எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (6)கடந்த வாரத் தொடர்ச்சி...
க.ளைகட்டும் உதைவிழா
ரேஸிலில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரை முன்னிட்டு இப்பத்தியில் கடந்த சில வாரங்களாக கடந்தகால உலகக் கிண்ணத் தொடர்களின் முக்கிய அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இனி இம்முறை நடைபெறவுள்ள 20ஆவது உலகக் கிண்ணத் தொடர் குறித்து இங்கு சிறிது ஆராய்வோம்.
1950ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்ற பிரேஸில், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை மீண்டும் பெற்றது.
அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் களைகட்ட ஆரம்பித்துள்ள உலகக் கிண்ணத் திரு
விழா, பிரேஸிலில் பெருமெடுப்பில் கொண்டாடப்படவுள்ளது.
பிரேஸில் நேரப்படி எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு (இலங்கை நேரப்படி 13ஆம் திகதி மு.ப. 01 மணி) ஆரம்பமாகும் இந்த விழா, பல்வேறு கட்டங்களைக் கடந்து அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைகிறது. முதலாவது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு என்ற ரீதியில் பிரேஸில் அணி, குரோஷியாவை எதிர்த்து ஆடுகின்றது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் 32 அணிகளும், தலா நான்கு அணிகள் வீதம் ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’, ‘ஈ’, ‘எப்’, ‘ஜி’, ‘எச்’ என எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம்பிடித்துள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதனடிப்படையில் முதல் சுற்றுப் போட்களில் ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளில் பங்கேற்கும்.
பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலை வகிக்கும் தலா இரண்டு அணிகள் அடுத்த சுற்றான ‘16 அணிகள்’ சுற்றுக்கு முன்னேறும். பின்னர் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று அதிலிருந்து அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகள் தெரிவுசெய்யப்படும். தொடர்ந்து அரையிறுதியாட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் இறுதியாட்டத்துக்கு முன்னேறும். பின்னர் இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, உலக சம்பியனாகவும், தோற்ற அணி இரண்டாவது அணியாகவும் அறிவிக்கப்படும். இதற்கிடையில், அரையிறுதியில் தோற்ற அணிகளுக்கிடையில் போட்டி ஒன்று நடைபெற்று அதில் வெற்றிபெறும் அணி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்.
இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளுள் உலகக் கிண்ணத்தை வெல்லும் அணியாக போட்டியை நடத்தும் பிரேஸில் முதலிடத்தில் வைத்துக் கணிக்கப்படுகின்றது. ஏற்கனவே அந்த அணி 5 தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்று அதிக தடவைகள் வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள அதேவேளை, இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றி ஏனைய அணிகளால் தற்போதைக்கு எட்ட முடியாத எல்லையை அடையப் போகிறது என விளையாட்டு நிபுணர்கள் கணிப்பிட்டுள்ளனர்.
இது தவிர அடுத்த இடத்தில் நடப்புச் சம்பியனான ஸ்பெய்ன் மீதும் அதிகளவில் எதிர்பார்ப்புக் கிளம்பத்தவறவில்லை. அந்தளவுக்கு அந்த அணியின் திறன் மேலோங்கிக் காணப்படுகிறது.
இவை தவிர, நெதர்லாந்து, ஆர்ஜென்ரீனா, உருகுவே, இத்தாலி, ஜேர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அணிகள் மீதும் எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை. பிரபல நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் போர்த்துக்கல் அணி மீது அவ்வளவாக எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கவில்லை. ரொனால்டோ உலக முதல் தர வீரராக இருக்கின்றபோதும், அந்த அணியின் அண்மைக்கால ஒட்டுமொத்த செயற்பாடுகள் அவ்வளவாக சொல்லும்படியாக இல்லை என்பதே இதற்குக் காரணமாக அமைகின்றது.
இது இவ்வாறிருக்க, ஒவ்வொரு அணியும் இடம்பிடித்துள்ள பிரிவுகளடிப்படையில் அவை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித்துப் பார்த்தால்,
‘ஏ’பிரிவில் இடம்பிடித்துள்ள போட்டியை நடத்தும் பிரேஸிலுக்கு முதல் சுற்றைத் தாண்டுவது பெரிய பிரச்சினையாக இருக்காது. ஏனெனில், பிரேஸிலுக்குச் சவால் விடுக்கும் வகையில் மிகப் பலமான அணிகள் அந்தப் பிரிவில் இல்லை.
அதேபோல, ‘பி’ பிரிவிலிருந்து உலகக் கிண்ண நடப்பு சம்பியன் ஸ்பெய்ன் மற்றும் நடப்பு இரண்டாவது அணியான நெதர்லாந்து ஆகிய அணிகள் இரண்டாவது சுற்றான ‘16 அணிகள்’ பிரிவுக்கு முன்னேறும். ‘சி’ பிரிவைப் பார்த்தால் அங்கே எந்த அணி வேண்டுமென்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதில், இடம்பிடித்துள்ள ஜப்பான், எமது கண்டத்தைப் (ஆசியக்கண்டம்) பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘டி’ பிரிவை எடுத்துக்கொண்டால் அங்கே உரு குவே, இத்தாலி, இங்கிலாந்து அணிகளுக்குள் பெரும் போராட்டம் நிகழும். இவற்றுள் எதாவது இரு அணிகளே அடுத்த சுற்றை எட்டும் நிலையுள்ளது. அதே பிரிவில் இடம்பிடித்துள்ள கோஸ்டாரிக்கா எதாவது அதிசயங்களை நிகழ்த்தினால் அடுத்த சுற்றை எட்டலாம்.
‘ஈ’ பிரிவிலிருந்து பிரான்ஸ் அணி முன்னேறக்கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன. ஏனைய மூன்று அணிகளுள் எதாவது ஒன்று போராட்டத்துக்கு மத்தியில் அடுத்த சுற்றை எட்ட முற்படும். அதிலும் சுவிட்ஸர்லாந்துக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன.
அதேபோல, ‘எப்’ பிரிவை எடுத்துக்கொண்டால் அங்கு ஆர்ஜென்ரீனாவின் ஆதிக்கமே உள்ளது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி எதிரணிகளின் கோல் எல்லைகளுக்குள் புகுந்து விளையாடக்கூடும். எனவே, அந்த அணி முதல் சுற்றை இலகுவாகக் கடக்கும். ஏனைய அணிகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று கடுமையாகப் போட்டி போட்டு அடுத்த சுற்றை எட்ட முனையும்.
‘ஜி’ பிரிவில் ஜேர்மன், போர்த்துக்கல் அணிகள் முன்னிலை வகிக்கின்றபோதும், ஏனைய அணிகளான கானா மற்றும் அமெரிக்காவும்
சவால் விடுக்கக்கூடியவை. போர்த்துக்கல் அணியில் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மோலோங்கும் என எதிர்பார்க்கலாம்.
‘ஈ’ பிரிவைப் பொறுத்தவரையில் பெரியளவில் சாதிக்கக்கூடிய அணிகள் எதுவும் இல்லை. எனினும், இந்தப் பிரிவில் இடம்பிடித்துள்ள ஒவ்வொரு அணிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. (போட்டி குறித்த அட்டவணைகள் அருகில் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கவனிப்பதன் மூலம் போட்டி நடைபெறும் முறைமை குறித்த முழுமையான தெளிவைப் பெறலாம்)
முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்தபின்னர், ‘16 அணிகள்’ சுற்று ஆரம்பித்தவுடனேயே அந்தச் சுற்றுக்குள் நுழைந்த அனைத்து அணிகளுமே பெரும் சவால்களை எதிர்கொண்டே அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறும் நிலையுள்ளது. எனவே, இந்தத் தொடர் உலக உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதை சுட்டிக்காட்டித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய தில்லை.
(முற்றும்)
No comments:
Post a Comment