எஸ்.ஜெயானந்தன்
முதல் ஆட்டம்!
20ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர் மிகுந்த பரபரப்புடன் பிரேஸிலில் நடைபெற்றுவருகின்றது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஏதோ ஒரு வகையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையிலேயே நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு அணிகளும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொண்ட முதலாவது ஆட்டங்களை எவ்வாறு ஆடியுள்ளன என்பதையும், ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்ற அணிகளுக்காகச் சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்தும், நிகழ்த்தப்பட்டசாதனைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது ஆட்டம் ஆரம்பமாக முன்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூன்று
சிறுவர்கள் வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிட்டனர்.
பின்னர் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு என்பதன் அடிப்படையில், பிரேஸிலுக்கு முதல் ஆட்டத்தில் ஆடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த அணியை எதிர்த்துக் களமிறங்கும் வாய்ப்பை குரேஷியா பெற்றிருந்தது.
இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தை குரோஷிய அணியினரே முதலில் பந்தை உதைத்து ஆரம்பித்து வைத்தனர். பின்னர் போட்டியின் ஆரம்பமே பிரேஸிலுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. பிரேஸிலின் பின்கள வீரரான மார்செலோ, தவறுதலாக சொந்தக் கோல் ஒன்றைப் போட்டு குரேஷியா அணிக்கு கோல் ஒன்றைச் சொந்தமாக்கினார்.
எனினும், பின்னர் வெகுண்டெழுந்த பிரேஸில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தனது ஆட்டத்தைக் காட்டினார். அவர் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் போட்டு அணியை சமநிலைப்படுத்தினார். பின்னர் இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். 70ஆவது நிமிடத்தில் பிரேஸில் வீரரான பிரட்டினை குரோஷிய வீரர்கள் இடித்துத் தள்ள, பிரேசிலுக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ‘பெனால்டி’ வாயப்பினையும் நெய்மர் கோலாக்கினார் (பின்னர் இந்த ‘பெனால்டி’ பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது).
இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்த பிரேஸிலுக்கு, அந்த அணியின் மற்றொரு வீரரான ஒஸ்கர், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் (90ஆவது நிமிடம்) கோல் ஒன்றைப் போட்டு அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற உதவினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பிரேஸில் வீரர் நெய்மர், இத்தொடரின் முதலாவது ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதேவேளை, எதிரணி வீரர் ஒருவரின் கழுத்தைப் பதம் பார்த்தமைக்காக மஞ்சள் அட்டையையும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் 3 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், முதலாவது ஆட்டத்தில் மெக்ஸிக்கோ மற்றும் கமரூன் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில், ஜியோவனி அடித்த கோல் ‘ஓப்சைடாக’ அறிவிக்கப்பட, மெக்சிக்கோ அணியினர் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல 16ஆவது நிமிடத்தில், கமரூன் அணியின் மத்தியகள வீரர் ஸ்டீபன் எம்பியா தலையால் முட்டி அடித்த கோல் ‘ஓப்சைட்’டானது. அந்த ஆட்டத்தின்போது அங்கு பெய்த விடாத மழையிலும் தொடர்ந்து போராடிய மெக்சிக்கோ அணிக்கு 30ஆவது நிமிடத்தில், ஜியோவனி தலையால் முட்டி மீண்டும் கோலடித்தார். அதுவும் ‘ஓப்சைட்’ என ‘துணை நடுவர்’
விசில் அடிக்க, முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது
ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் ஓ பெரெல்டா கோல் ஒன்றைப் போட்டார். இதனால், மெக்ஸிக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சான்டோஸுக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
அதேதினம் நடைபெற்ற மற்றொரு முக்கிய ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் ஸ்பெய்னுக்கு, நடப்பு உப சம்பியன் நெதர்லாந்து அதிர்ச்சிவைத்தியம் பார்த்தது. இந்த ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் ஸ்பெய்னுக்குக் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பினைப் பயன்படுத்திய அலோன்சோ, கோல் ஒன்றைப் போட்டார். இதையடுத்து போட்டி ஸ்பெய்ன் பக்கமே செல்வதாய் ஒரு மாயை தோன்றியது. எனினும், பந்தைத் தன் வசப்படுத்திக்கொண்டு ஆடிய நெதர்லாந்துக்காக, ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் முன்கள வீரரான பெர்சி, எங்கோயிருந்து ஓடி வந்து, பின்னர் பந்தை நோக்கிப் பாய்ந்து தலையால் முட்டி போட்ட கோல் அரங்கத்தையை அதிரவைத்ததுடன் நெதர்லாந்துக்கும் புத்துணர்ச்சி கொடுத்தது. இதன் பயனாக தொடர்ச்சியாக 53ஆவது நிமிடத்தில் ரொப்பனும், 65ஆவது நிமிடத்தில் டிவ்ரிஜ்ஜும் கோல்களைப் போட்டு அணியை 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில் மீண்டும் 72ஆவது நிமிடத்தில் பெர்சியும், 80ஆவது நிமிடத்தில் ரொப்பனும் தலா ஒவ்வொரு கோல் போட, ஆட்டத்தின் இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணியால் போடப்பட்ட ஒவ்வொரு கோலும் அற்புதமான முறையில் போடப்பட்டவை என்பது
சிறப்பம்சமாகும். இந்த ஆட்டத்தின் நாயகனாக பெர்சி தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் படுதோல்வியடைந்ததன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் நடப்பு சம்பியனாகக் களமிறங்கி முதல் போட்டியிலேயே மோசமாகத் தோற்ற அணிகள் வரிசையில் ஸ்பெய்ன் முதலித்தைப் பெற்றது. ஏற்கனவே இந்த இடத்தில் இத்தாலி (1950இல் 2 கோல்களை அடித்து 3 கோல்களை சுவிடனிடம் வாங்கியது) இருந்து வந்தது.
இப்போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற சிலி - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் சிலி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது. இந்த ஆட்டத்தில் சிலி அணிக்காக அலெக்ஸிஸ் 12ஆவது நிமிடத்திலும், வால்டிவியா 14ஆவது நிமிடத்திலும், பியூசெயோர் 90ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டனர். அவுஸ்திரேலியாவுக்காகப் போடப்பட்ட கோலை கஹில் 35ஆவது நிமிடத்தில் போட்டார். ஆட்டநாயகனாக சிலியின் அலெக்ஸிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடரின் மூன்றாவது நாள் நடைபெற்ற ஆட்டங்களில், கிரிஸுடனான ஆட்டத்தில் கொலம்பியா 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டதில் கொலம்பிய வீரர்களான ஆர்மெரோ 5ஆவது நிமிடத்திலும், ரியோ 58ஆவது நிமிடத்திலும், ஜமேஸ் 90ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார். ஆட்டநாயகனாக ஜமேஸ் தெரிவானார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கொலம்பிய அணி, உலகக் கிண்ணப் போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தனது சிறந்த வெற்றியையும் பெற்றுள்ளது.
அதேதினம் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணியை கோஸ்டரிக்கா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அதிர்ச்சியளித்தது. ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் உருகுவே அணி, ‘பெனால்டி’ உதை மூலம் கோல் ஒன்றைப் போட்டு முன்னிலை பெற்றபோதும், பின்னர் கோஸ்டரிக்கா
சார்பாக 54ஆவது நிமிடத்தில் கம்பெல்லும், 57ஆவது நிமிடத்தில் டுவார்டும், 84ஆவது நிமிடத்தில் உரேனாவும் தலா ஒரு கோலைப் போட்டு அணியை வெற்றிபெறச்செய்தனர். ஆட்டநாயகனாக கம்பெல் தெரிவுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து இங்கிலாந்து - இத்தாலி அணிகளுக்கிடையிலான ஆட்டமும் இதே தினமே நடைபெற்றது. இந்த ஆட்டம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதனால், பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் கோலை 35ஆவது நிமிடத்தில் இத்தாலியின் மார்சிசியோ உதைத்தார். பின்னர் பதிலுக்கு இரண்டு நிமிடங்கள் கழிந்தநிலையில் (37) இங்கிலாந்தின் ஸ்ருரிட்ஸ் கோல் ஒன்றைப் போட ஆட்டத்தில் மேலும் சூடு பறந்தது. ஆட்டம் 50ஆவது நிமிடத்தை எட்டியபோது இத்தாலியின் பலோடெலி, இங்கிலாந்து வீரர்களுக்குத் தண்ணிகாட்டிவிட்டு கோல் ஒன்றைப் போட்டு 2-1 என்ற கோல் அடிப்படையில் அணியை முன்னிலைப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் போடப்பட்ட கடைசிக் கோலாகவும் இதுவே அமைந்தமையால் இத்தாலி அணிக்கு வெற்றி கிட்டியது. வெற்றிக்கோலைப் போட்ட பலோடெலியே ஆட்டநாயகன் விருதையும் வென்றெடுத்தார்.
இவ்வாறு இத்தாலியிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி, 28 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்தது. கடைசியாக 1986இல் நடந்த உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, போர்த்துக்கல்லிடம் வீழ்ந்தது. இதுதவிர, 1977க்குப் பின்னர் முக்கியமான போட்டிகளில் இங்கிலாந்து அணி, இத்தாலியிடம் வெற்றி கண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐவேரி கோஸ்ட் அணி, 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் கோலை 16ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரரான ஹொண்டா போட்டார். பின்னர் ஐவேரி கோஸ்ட் வீரர்களான வில்பிறைட் 64ஆவது நிமிடத்திலும் கெர்வின்கோ 66ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிறப்பாகச செயற்பட்டமைக்காக ஐவேரிகோஸ்ட் அணித்தலைவர் யாயா ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.
15ஆம் திகதி நடைபெற்ற ஆட்டங்களைப் பொறுத்தவரையில் எக்குவடோரை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்து வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் கோலை 22ஆவது நிமிடத்தில் எக்குவடோர் வீரரான வலென்சியா போட்டார். பின்னர் தொடர்ந்து சுவிட்ஸர்லாந்து வீரர்களான மெஹ்மெடி (48 நிமிடத்தில்), செவெரோவிக் (90) ஆகியோர் தலா ஒரு கோலைப் போட, சுவிட்ஸர்லாந்து அணி வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சுவிட்ஸர்லாந்தின் எக்ஸ்கேர்டன் தெரிவுசெய்யப்பட்டார்.
பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியை பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் அடிப்படையில் இலகுவாக வீழ்த்தியது.
இந்தப் போட்டியின் 28, 45ஆவது நிமிடங்களில் முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக இரு தடவைகள் ‘மஞ்சள்’ அட்டை பெற்ற ஹோண்டுராஸ் வீரரான பலாசியஸ், சிவப்பு அட்டை பெற்று வெளியேற, அந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த ‘பெனால்டி’ (45ஆவது நிமிடத்தில்) வாய்ப்பின் மூலம் பென்செமா முதல் கோலைப் போட்டார். தொடர்ந்து ஹோண்டுராஸ் அணி பத்துப்பேருடன் ஆட நேர்ந்தது.
பதற்றத்துடன் ஆடிய ஹோண்டுராஸ் அணியின் கோல் எல்லைக்குள் பந்து சென்றபோது அதே அணி வீரரான வல்லடரெஸ் (48ஆவது நிமிடத்தில்), தவறுதலாக சொந்தக் கோலைப் போட்டுக்கொடுத்தார். இதனால், பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் மேலும் வலுவாகியது. தொடர்ந்து 72ஆவது நிமிடத்திலும் பிரான்ஸுக்குக் கோல் ஒன்று கிடைத்தது. அந்தக் கோலை பென்செமா போட்டார். ஆட்டநாயகனாகவும் அவரே தெரிவானார்.
அதேதினம் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நட்சத்திர வீரரான லயனல் மேஸி விளையாடும் ஆர்ஜென்ரீனா அணிக்கு, போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா அணி சிறு அதிர்ச்சி கொடுத்தது. இந்த ஆட்டத்தின் முதல் கோலை, 3ஆவது நிமிடத்தில் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா அணி வீரரான கொலாசினாக் சொந்தக் கோலாகப் போட ஆர்ஜென்ரீனாவுக்கு அது வாய்ப்பாக அமைந்தது. பின்னர் ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் மேஸி கோல் ஒன்றைப் போட, ஆர்ஜென்ரீனா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா அணியின் இபிசெவிக் கோல் ஒன்றைப் போட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து எந்தவொரு கோலும் போடப்படாமையால் ஆர்ஜென்ரீனா 2-1 என்ற கோல் அடிப்படையில் பதற்றத்துடனே முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ஆட்டநாயகன் விருது மேஸிக்கு வழங்கப்பட்டது.
இதேவேளை, ஏற்கனவே ஆர்ஜென்ரீனா அணியில் விளையாடிய ‘10’ எண் கொண்ட ‘ஜெர்சி’ அணிந்த ஏரியல் ஆர்டெகா, ஜமைக்கா அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் (1998, ஜூன் 21) போட்டியில் கோல் அடித்தார். இதன்பின்னர், இந்த எண் அணிந்த ஆர்டெகா (2002), ரிக்குயில்ம் (2006), மெஸி (2010) என எவரும் உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடிக்கவில்லை. 16 ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் 10 எண் அணிந்த மேஸி கோல் அடித்துள்ளார்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது நாளான 16ஆம் திகதி நடைபெற்ற ஆட்டங்களில் ஜேர்மனி - போர்த்துக்கல் அணிகளுக்கிடையிலான ஆட்டம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜேர்மனியின் முல்லெர் முறையே 12 (பெனால்டி), 45 மற்றும் 78ஆவது நிமிடங்களில் கோல்களைப் போட்டு ‘ஹெட்ரிக்’
சாதனை படைத்தார். இதற்கிடையில் 32ஆவது நிமிடத்தில் கும்மெல்ஸும் கோல் ஒன்றைப் போட்டிருந்தார். இதனால், 4-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றிபெற்றது. முல்லெர் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் இரண்டு கோல்கள் போடப்பட்ட பின்னர் ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரரான பெபே விதிமுறைக்கு மாறாக எதிரணி வீரரைக் கீழே தள்ளவிட்டு தலையில் தாக்கியமைக்காக
சிவப்பு நிற அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து போர்த்துக்கல் அணி 10 பேருடன் ஆடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த ஆட்டத்தில் போர்த்துக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவால் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1934ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கிண்ணத் தொடரில், முதன் முறையாக களமிறங்கிய ஜேர்மனி அணி, இந்த ஆட்டத்தில் பங்கேற்றதன்மூலம் உலகக் கிண்ணத் தொடர்களில் 100ஆவது போட்டியில் விளையாடியது. இதில் 61 வெற்றிகளையும், 20 தோல்விகளையும் பெற்றதுடன் 19 போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.
அதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகளில் முதலில் கோல் அடித்துத் தொடக்கிய அணிகளின் வரிசையில் ஜேர்மனி முதலிடம்பெற்று புதிய சாதனை படைத்தது. போர்த்துக்கலுக்கு எதிராக முதல் கோல் அடித்த ஜேர்மனி, 60ஆவது முறையாக இப்படித் தொடங்கியது. இதற்கு முன்னர் பிரேஸில் அணி 59 போட்டிகளில் (மொத்தம் 98) முதலில் கோல் அடித்து தொடங்கியுள்ளது.
அதேவேளை, முல்லெர் போட்ட ‘ஹெட்ரிக்’ கோல் உலகக் கிண்ண வரலாற்றில் 49ஆவது முறையாக அமைகின்ற அதேவேளை, நடப்புத் தொடரில் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க நடப்புத் தொடரின் ஐந்தாம் நாள் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈரான் - நைஜீரிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசிவரை இரு அணிகளாலும் கோல் எதையும் போட முடியவில்லை. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. ஆட்டநாயகனாக நைஜீரியாவின் மத்திய கள வீரரான மிகெல் தெரிவானார். நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் சமநிலையில் முடிந்த முதலாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது.
அந்த ஆட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கானா-அமெரிக்க அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அமெரிக்காவின் டெம்சே கோல் ஒன்றைப் போட்டு அசத்தினார். பின்னர் 82ஆவது நிமிடத்தில் கானாவின் அயேவ், பதில் கோல் போட ஆட்டம் 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையை எட்டியது. எனினும், 86ஆவது நிமிடத்தில் அமெரிக்கா சார்பாக பிறோக்ஸ் கோல் ஒன்றைப் போட்டு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற வழிவகுத்தார். ஆட்டத்தின் முதல் கோலைப் போட்ட டெம்சே ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
உலகக் கிண்ண வரலாற்றில் அதிவேகமாகப் போடப்பட்ட கோல்களுள் டெம்சேயால் போடப்பட்ட கோலும் ஒன்றாக (6ஆவது இடம்) அமைகின்றமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை, 2006 உலகக் கிண்ண லீக் சுற்றில் கானாவிடம் அடைந்த தோல்விக்கும், 2010 உலகக் கிண்ணத் தொடரின் ‘16 அணிகள்’ சுற்றுடன் வெளியேற நேர்ந்த கானாவுடனான தோல்விக்கும் அமெரிக்க அணி இந்தமுறை பழி தீர்த்தது.
16ஆம் திகதி நடைபெற்ற ஆட்டங்களைப் பொறுத்தவரையில், பெல்ஜியம் - அல்ஜூரியா அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் அல்ஜூரியாவுக்கு 25ஆவது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ உதையை அந்த அணி வீரரான பெகௌலி கோலாக மாற்றினார். இதன் பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. எனினும், பிற்பாதி ஆட்டத்தின் பிற்பகுதியில் வீறுகொண்டு எழுந்த பெல்ஜியம் வீரர்களான பெல்லைனி (71ஆவது நிமிடத்தில்), மேர்டென்ஸ் (80) ஆகியோர் தலா ஒரு கோலைப் போட்டு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறச் செய்தனர். ஆட்டத்தின் நாயகனாக பெல்ஜியம் சார்பாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய கெவின் டி புரூனி தெரிவுசெய்யப்பட்டார்.
வெற்றிபெற்ற பெல்ஜியத்துக்கும் ஜூன் 17இற்கும் தொடர்பு உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1954, ஜூன் 17) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டி, 4-4 என, சமநிலையானது. உலகக் கிண்ண வரலாற்றில் அதிகமான கோல் அடித்தும், சமநிலையான போட்டி இதுதான். அத்துடன், 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2002, ஜூன் 17) பெல்ஜியம் அணி, பிரேசிலுக்கு எதிராக விளையாடித் தோற்றது. மீண்டும் 12 ஆண்டுக்குப் பிறகு நடப்புத் தொடரில் அதே திகதியில் (ஜூன் 17) களமிறங்கிய இந்த அணி, 2-1 என அல்ஜீரியாவை வென்றுள்ளது.
இது இவ்வாறிருக்க, 2014ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் எதிர்கொண்ட முதலாவது ஆட்டம் என்ற அடிப்படையில் நடைபெற்ற கடைசியாட்டத்தில், ஆசிய அணிகளான ரஷ்யா மற்றும் கொரிய குடியரசு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலை மாத்திரமே போட்டமையால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. கொரிய குடியரசு சார்பாக 68ஆவது நிமிடத்தில் லீயும், ரஷ்யா சார்பான கோலை 74ஆவது நிமிடத்தில் கெர்ஷாகோவும் போட்டனர். ஆட்டநாயகனாக கொரிய குடியரசின் மத்திய கள வீரரான சொன் தெரிவுசெய்யப்பட்டார்.
ஒவ்வொரு அணிகளும் எதிர்கொண்ட முதல் போட்டிகள் முடிவையடுத்து அணிகளுக்கான இரண்டாவது போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இஇந்த ஆட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்தே ஒவ்வொரு அணிகளாக தொடரைவிட்டு வெளியேற ஆரம்பித்துள்ளன.
அதிலும், நடப்புச் சம்பியன் ஸ்பெய்னின் வெளியேற்றம்தான் பெரும் பரிதாபம். அந்த அணி நெதர்லாந்து மற்றும் சிலி அணிகளிடம் தோற்ற விதம் பரிதாபத்திலும் பரிதாபம்.
இங்கிலாந்து அணியும் முதலில் எதிர்கொண்ட ஆட்டங்களில் இத்தாலி, உருகுவே அணிகளிடம் தோற்றமையும் பரிதாபமே.
இப்பத்தி எழுதப்படும்வரை ஸ்பெய்ன், அவுஸ்திரேலியா, கமரூன் அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த அதேவேளை, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குள் நுழைந்திருந்தன.
No comments:
Post a Comment