எஸ்.ஜெயானந்தன்
திரு திரு
என விழித்து நின்றது இங்கிலாந்து
தர தர
என இழுத்து வந்தது இலங்கை
இரண்டு மாதங்களாக இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கு எதிராக பல்வேறுபட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த இலங்கைக் கிரிக்கெட் அணி, எந்தவொரு தொடரையும் இங்கிலாந்து அணிக்கு விட்டுக்கொடுக்காமல் வழித்துத் துடைத்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளது.
இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அத்தொடர் ஆரம்பமாக முன்னர் இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஆடி, அத்தொடரை 1-0 (இரண்டாவது ஆட்டம் கைவிடப்பட்டது) என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஆரம்பித்த இலங்கை அணி, முதலில் நடைபெற்ற ஒரே ஒரு இருபது-20 போட்டியில் (மே 20ஆம் திகதி நடைபெற்றது) லசித் மாலிங்க தலைமையில் 9 ஓட்டங்களால் வெற்றிபெற்று தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பித்தது. இதில், இலங்கை அணியின் தலைவராக அஞ்சலே மத்யூஸ் செயற்பட்டார்.
மே மாதம் 22ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்டு இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது. அந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது. பின்னர் வெற்றியிலக்கு நோக்கி இலங்கை அணி ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை குறிக்கிட்டது. இதனால், டக்வேர்த் லூவிஸ் முறைப்படி ஆட்டம் 32 ஓவர்களுக்குக் குறைக்கப்பட்டு வெற்றியிலக்காக 226 ஓட்டங்கள் விதிக்கப்பட்டது. எனினும், இலங்கை அணி 27.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுள் சுருண்டமையால் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. அந்த ஆட்டத்தின் நாயகனாக சகலதுறையிலும் ஜொலித்த இங்கிலாந்தின் ஜோர்டன் தெரிவுசெய்யப்பட்டார்.
மே 25ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் வெற்றியிலக்கைத் துரத்த ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு இலங்கைப் பந்துவீச்சு பெரும்
சவாலாக விளங்கியது. இதனால், 26.1 ஓவர்களில் 99 ஒட்டங்களுள் சுருண்டு 157 ஓட்டங்களால் இலங்கையிடம் தோற்றது. இலங்கைக்காக 88 ஓட்டங்களைச்
சேர்த்த டில்ஷான் ஆட்டநாயகனானார்.
பின்னர் மே 28ஆம் திகதி நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 24 ஓவர்களை எதிர்கொண்ட நிலையில், 67 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்துச் சுருண்டது. பின்னர் வெற்றியிலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி, 12.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கையின் விக்கெட்டுகளை அள்ளிய ஜோர்டன் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றமையால் 2-1 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலைபெற்றது.
இதனால், நான்காவது ஆட்டத்தில் எப்படியாவது வெற்றிபெற்று தொடரை வெல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைக்கவேண்டிய நிலை இலங்கைக்கு இருந்தது.
இந்நிலையில், மே 31ஆம் திகதி லோட்ஜில் நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணி, தனது எண்ணம்போலவே ஆட்டத்தை வெளிக்காட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ஓட்டங்களைச் சேர்த்தது.
வெற்றியிலக்கை நெருங்கி வந்த இங்கிலாந்து அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 293 ஓட்டங்களையே சேர்க்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 7 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சம னுக்குக் கொண்டுவந்தது. இந்த ஆட்டத்தில்
சங்கக்கார சதம் (104 பந்துகளில் 112 ஓட்டங்கள்) அடித்தபோதும், அவரை விட அதிரடியாக ஆடி சதம் கடந்த இங்கிலாந்தின் பட்லரே (74 பந்துகளில் 121 ஓட்டங்கள்) ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
பின்னர், இரு அணிகளுக்கும் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பைக் கொண்ட 5ஆவது ஆட்டம் கடந்த ஜூன் 3ஆம் திகதி பெர்மிங்காமில் அரங்கேறியது. இந்த ஆட்டத்தில் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணியால் 219 ஓட்டங்களையே சேர்க்க முடிந்தது. இதனால், இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புப் பிரகாசமாகத் தென்பட்டது. அதன்படி வெற்றியிலக்கைத் துரத்திய இலங்கை அணி, 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 222 ஓட்டங்களைச்
சேர்த்ததன்மூலம் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக இங்கிலாந்துக்குச் சவால் விடுத்துத் துடுப்பெடுத்தாடிய திரிமன்னே தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்றதன்மூலம் இலங்கை அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்திக்கொண்டது. இத்தொடரின் நாயகனாக சகல போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்பட்ட இலங்கையின் லசித் மாலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
பின்னர் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 12ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை லண்டனில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் இரண்டாம் நாளிலும் தொடர்ந்து ஆடி மாலைநேர தேநீர் இடைவேளையின் பின்னர் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இங்கிலாந்து அணி சார்பாக ரூட் கடைசிவரை ஆட்டமிழக்காது நின்று இரட்டைச் சதம் (200) அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, நான்காம் நாள் மதிய நேர உணவு இடைவேளைக்கு முன்னர் 453 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சங்கக்கார (147), மத்யூஸ் (102) ஆகியோர் சதம் அடித்திருந்தமை
சிறப்பம்சமாகும்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, நான்காம் நாள் ஆட்ட நேரம் முடியும்போது 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் தனது இன்னிங்ஸையும் இடைநிறுத்தியது.
இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து
சார்பாக துடுப்பாட்டத்தில் பல்லன்ஸ் சதம் (104) அடித்திருந்தார்.
ஆட்டத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளன்று 390 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி, மிகவும் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்த முற்பட்டபோதும் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. இதனால், இலங்கை அணி தோல்வியுறும் அபாயக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. எனினும், அணியின் தோல்வி நிலை நெருங்க நெருங்க ஆட்ட நேரமும் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. இதனால் ஆட்டம் பெரும் பரபரப்புடன் நகர்ந்தது.
இறுதியில் கடைசி நாள் ஆட்ட நேரம் முடியும்போது, 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த இலங்கை அணி, 201 ஒட்டங்களுடன் களத்தில் இருந்தது. இதனால், அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் தோற்கும் தருவாயில் இருந்த இலங்கை அணிக்கு உண்மையிலேயே அதிஷ்டம் கைகொடுத்துள்ளது. அதேவேளை, வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியினருக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்தின் ரூட் தெரிவுசெய்யப்பட்டார்.
பின்னர், கடந்த 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த ஆட்டமும் பரபரப்பாகவே நகர்ந்தது.
முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, முதல் நாளிலேயே 257 ஓட்டங்களுள் சுருண்டது. இலங்கை சார்பாக துடுப்பாட்டத்தில் ஆகக்கூடுதலாக சங்கக்கார 79 ஓட்டங்களச்ை சேர்த்திருந்தார். இங்கிலாந்தின் பந்துவீச்சில் பிளாங்கெட் 5 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.
பின்னர் முதல் நாள் மாலையே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, மூன்றாவது நாள் காலை நேர இடைவேளைவரை ஆடியது. அப்போது, 350 ஓட்டங்களைச் சேர்த்து சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அந்த அணி சார்பாக துடுப்பாட்டத்தில், சிறப்பாக ஆடிய ரொப்சன் சதம் (127) கடந்தார். இலங்கை அணியின் பந்துவீச்
சில் ஏரங்க மற்றும் மத்யூஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் மூன்றாம் நாள் காலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, நான்காம் நாள் மாலைவேளையில் 457 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மத்யூஸ் சதம் (160) கடந்தார். இங்கிலாந்து சார்பாக பந்துவீச்
சில் பிளாங்கெட் 4 விக்கெட்டுகளைப் பதம் பார்த்தார்.
அன்றையதினமே 350 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அன்றையதினம் ஆட்ட நேரம் முடியும்போது 57 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. மீதம் ஒருநாள் இருந்தமையதால் இலங்கை அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி ஐந்தாவது கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து பெய்த மழை காரணமாக இலங்கையின் வெற்றி வாய்ப்புத் தகரும் நிலையில் இருந்தது. எனினும், ஆட்டம் மீண்டும் மதிய உணவு இடைவெளி முடிந்து சில நிமிடங்களில் ஆரம்பித்தது.
இங்கிலாந்து அணி எஞ்சிய விக்கெட்டுகளைப் பறிகொடுக்காமல் எப்படியாவது ஆட்டத்தை சமனிலையில் முடிக்கும் நோக்கில் மெது மெதுவாக ஆடியது. ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அந்த அணி 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது.
கடைசி விக்கெட்டுக்காக அலியுடன் இணைந்து ஆடிய அன்டர்சன், 54 பந்துகளை எதிகொண்டு ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்ட நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார். அவர் எதிர்கொண்ட 55ஆவது மற்றும் ஆட்டத்தின் கடைசிக்கு முதல் பந்தை வீசிய, ஏரங்க அவரை விடைபெறச் செய்தார். இதனால், இறுதி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
100 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது. அந்த ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவாகிய மத்யூஸ், தொடரின் நாயகன் விருதையும் அண்டர்சனுடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.
டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் இரு போட்டிகளிலும் இலங்கைக்கு கடைசி நேரத்தில் அதிஷ்டம் கைகொடுத்துள்ளது என்றே கூறவேண்டும்.
அதேவேளை, டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை புதிய வரலாறு படைத்தது. இதுவரை 8 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இலங்கை அணி, இம்முறை கிண்ணம் வென்றமை இரண்டாவது தடவையாகும். ஏற்கனவே ஒரு முறை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி கிண்ணம் வென்றிருந்தது. இம்முறை இரண்டு போட்டிகளில் விளையாடி டெஸ்ட் கிண்ணம் வென்றுள்ளது. தனது சொந்த மண்ணில் 4 தடவைகள் இலங்கையை வென்று இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இலங்கையின் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் பயணத்தைப் பொறுத்தவரையில், ‘இருபது-20’, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் முன்னிலை பெற்று வெற்றியுடன் நாடு திரும்பியுள்ளமை பெருமைக்குரிய விடயமாகவே கருத முடியும்.
இந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்து அணியினர் தமது வெற்றி வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு திரு திருவென விழித்து நிற்க, இலங்கை அணியினர் அவர்களின் வெற்றிவாய்ப்புகளை எல்லாம் தரதரவென இழுத்து தம்முடன் கொண்டு வந்துவிட்டனர் எனக் கூறினாலும் மிகையில்லை.
..........................................................................................................11493
இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய குமார் சங்கக்கார, அந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேவேளை, சக வீரரான மஹேல ஜெயவர்தன 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இத்தகைய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெற்றதன் மூலம் இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் 11493 ஓட்டங்களைச் சேர்த்து சமமான நிலையை எட்டியுள்ளமையானது ஓர் அதிசயிக்கத் தக்க நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. அதிக டெஸ்ட் ஓட்டங்களைச் சேர்த்தவர்கள் வரிசையில் இவர்கள் இருவரும் 6ஆவது இடத்தில் உள்ளனர்.
அதேவேளை, சங்கக்கார மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரராக இவர் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்தச் சாதனையை மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான எவர்டென் வீக்ஸ், சந்திரபோல், சிம்பாப்வேயின் எண்டி பிளவர் ஆகியோர் படைத்துள்ளனர்
....................................................................................................
பிரேஸில் பரபரப்புடனும் கிளுகிளுப்புடனும் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் முதல் சுற்று ஆட்டங்களின் முடிவில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறிய அதிர்ச்சிகளும் எதிர்பார்க்காத அணிகள் அடுத்த சுற்றுக்கு நுழைந்த அபூர்வங்களுடனும், நேற்றையதினம் ‘16 அணிகள்’ சுற்று ஆரம்பமாகியது.
கடந்த 12 (இலங்கை நேரப்படி 13ஆம் திகதி) பிரேஸில் - குரோஷியா அணிகளுக்கிடையிலான ஆட்டத்துடன் ஆரம்பமாகிய உலகக் கிண்ணத் தொடர், ஒவ்வொரு அணிகளினதும் அயராத ஆட்டம் காரணமாக ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக நடைபெற்றுவருகின்றன. அதேவேளை, மைதானத்துக்குள் ரசிகர்கள் செய்யும் ரகளைகளுடன் கூடிய குசும்புகள் கிளுகிளுப்பேற்ற, மைதானத்தில் களமாடும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தும் அதேவேளை, தமது அடாவடிகளையும் காட்டத் தவறவில்லை. அந்த வகையில் பல்வேறு பட்ட முரட்டு ஆட்டங்கள் காரணமாக பல வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் சில வீரர்கள் மைதானத்தைவிட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.
‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள நான்கு அணிகளுள் முதல் அணியாக கோஸ்டாரிக்கா (7 புள்ளிகள்) அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அதேவேளை, இங்கிலாந்து அணி (01 புள்ளி) வெளியேற்றப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும் இரண்டாவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் ஆட்டம் இத்தாலி (03 புள்ளிகள்) - உருகுவே (03 புள்ளிகள்) அணிகளுக்கிடையில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவும் போடாமல் முடிவடைந்தது. இதனால், பிற்பாதி ஆட்டத்தின் இரு அணி வீரர்களும் கடுமையாக முரட்டு ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தனர். இதன் பயனாக 59ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரரான மார்கிசியோ, உருகுவேயின் அரெவலோவை முரட்டுத்தனமாக காலால் உதைத்தமையால் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது இத்தாலி.
பின்னர் 81ஆவது நிமிடம் கிடைத்த ‘கோர்னர் உதை’ வாய்ப்பில், ராமிரெஸ் அடித்த பந்தை, அணித்தலைவர் தியாகோ காடின், தலையால் முட்டி கோல் அடிக்க, 1-0 என, உருகுவே முன்னிலை பெற்றது.
இந்தக் கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர் அதாவது, 79ஆவது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் சாரஸ், இத்தாலி வீரர் சியலினியின் இடது தோள்பட்டையில் கடித்தார். உடனே தனது ்டி சேர்ட்டை’ விலக்கி, சாரஸ் கடித்த இடத்தை போட்டி நடுவரிடம் தெரிவித்தபோதும், அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், இத்தாலி வீரர்கள் மாத்திரமின்றி உலக ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேவேளை, சாரஸ் தமக்கு சிவப்பு அட்டை கிடைத்து விடும் என்று பயந்தாரோ என்னவோ, தனது பற்களைப் பிடித்து வலியில் துடுப்பது போல் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
முன்னர் இத்தாலி வீரர் செய்த தவறுக்காக உடனேயே சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றிய நடுவர், இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டமையே இத்தாலியின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததுடன், அந்த அணி தொடரை விட்டு வெளியேறவும் காரணமாகிவிட்டது என பலரும் விமர்சிக்கின்றனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த கடிமன்னன் சாரஸ். இவர் விளையாட்டின்போது இவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொள்வது இது முதல் முறையல்ல.
2010ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் ஆம்ஸ்டர்டாம் அணிக்காக விளையாடிய இவர், எந்தோவன் அணியின் பக்கல் தோள்பட்டையில் கடித்தார். இதற்காக இவருக்கு 7 உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிரிமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணியில் விளையாடிய போது, செல்சி அணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி வீரர் இவானோவிச்சின், வலது கையில் கடித்தார். இதற்காக 10 போட்டிகளில் தடை கிடைத்தது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதியில், கானா அணி வீரர் தலையால் முட்டி கோல் அடிக்க முயன்ற போது, சாரஸ் தனது கையினால் வேண்டுமென்றே பந்தை வெளியே தட்டிவிட்டார். இதனால் தடை கிடைக்க, நெதர்லாந்துக்கு எதிரான அரையிறுதியில் பங்கேற்க முடியவில்லை.
அந்த வரிசையில் அவரது முரட்டுத்தனம் தற்போது இத்தாலி அணிக்கு எதிராகவும் அரங்கேறியுள்ளது. இவரது இந்த செயற்பாடு குறித்து பலரும் பல விதமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இனி, சுராஸைக் காண்டாலே எதிரணி வீரர்கள் கிலி கொள்ளாமல் இருக்க முடியாதுபோலும்.
No comments:
Post a Comment