எஸ்.ஜெயானந்தன்
அடித்தது லக்
உலக உதைபந்தாட்டத்தின் தற்போதைய முன்னணி நட்சத்திரங்களான ஆர்ஜென்ரீனாவின் மெஸ்ஸி, போர்த்துக்கல்லின் ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மர் ஆகியோர் மீது அண்மையில் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரின்போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், ரொனால்டோவின் அணி முதல் சுற்றுடன் வெளியேற, பிரேஸில் அணி நெய்மர் மற்றும் அணித்தலைவரின்றி அரையிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியது. ஆர்ஜென்ரீனா மாத்திரமே இறுதிவரை முன்னேறியது.
மேற்குறித்த விடயம் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியானால் எதற்காக இதுகுறித்து குறிப்பிடுகிறேன் என யோசிக்கிறீர்களா?
விடயம் இருக்கிறது. மேற்குறித்த முக்கிய மூன்று நட்சத்திரங்களும் கடந்த உலகக் கிண்ணத் தொடரில் சமகாலத்தில் களத்தில் இருந்தவேளை, இவர்களையெல்லாம் முந்திக்கொண்டு அதிரடியாகக் கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்த வீரருக்கான ‘தங்கக் காலணி’யை (கோல்டன் பூட்) வென்று உலக உதைபந்தாட்ட அரங்கையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கொலம்பியாவின் மத்தியகள வீரரான ஜமேஸ் ரோட்ரிக்ஸ்.
கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இவர் அடித்த 6 கோல்களே, கொலம்பிய அணியை காலிறுதிவரை முன்னேறவைத்தது. இவர் கிறீஸ், ஐவேரிகோஸ்ட், ஜப்பான் மற்றும் பிரேஸில் அணிகளுக்கு எதிராக தலா ஒரு கோலையும் உருகுவேக்கு எதிராக 2 கோல்களையும் போட்டிருந்தார். கொலம்பிய அணி பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் இவர் கோல் போடத் தவறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது ஆட்டத்திறனைக் கண்ட ஸ்பெய்னின் முன்னிலைக் கழகமான ரியல் மார்டிட் அணி, இவரைத் தம் பக்கம் இழுக்க எண்ணியது. இதன் விளைவாக பிரான்ஸின் மொனாகோ கழகத்துக்காக விளையாடி வந்த இவரை, 60 மில்லியன் யூரோக்களைக் கொடுத்து வாங்கிக்கொண்டது. அதற்கிணங்க ரோட்ரிக்ஸ், இனிவரும் 6 ஆண்டுகளுக்கு ரியல் மார்டிட் அணியுடன் இணைந்து விளையாடுவதற்கான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஓர் அணியிலிருந்து வேறொரு அணிக்கு அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களுள் இவர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிரு இடங்களிலும் தற்போது ரியல் மார்டிட் அணியில் விளையாடிவரும் காரத் பாலே மற்றும் ரொனால்டோ ஆகியோர் உள்ளனர். மூன்றாவது இடத்தில் லூயிஸ் சுவராஸ் உள்ளார்.
அதேவேளை, கொலம்பிய அணியில் விளையாடும்போது ரோட்ரிக்ஸ் அணிந்திருக்கும் ஜேர்சியின் 10ஆம் இலக்கமே ரியல் மார்டிட் ஜேர்சியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் போட்டிகளில் ரியல் மார்டிட் அணிக்காக முன்னணி நட்சத்திர வீரரான போர்த்துக்கல்லின் ரொனால்டோவுடன் இணைந்து ரோட்ரிக்ஸின் கலக்கல் ஆட்டத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.
இவருடன் உலக சம்பியன் ஜேர்மனி அணியில் இடம்பிடித்திருந்த குறோஸும் 28 மில்லியன் யூரோக்களுக்கு ரியல் மார்டிட் அணிக்காக பேயர்ன் முனிச் அணியிலிருந்து வாங்கப்பட்டுள்ளார்.
................................
ஒரே நாள்
டென்னிஸ் போட்டிகளில் கிராண்டஸ்லாம் அந்தஸ்துப்பெற்ற நான்கு டென்னிஸ் தொடர்களான அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின், விம்பிள்டன் ஓப்பின் மற்றும் அமெரிக்க ஓப்பின் ஆகியவற்றில் எந்தவொரு பட்டத்தையும் வெல்லாதபோதும், ஏனைய தொடர்களில் முன்னணி வீரர்கள் இல்லாத பட்சத்தில் சம்பியன் பட்டங்களை வென்று ‘நம்பர் 1’ இடத்தில் 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பித்து 2011ஆம் ஆண்டின் முற்பகுதிவரை வீற்றிருந்தவர்தான் டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி.
தற்போது 13ஆவது இடத்தில் உள்ள இவர், தனது அழகான கட்டுடால் ரசிகர்களை தன்வசம் இழுத்து வைத்துள்ளார்.
அதேபோல, கோல்ப் போட்டிகளில் தற்போதைய தரவரிசைப்படி இரண்டாவது இடத்தில் இருப்பவரும் பல்வேறுபட்ட கோல்ப்
ஓப்பின் பட்டங்களை வென்றவருமாக விளங்குபவர் அயர்லாந்தின் ரோரி மைக்ரோய்.
‘டென்னிஸ் - கோல்ப்’ இரண்டையும் இணைத்து பேசப்படும்போது அனைவரதும் நினைவுக்கு வருவோர் வொஸ்னியாக்கி மற்றும் மைக்ரோய் இருவரும்தான்.
ஏனெனில், கடந்த மே மாதம் வரை அதற்கு முந்தைய இரண்டு வருடங்களுக்கு மேலாக பிரியாக் காதலர்களாக வலம் வந்தவர்கள். அதுமாத்திரமின்றி இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு இரகசியமாக திருமண நிச்சயதார்த்தமும் செய்துகொண்டனர். இதனால், இவர்களது திருமணம் குறித்து எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் கடந்த மே மாதம் தமது உறவை முறித்துக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்தவாரம் நடைபெற்ற பிரிட்டிஷ் ஓப்பின் கோல்ப் தொடரில் முதலிடத்தைப் பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றார் மைக்ரோய்.
இதேவேளை, துருக்கியில் நடைபெற்றுவந்த இஸ்தான்புல் டென்னிஸ் தொடரின் சம்பியனாக கரோலின் வொஸ்னியாக்கி வென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர் முதல் முதலில் பெறும் வெற்றி என்பதுடன், ஒரே நாளில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது சிறப்பம்சமாகும். இதனையடுத்து, இவர்களது பழைய காதல் குறித்தும் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் உலக விளையாட்டு ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
1989ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் திகதி பிறந்தவர் மைக்ரோய். 1990ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி பிறந்தவர் வொஸ்னியாக்கி. இதனடிப்படையில் இவர்கள் இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் உள்ளது.
அதேவேளை, 1.75 மீற்றர் உயரமுடையவர் மைக்ரோய். 1.77 மீற்றர் உயரம் உடையவர் வொஸ்னியாக்கி. மைக்ரோயைவிட வொஸ்னியாக்கி உயரம் கூடியவராக இருந்தமையால், இருவரும் காதல்செய்து வந்த காலப்பகுதியில் உயரம் கூடிய பாதணிகளை (கீல்ஸ் வைக்கப்பட்டவை) அணிவதை தனது காதலனுக்காகத் தவிர்த்து வந்தார் வொஸ்னியாக்கி.
தற்போது இவர்களுக்கிடையிலான உறவு முறிவடைந்துள்ள நிலையில் மீண்டும் குதியுயர்ந்த பாதணிகளை அணிய ஆரம்பித்துள்ளார் வொஸ்னியாக்கி. இதுகுறித்த படத்தை வெளியிட்டுள்ள அவர், கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் சாதாரணமான ஒரு நாளில் நான் குதியுயர்ந்த பாதணியை அணிந்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தனது புதிய காதலியான மொடல் அழகி நடியா போர்ட்டுடன் வலம்வந்த மைக்ரேய், பிரிட்டிஷ் ஓப்பின் வெற்றியை அவருடனே கொண்டாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment