸ் வீராங்கனை, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டங்கள் (அவுஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்க) அனைத்தையும் வென்றவர், முன்னாள் ‘நம்பர் வன்’ வீராங்கனை, உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனைகளில் முன்னணியில் உள்ளவர். மொடல் அழகியுங்கூட.
மேற்குறித்த விளையாட்டு நட்சத்திரங்களின் ரசிகர்கள் அண்மைய சில நாட்களாக தமக்குள் மோதிக்கொண்டுள்ளனர். இது
குறித்து சிறிது பார்ப்போம்.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்தத் தொடரை ஆண்டு தோறும் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திர வீரரான
சச்சின் டெண்டுல்கர் ரசித்துவருவது வழமை.
இதற்கமைய அவர் இம்முறையும் இத்தொடரை தவறாது பார்த்து ரசித்து வந்தார். அதன்படி ஷரபோவா பங்கேற்ற போட்டி ஒன்றை இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் மற்றும் அதேநாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டிராஸ் ஆகியோருடன் அமர்ந்திருந்து ரசித்தார்.
அதன்போது, ஊடகவியலாளர் ஒருவரால் ஷரபோவாவிடம் கேட்கப்பட்ட கேள்வியில், சச்சின் டெண்டுல்கர் குறித்தும் வினவப்பட்டது. அப்போது ‘சச்சினை எனக்குத் தெரியாது’ என ஷரபோவா பதிலளித்திருந்தார்.
இந்தக் கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படக் காரணமாயிற்று.
இதன் விளைவாக ஷரபோவாவின் ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ வலைதளங்களுக்குள் புகுந்த சச்சின் ரசிகர்கள், ஷரபோவாவை தாறுமாறாகத் திட்ட ஆரம்பித்தனர்.
‘யார் இந்த ஷரபோவா?’, ‘சச்சினிடம் மன்னிப்புக்கேர வேண்டும்’, ‘சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்’, ‘சச்சினின் பேஸ் புக் லைக் 20,295,606, ஷரபோவாவின் பேஸ் புக் லைக் 13,840,53 இதில் யார் பிரபல்யம்?’ (ஐந்து தினங்களுக்கு முன்னர் இருவரதும் பேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணப்பட்ட தொகை இது. தற்போது அது இன்னும் கூடியிருக்கும்)
இவ்வாறு பல்வேறு வாதங்களை ஷரபோவாவின் பேஸ்புக் பக்கத்தில் சச்சின் ரசிகர்கள் பதிவேற்றினர்.
இதையடுத்து ஷரபோவாவின் ரசிகர்களும் அங்கே களமிறங்கியிருந்தனர். இதனால், சச்சின் - ஷரபோவா ரசிகர்களிடையே சொற் போர் கடுமையானது.
ரசிகர்கள் வலைதளங்களில் மோதிக்கொண்டிருந்தபோதும், இதுகுறித்து சச்சினோ அல்லது ஷரபோவாவோ எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காமல் மௌனம் காத்துவந்தனர்.
பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் சச்சின், ‘ஷரபோவாவுக்கு என்னைத் தெரியாமல் இருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம்’ எனக்கூறி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்.
ஷரபோவாவுக்கு உண்மையிலேயே
சச்சின் டெண்டுல்கரைத் தெரியாமல் இருக்க வாயப்பிருக்கின்றது. ஏனெனில், ஷரபோவா டென்னிஸ் வீராங்கனை. ஆனால், சச்சின் கிரிக்கெட் வீரர்.
அதேபோல, கிரிக்கெட் தென்னாசியக் கண்டத்தில்தான் மிகப் பிரபல்யமானதாகக் காணப்படுகிறது. அதுவும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலேயே இது மிகப்பிரபல்யம். ஆசியா தவிர்ந்த கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலும் கிரிக்கெட் பிரபல்யமாகவே உள்ளபோதும், ஆசியக் கண்டத்தில் உள்ளதுபோல தீவிரமாக இல்லை என்றே கூறலாம்.
இதற்கும் காரணமும் உண்டு. அந்தந்த நாடுகளில் கிரிக்கெட் மாத்திரமின்றி ஏனைய பல விளையாட்டுக்களிலும் திறமையான வீரர்கள் மற்றும் அணிகள் உள்ளமையும் இதற்குக் காரணமாக உள்ளது. கிரிக்கெட் விளையாடும் தென்னாசிய நாடுகளைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமே சிறப்பான பெறுபேற்றைப் பெற முடிகிறது. ஏனைய விளையாட்டுக்களில் இவர்களால் உலகளவில் கிஞ்சித்தும் பிரகாசிக்க முடியவில்லை.
இதனால்தான் தமது நாடுகளில் உள்ள பிரபல்யத்தை வைத்துக்கொண்டு உலகளவிலும் கிரிக்கெட் பிரபல்யமானது என எண்ணம் கொள்வது தவறு.
கிரிக்கெட்டை விட எத்தனையோ பிரபல்யமான விளையாட்டுகள் உலகில் உள்ளன. அந்த வகையில், உதைபந்தாட்டமே உலகின் முதல் நிலை விளையாட்டாகக் கருதப்படுகிறது.
இந்த விளையாட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் உள்ளனர். உதாரணமாக பிரேஸிலின் பீலே, ஆர்ஜென்டீனாவின் மரடோனா போன்றோரைத் தெரியாதவர்கள் உலகில் இருக்கமுடியாது என்னுமளவுக்கு அவர்கள் பிரபல்யமானவர்கள். எனினும், தென்னாசியாவில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு மேற்குறித்த உதைபந்தாட்ட ஜாம்பவான்களைத் தெரியுமென்று கேட்டால், பாதிக்கு மேல் தெரியாதவர்களாகவே இருப்பர்.
அதேபோல, உலகளவில் கூடைப்பந்தாட்டப் போட்டிகளும் மிகப்பிரபல்யம். அதில் விளையாடும் யாராவது ஒரு வீரரின் பெயரைக் கூட தெரியாதவர்களே இப்பிராந்தியத்தில் உள்ளவர்களில் பலர்.
அதேபோல, ‘கோல்ப்’ விளையாட்டு என்றாலே உலகளவில் பிரபல்யமிக்கவர் டைகர்வூட்ஸ்தான். அவர் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களுள் முன்னணியில் உள்ளவர். இவர் யார் என்பது கூட பலருக்குத் தெரியாமல் இருக்கும். இப்படியே ஒவ்வொரு விளையாட்டாக அடுக்கிக்கொண்டே செல்ல முடியும்.
உலகளவில் உள்ள பல விளையாட்டுகளுக்கு மத்தியில் மிகவும் குறுகிய வட்டத்தில் உள்ள கிரிக்கெட் விளையாடும் வீரர்களை உலகளவில் எல்லோரும் அறிந்து வைத்திருப்பார்கள் என எண்ணுவது உண்மையிலேயே சின்னப்பிள்ளைத்தனமே.
முன்னர் ஒருமுறை இந்தியாவில் ‘பார்முலா - 1’ கார்ப்பந்தயப் போட்டி நடைபெற்ற சமயம், சச்சின் டெண்டுல்கரைக் கண்ட உள்ளூர் ஊடகவியலாளர்கள் அவரை நோக்கிப் படையெடுத்தனர். அப்போது அங்கே வந்திருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர், யார் அவர்
(சச்சின்)? எதற்காக எல்லோரும் அவரை நோக்கிச் செல்கின்றனர் என வினவிய சம்பவமும் உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரையில் டென்னிஸ் போட்டிகளும் அங்கு மிகவும் பிரபல்யமானது. ஏனெனில், இந்திய வீர, வீராங்கனைகள் டென்னிஸில் பிரகாசித்துவருகிறார்கள். இதனால், டென்னிஸ் விளையாடுபவர்கள் குறித்த அறிவு இந்தியர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் டென்னிஸ் சார்பானவர்களை அறிந்து வைத்திருக்கக்கூடிய வாய்ப்புண்டு.
ஆனால், டென்னிஸ் நட்சத்திரமான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு தமது நாட்டில் பிரபல்யமே இல்லாத கிரிக்கெட் குறித்து அறிந்துவைத்திருக்கவேண்டிய அவசியமிருந்திருக்காது. அதேவேளை, அதுகுறித்து அறிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவும் இருந்திருக்கலாம்.
எனவே, அவர் சச்சினைத் தெரியாது என்று கூறியமை தவறான ஒன்றாகக் கருதமுடியாது. அவர் கூறிய கருத்துக்கு
சச்சின் மீது கொண்டுள்ள பற்றுக்காரணமாகக் கொதித்தெழுந்துள்ள ரசிகர்களின் கருத்துக்களால், ஷரபோவா சச்சினின் வலிமையை தற்போது உணர்த்தியிருப்பார்.
எது எப்படியோ, ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியாமல் இருந்திருந்தால், அவர் தெரியாதவரை தெரியாது என்றுதானே கூறமுடியும். அதைவிடுத்து தெரியாதவரை தெரியும் என்று எப்படித்தான் கூற முடியும்.
சிலவேளை, ஷரபோவா சச்சினை அறிந்திருந்தபோதும் இவ்வாறு கூறியிருந்தால் அது உண்மையிலேயே சச்சினை அவமானப்படுத்தும் செயலாகவே அமையும். சச்சினின் ரசிகர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது.
எது எப்படியோ, இங்கு ஒவ்வொரு விளையாட்டுக்களுக்கும் உள்ள ரசிகர்கள் அனைவரும் உணரவேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், எவ்வாளவு
சிறந்த வீரராக இருந்தாலும் எல்லோராலும் அத்தகையவர்கள் குறித்து அறிந்திருக்க முடியாது என்பதுதான். எனவே, இதை உணர்ந்து தேவையற்ற விதண்டாவாதங்களைத் தவிர்ப்பதே ஒவ்வொரு விளையாட்டுக்கும், ரசிப்புத் தன்மைக்கும் ஆரோக்கியமாக அமையும்.

No comments:

Post a Comment

Total Pageviews