Sunday, July 20, 2014

20_07_2014 sunday thinakkural


எஸ்.ஜெயானந்தன்

குறுகிய இடத்துக்குள் 
பந்தைக் கடத்துதல்
பிரேசிலில் நடைபெற்று முடிந்த ‘பிபா’வின் 20ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் ஆரம்பம் முதல் இறுதிவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது தனது புது யுக்தியைக் கையாண்டு ஜேர்மனி அணி சம்பியன் பட்டத்தை வென்றமை அனைவரும் அறிந்ததே.
அதற்கேற்ப அந்த அணி வெற்றிக் கிண்ணத்துடன் தாய்நாடு திரும்பியபோது அங்கு வழங்கப்பட்ட வரவேற்பும் சொல்லிலடங்காததாகும்.

இத்தகைய பெருமையை தாய் நாட்டுக்காக பெற்றுக்குகொடுத்த பெருமை ஜேர்மனி அணியில் இடம்பிடித்திருந்த ஒவ்வொரு வீரரையும் சாரும். வீரர்கள் அனைவரதும் இணைந்த செயற்பாடே அந்த அணியின் வெற்றிக்குக் காரணம் என்றால் அது மிகையில்லை.
அதிலும் பயிற்றுவிப்பாளரின் ஆற்றுகையுடன் அணித்தலைவரின் வழிநடத்தல் முதல் படி. அடுத்து கோல் காப்பாளரின் பணி மிகமுக்கியமானது. ஜேர்மனியின் கோல் காப்பாளர் மானுவல் நௌவர் தனது திறமையான - துணிவான எதிர்கொள்ளல் தன்மையை வெளிப்படுத்தி எதிரணியினரை கோல் போடாது தடுத்து, கடைசியில் தங்கக்கையுறையையும் தனதாக்கிக்கொண்டுள்ளார்.
கோல் காப்பாளருக்கு அடுத்த படியாக அனைத்து வீரர்களும் சமமானவர்களாகவே கருதவேண்டும்.
ஏனெனில், பின் களத்தில் உள்ள வீரர்கள் தாக்கவரும் எதிராளிகளைத் தடுத்து ஆடி கோல் விழாது தடுப்பதுடன், கோல் காப்பாளருக்கு நேரக்கூடிய நெருக்கடிகளையும் குறைக்கவேண்டும். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமை. அதேபோல, மத்திய களத்தில் உள்ள வீரர்கள் பின்கள வீரர்கள் கொடுக்கும் பந்துகளைக் கடத்திச் சென்று முன்கள வீரர்களுக்கு சாதகமான முறையில் கடத்த வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் கோல்களைப் போடவும் பின் நிற்கலாகாது. அதேபோல, எதிரணி வீரர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கும் எந்நேரமும் முகக்கொடுக்கக்கூடிய நிலைமையும் இவர்களுக்கு நேர்கின்றது.
அடுத்ததாக முன்கள வீரர்கள் கடும் சவாலை எதிர்கொள்வர். எதிரணியின் தடுப்புத் தூண்களாக விளங்கும் அந்த அணியின் பின்கள வீரர்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு - தடுப்புகளை உடைத்துக்கொண்டு தமது முழுமையான திறமையைப் பயன்படுத்தி கோல் அடிக்கவேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில் எதிரணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயங்களுக்கும் உள்ளாகநேரிடும். இவர்கள் கோலடிக்கும் சந்தர்ப்பங்களைத் தவறவிடும் பட்சத்தில் இவர்கள் மீது எழுகின்ற விமர்சனங்களுக்கும் அளவிருக்காது. அணியில் நிலைத்திருப்பதும் கேள்விக்குறியாகிவிடும்.
மொத்தத்தில் அணியில் இடம்பிடித்துள்ள ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பவர்களாகவே உள்ளனர்.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிலையிலும் உள்ள வீரர்கள் செய்யவேண்டிய அனைத்தையும் திறம்படச் செய்த அணி என்றால் அது ஜேர்மனி அணியாகவே இருக்கும்.
போர்த்துக்கல்லுக்கு எதிரான ஜேர்மனியின் முதலாவது ஆட்டத்தில், முல்லர் போட்ட மூன்று கோல்களும், பின்கள வீரரான ஹம்மெல்ஸ் தனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு மூலம் போட்ட ஒரு கோலும் அந்த அணியை பெரு வெற்றிபெறச் செய்தது (இதில் முல்லர் ஆட்டநாயகனானார்).
ஜேர்மனி குழு நிலை ஆட்டத்தில் எதிர்கொண்ட கானாவை மாத்திரமே வெற்றிகொள்ள முடியவில்லை. அந்த அணியை ஜேர்மனால் வெற்றிபெற முடியாதபோதும் குளோஸ், மரியா ஆகியோரின் இரு கோல்கள் 2-2 என்ற கணக்கில் சமநிலைப்படுத்த உதவின (இதில் மரியா ஆட்டநாயகனானார்).
இந்த ஆட்டத்தில் கோல் ஒன்றைப் போட்டதன் மூலம், உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் அதிக கோல்களைப் போட்ட வீரரான ரொனால்டோவின் சாதனையை (15 கோல்கள்) குளோஸ் சமப்படுத்தினார்.
குழுநிலைப் போட்டிகளில் ஜேர்மனி எதிர்கொண்ட கடைசியாட்டத்தில் அமெரிக்கா விடுத்த சவாலுக்கு மத்தியில் ஜேர்மனிக்காக முல்லர் உதைத்த பந்து கோலாகியமை அந்த அணியை வெற்றிபெறச்செய்தது (இந்த ஆட்டத்திலும் முல்லர் நாயகனானார்).
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றான ‘16 அணிகள்’ போட்டியில் அல்ஜீரியா அடித்த ஒரு கோலுக்கு, ஸூரெல் மற்றும் ஒசில் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியை காலிறுதிக்கு முன்னேறவைத்தனர்.
இந்நிலையில், காலிறுதியில் எதிர்கொண்ட பிரான்ஸை கடும் போராட்டத்துக்கு மத்தியில் வீழ்த்த ஒரு கோல் அடித்து உதவியவர் மட்ஸ் ஹம்மெல்ஸ் (இவரே ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்)
பின்னர் சம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியை நடத்திய நாடான பிரேஸிலை, மிரளவைத்த க்ரூஸ் (2 கோல்கள்), குளோஸ் (1), முல்லர் (1), ஸூரெல் (2), கெடிரா (1) ஆகியோர் போட்ட கோல்கள், ஜேர்மனியை 7-1  என்ற கோல்கள் அடிப்படையில் பெரு வெற்றிபெறவைத்தது (இந்த ஆட்டத்தில் தக்க தருணத்தில் சிறப்பான கோல்களைப் போட்ட க்ரூஸ் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்).
அதேவேளை, இந்தப் போட்டியில் கோல் அடித்த குளோஸ், உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் 16 கோல்களை அடித்து முதலிடத்தைப் பிடித்தார் (இரண்டாவது இடத்தில் பிரேஸிலின் ரொனால்டோ (15) உள்ளார்).
இந்நிலையில், ஆர்ஜென்ரீனாவுடன் ஜேர்மனி மோதிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதியாட்டத்தில் மேலதிக நேரத்திலும் கோல் எதுவும் விழாமல் நகர்ந்த நிலையில், சாதனை வீரரான குளோஸுக்குப் பதிலாக மாற்று வீரராக இறுதி நிமிடங்களில் களமிறக்கப்பட்ட மரியா கோட்ஸா, கோல் அடித்து அசத்தி உலக உதைபந்தாட்டத்தின் ‘ஹீரே’ வானார்.
குளோஸுக்கு மாற்று வீரராக மரியா இறக்கப்பட்டமை பயிற்றுவிப்பாளரின் சிறந்த உத்தியாகவே கருதப்படுகிறது. குளோஸை அதிகளவில் சுற்றி சுற்றி வந்த ஆர்ஜென்ரீனா வீரர்களின் கவனத்தை சாதாரண மரியாவை இறக்கியதன் மூலம் திசைதிருப்பினார் பயிற்றுவிப்பாளர். இதன் விளைவாகவே  பெரியளவில் கவனிப்பாரின்றி முன்களத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திருந்த மரியாவால் இலகுவாகக் கோல் ஒன்றைப் போட முடிந்தது. இது பயிற்சியாளரின் உத்திக்குக் கிடைத்த வெற்றியாகவும் அமைந்தது.
இந்த இறுதியாட்டத்தில் ஆர்ஜென்ரீனாவின் மெஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் தாக்குதலுக்கு எதிராக, பலம்மிக்க தடுப்பு அரண்களை அமைத்து  அவர்களின் எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கிய பின்கள வீரர்களின் திறமையும், எதிர்பார்க்காத விதமாக கோல் எல்லைக்குள் பந்து சென்ற பந்துகளைப் பாய்ந்து பாய்ந்து தடுத்து நிறுத்திய கோல் காப்பாளருக்கும் ‘சபாஷ்’ போட்டே ஆகவேண்டும்.
கோல் காப்பாளரின் திறமை கண்டே இத்தொடரின் தங்கக் கையுறை அவருக்கு வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்தத் தொடர் முழுவதும் அதிக கோல்களை அடித்த அணி (18) என்ற பெருமையைப் பெற்ற ஜேர்மனி, 4 கோல்களை மாத்திரமே உள்வாங்கிக்கொண்டது. 
ஜேர்மனியின் வெற்றியைக் கௌரவித்து அந்நாட்டில் தபால் தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஐரோப்பாவில் பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்படும் அளவுக்கு ஜேர்மனியின் வெற்றி முக்கிய பங்கு வகித்துள்ளது.
இத்தொடர் ஆரம்பிக்க முன்னர் பெரியளவில் எதிர்பார்க்கப்படாத அணியாக ஜேர்மனி திகழ்ந்தபோதும், அந்த அணி பங்கேற்ற ஒவ்வொரு போட்டிகளின்போதும் அந்த அணியின் அசைக்க முடியாத பலம் அனைவரையும் பிரமிக்கவைத்தது. அவர்கள் பின்பற்றிய ‘குறுகிய இடத்துக்குள் பந்தைக் கடத்துதல்’ என்ற யுக்தியே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றியால் உலக தரவரிசையில் ஜேர்மனிக்கு முதலிடமும் கிடைத்தது.
இது இவ்வாறிருக்க, கிழக்கு-மேற்கு ஜேர்மனி எனப் பிரிந்திருந்த நிலையிலேயே மேற்கு ஜேர்மனி 1990ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது. இதன்பின்னர் அதே ஆண்டே,  கிழக்கு-மேற்கு ஒருங்கிணைந்த ஜேர்மனியாக ஒருங்கிணைக்கப்பட்டது.  ஒருங்கிணைந்த ஜேர்மனியாக முதல் முறையாக உலகக் கிண்ணம் வெல்லப்பட்டமையால் அங்கு இவ்வெற்றி பெருமெடுப்பில் கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866