எஸ்.ஜெயானந்தன்
புரட்டி எடுக்கப்பட்ட
இலங்கை அணி
வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை
சொந்த மண்ணில் நிகழ்ந்த பரிதாபம்
நடப்பு வருடத்தில் தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த இலங்கை அணிக்கு, அதன் சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணி தோல்வியைக் கொடுத்துள்ளமை பெரும் பரிதாபகரமாக அமைந்துள்ளது.
இலங்கை அணி இந்த வருடம் எதிர்கொண்ட பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் (1-1) சமநிலை, பங்களாதேஷுக்கு எதிரான அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றி, ஆசியக் கிண்ண ஒருநாள் தொடர் வெற்றி, இருபது-20 உலகக் கிண்ண வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான அனைத்து வகைப் போட்டிகளிலும் வெற்றி என அனைத்துத் தொடர்களிலும் தோல்விகளின்றிப் பயணித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த வெற்றிப் பயணத்துக்குத் தடைபோடும் தொடரில், இலங்கை அணியை எதிர்த்து விளையாடுவதற்காக தென்னாபிரிக்க அணி இலங்கை வந்தது. அந்த அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. முதலில் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன.
அதனடிப்படையில் கடந்த மாதம் 6ஆம் திகதி, ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 304 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணி, 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 229 ஓட்டங்களை மாத்திமே சேர்த்தமையால், 75 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 109 ஓட்டங்களைச்
சேர்த்த தென்னாபிரிக்க அணியின் ஆம்லா ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
முதல் போட்டியில் தோற்ற இலங்கை அணி, கடந்த கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பதிலடிகொடுக்கும் விதத்தில் ஆடியது.
பல்லேகலவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த நிலையில் 267 ஓட்டங்களைச் சேர்த்து ஓரளவு வலுவான நிலையை அடைந்தது.
பின்னர் வெற்றியிலக்கு நோக்கிக் களமாடிய தென்னாபிரிக்க அணியை தனது பந்துவீச்சால் 38.1 ஓவர்களுள் கட்டுப்படுத்தி, வெறும் 180 ஓட்டங்களுக்குள் சுருட்டியது. இதனடிப்படையில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டில்ஷான் (86 ஓட்டங்கள்) ஆட்ட நாயகன் விருதினைத் தட்டிச்சென்றார்.
முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தமையால் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகக் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 12ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இம்முக்கியமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 339 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்குச் சவால் விடுத்தது.
சவால்மிகு இலக்கைத் துரத்த ஆரம்பித்த இலங்கை அணியால் 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 257 ஓட்டங்களை மாத்திரமே சேர்க்க முடிந்தது. இதனடிப்படையில் 82 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றது.
இதனால் ஒருநாள் தொடரைப் பறிகொடுத்தது மாத்திரமின்றி இந்த வருடத்தில் எந்தத் தொடரையும் பறிகொடுக்காது நீடித்து வந்த இலங்கையின் வெற்றிப்பயணமும் முடிவுக்கு வந்தது.
மூன்றாவது ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட, தொடரின் நாயகனாக ஆம்லா தெரிவானார்.
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரைப் பறிகொடுத்த இலங்கை அணிக்கு, அடுத்து வந்த 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரையாவது கைப்பற்றிவிடவேண்டும் என்ற வேகம் இருந்தது.
இந்நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை காலியில் நடைபெற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடியது. அதன்படி அந்த அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 455 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 292 ஓட்டங்களுள் சுருண்டது.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களைச் சேர்த்து மீண்டும் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் 370 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி ஆட்டத்தின் நான்காம் நாள் மாலை ஆட ஆரம்பிந்த இலங்கை அணி, அன்றையதினம் ஆட்டநேரம் முடியும்போது 1 விக்கெட்டை மாத்திரமே பறிகொடுத்து 110 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது.
இதனால் ஐந்தாம் நாள் முழுவதும் இலங்கை அணி துடுப்பெடுத்தாடுவதற்கான சந்தர்ப்பம் இருந்தமையால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருந்தது.
எனினும், கடைசிநாளில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தமையால் மதிய உணவுவேளை முடிந்து சிறிது நேரத்தில் இலங்கை அணியால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ஓட்டங்களை மாத்திரமே
சேர்க்க முடிந்தது.
இதனால் தென்னாபிரிக்க அணி 153 ஓட்டங்களால் வெற்றியைச் சுவீகரித்தது. அந்த அணி சார்பாக பந்துவீச்சில் கலக்கிய ஸ்ரைன் ஆட்டநாயகனானார். இவர் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
முதல் டெஸ்டைப் பறிகொடுத்த இலங்கை அணிக்கு, அடுத்த டெஸ்டில் வெற்றிபெற்று எப்படியாவது இந்த டெஸ்ட் தொடரை சமநிலையிலாவது முடிக்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் கடந்த 24ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை கொழும்பு சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 421 ஓட்டங்களைச் சேர்த்தது. இந்த இன்னிங்ஸில் மஹேலவின் 165 ஓட்டங்கள் பெரிதும் கைகொடுத்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி, ஹாசிம் ஆம்லாவை (139 ஓட்டங்கள்) மாத்திரமே நம்பி ஆடிய போல் இருந்தது. தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களைச் சேர்க்க ஆம்லாவின் ஆட்டமே கொடுத்தது. இல்லையேல் அந்த அணி, இதைவிட குறுகிய ஓட்டங்களுள் சுருண்டிருக்கும்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சங்கக்கார (72), மத்யூஸ் (63*) ஆகியோரின் ஆட்டத் துணையுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் நான்காம் நாள் மாலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்நிலையில், 369 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கித் தனது இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி அன்றையதினம் ஆட்ட நேரம் முடியும்போது ஒரு விக்கெட்டை இழந்து 38 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது.
இந்த ஆட்டத்தில் இலங்கை அணிக்கே வெற்றிவாய்ப்புப் பிரகாசமாக இருந்தது. எனினும், ஐந்தாம் நாளில் அவ்வப்போது குறுக்கிட்ட மழை அந்த வெற்றிவாய்ப்பைக் குறைக்கும் வகையில் அமைந்தது.
ஐந்தாம் நாளில் தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென்னாபிரிக்க அணி, 47 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை மழை குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் ஆரம்பமாகி 55 ஓட்டங்களைச் சேர்த்தவேளையும் மழைகுறுக்கிட்டது.
மழை ஓய்ந்தபின்னர் மீண்டும் தென்னாபிரிக்கா ஆட ஆரம்பித்தது. எனினும் மழை விட்டபாடாக இல்லை. அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதனால் இலங்கை அணியின் வெற்றிவாய்ப்புக் குறைந்து ஆட்டம் சமநிலையில் முடியும் நிலையை அடையும் நிலை ஏற்பட்டது.
அவ்வாப்போது குறுக்கிட்ட மழை தென்னாபிரிக்காவுக்குச்
சாதகமாக அமைய அந்த அணியும் அதற்கேற்ப தனது ஆட்டத்தை நகர்த்தியது. இறுதிநாள் ஆட்ட நேரம்முடியும்போது அந்த அணி 159 ஓட்டங்களைச்
சேர்த்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மிகுதி 2 விக்கெட்டுகள் இருந்தமையால் இந்த ஆட்டம் சமநிலையில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் நாயகனாக மஹேல ஜெயவர்தனவும், தொடரின் நாயகனாக பெரேராவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்தப் போட்டியில் இலங்கை வெற்றிபெறும் தருவாயில் இருந்தபோதும் மழை குறுக்கிட்டு அதன் வெற்றியைத் தடுத்தமையால், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி, 1-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்திக்கொண்டது.
அதேவேளை, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்த அவுஸ்திரேலிய அணியைப் பின்தள்ளிவிட்டு அந்த அரியணையில் தான் அமர்ந்துகொண்டது.
ஏற்கனவே ஒருநாள் தொடரைத் தன்வசப்படுத்திக்கொண்ட தென்னாபிரிக்க அணி, பின்னர் டெஸ்ட் தொடரையும் தனதாக்கிக்கொண்டதன்மூலம் இலங்கையின் இந்த வருட தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்பதைவிட இலங்கையை புரட்டி எடுத்துவிட்டது என்றே
சொல்லவேண்டும்.
சொந்த மண்ணில் வைத்து தனது வெற்றிப் பயணத்தை மோசமான முறையில் முறித்துக்கொள்ளவேண்டிய நிலையை இலங்கை அணி எதிர்கொண்டமை பரிதாபமான விடயமே.
.....................
தீராத தாகம்
தென்னாபிரிக்க அணியின் முன்னணித் துடுப்பாட்ட-பந்துவீச்சு வீரர்களில் ஒருவராக விளங்கிவந்த ஜக் கலிஸ், இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றதன்பின்னர் தனது ஓய்வை அறிவித்து, 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆசையையும் முறித்துக்கொண்டுள்ளார்.
அண்மைக்காலமாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த கலிஸ், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்
சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தத் தவறினார். இதன் காரணமாக, தான் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணியில் இடம்பிடிக்கக்கூடிய வீரர் அல்லர் என்பதை உணர்ந்ததாகக் கூறி, ஓய்வையும் அறிவித்தார்.
ஏற்கனவே இருபது-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவர், தனது ஒருநாள் போட்டிகள் ஆட்டத்துக்கும் முடிவு கொடுத்துள்ளார். எனினும், உள்ளூர் போட்டிகளில் கழக அணிகளுக்காக விளையாடவுள்ளார்.
சகலதுறை வீரராக விளங்கும் இவர், மொத்தம் 328 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 11579 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். ஓர் இன்னிங்ஸில் ஆகக்கூடுலாக 139 ஓட்டங்களைப் பெற்றுள்ள இவர், 17 சதங்கள் மற்றும் 86 அரைச்சதங்களுடன் 911 பௌண்டரிகள் மற்றும் 137
சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அதேவேளை 131 பிடியெடுப்பு களையும் செய்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சைப் பொறுத்த வரையில் 283 இன்னிங்ஸ்களில் 8680 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 273 விக்கெட்டுகளைச்
சாய்த்துள்ளார்.
1975ஆம் அண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கேப்டவுணில் பிறந்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான 14.12.1995 அன்று டர்பனில் ஆரம்பமாகிய டெஸ்ட் போட்டி மூலம் உலகக் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி 12.07.2014இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியை தனது கடைசி
சர்வதேச ஆட்டமாக ஆடியுள்ளார்.
2015இல் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணி சார்பாக பங்கேற்கும் தாகத்துடன் இருந்த கலிஸ், அந்தத் தாகம் தீரமுன்னரே தனது 19 வருட கால கிரிக்கெட்டையும் முடித்துக் கொண்டுள்ளார்.
.............
இன்றுடன் நிறைவு
கிளாஸ்கோவில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய 20ஆவது கொமன்வெல்த் போட்டிகள் இன்றையதினம் இடம்பெறும் இறுதிநாள் நிகழ்வுகளுடன் கோலாகலமாக நிறைவுபெறுகிறது.
நேற்றுமுன்தினம் வரையான போட்டிகளின் நிலைவரப்படி இங்கிலாந்து முதலிடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் இருந்தன.
போட்டிகளை நடத்தும் ஸ்கொட்லாந்து நான்காவது இடத்தைப் பிடிக்க, எமக்கு அண்டை நாடான இந்தியா ஐந்தாவது இடத்தைப்பிடித்திருந்தது. இலங்கை ஒரே ஒரு வெள்ளிப்பதக்கத்தைப் பெற்று 25ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்தப் போட்டிகளில் மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment