Monday, November 10, 2014

மிரட்டிய பாகிஸ்தானும் மிரண்டுபோன ஆஸியும்

அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தரம், 20 ஆண்டுகளின் பின்னர் உயர்வடைந்துள்ளதால் அந்த அணி குறித்த பேச்சே கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த மாதம் பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மூன்று வகையான போட்டிகள் கடந்த மாதம் 5ஆம் திகதி முதல் இந்த மாதம் 3ஆம் திகதிவரை நடைபெற்றன.

இதில், அவுஸ்திரேலிய அணி ‘இருபது-20’ ஒரே ஒரு போட்டியையும், 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் வென்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
கடந்த மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதிவரையான முதலாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸிற்காக பாகிஸ்தான் அணி யூனுஸ்கான் (106), சர்ப்ராஸ் அஹமட் (109) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 454 ஓட்டங்களைச் சேர்த்தது. அவுஸ்திரேலியா சார்பாக பந்துவீச்சில் ஜோன்ஷன் அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸிற்காக ஆடிய அவுஸ்திரேலியா, டேவிட் வோர்னரின் சதம் (133) கைகொடுக்க 303 ஓட்டங்களைச் சேர்த்தது. பாகிஸ்தான்
சார்பாக பந்துவீச்சில் யாசிர் ஷகா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய பாகிஸ்தானுக்கு முதல் இன்னிங்ஸைப் போலவே இரு வீரர்கள் சதம் அடித்தனர். அஹமட் ஷெஹ்செட் (131) மற்றும் யூனுஸ்கான் (103*) ஆகியோர் அடித்த சதங்களுடன் 286 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் மாத்திரம் பறிகொடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை 438 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் நான்காம், ஐந்தாம் நாட்களில் ஆடிய அவுஸ்திரேலியா, 216 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்த நிலையில் 221 ஓட்டங்களால் தோல்வியைச் சந்தித்து.
இந்த ஆட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் பாகிஸ்தானுக்காகச் சதம் விளாசிய யூனுஸ்கான் ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
இந்நிலையில், இரண்டாவது ஆட்டம் கடந்த 30ஆம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானின் அஸார் அலி (109), மிஸ்பா உல் ஹக் (101) ஆகியோரின் சதங்களும் யூனுஸ்கானின் இரட்டைச் சதமும் (213) கைகொடுக்க பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 570 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியாவால் 261 ஓட்ங்களையே சேர்க்க முடிந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சாளரான இம்ரான்கான் ஆகக்கூடுதலாக 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, அஷார் அலி (100*), மிஸ்பா உல் ஹக் (101*) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் 293 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் நான்காம் நாளில் 603 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஐந்தாம் நாளில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 246 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இந்த ஆட்டத்தில் 356 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் தன்வசப்படுத்திக்கொண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சார்பாக பந்துவீச்சில் கலக்கிய பாபர் 5 விக்கெட்டுகயைச் சாய்த்திருந்தார்.
இந்த ஆட்டத்தின் நாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய மிஸ்பா உல் ஹக் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக யூனுஸ்கான் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி வெல்வது 20 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1994ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று இருந்தது.
அதேவேளை, 2 ஆட்டங்கள் கொண்ட இந்த போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் 9 சதங்கள் அடித்து அசத்தினார்கள். கிரிக்கெட்டில் முன்னிலையில் உள்ள 8 அணிகளுக்கு எதிரான  2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் எந்தவொரு அணியும் 6 சதங்களுக்கு மேல் இதுவரை அடித்ததில்லை.
இத்தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி (105 புள்ளிகள்)  டெஸ்ட் தர வரிசையில் 6ஆவது இடத்திலிருந்து 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றபோதே பாகிஸ்தான் அணி கடைசியாக 3ஆவது இடத்தை பிடித்தது. தற்போது 7 வருடங்களின் பின்னர் மீண்டும் 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அத்துடன், மிஸ்பா உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இது 14ஆவது டெஸ்ட் வெற்றியாகும். இதன்மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணித் தலைவர்களான இம்ரான்கான், ஜாவித் மியாண்டட் ஆகியோருடன் மிஸ்பா சமநிலையிலுள்ளார்.
அதேவேளை, டெஸ்ட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் சந்தித்த 3ஆவது மோசமான தோல்வி இதுவாகும். ஏற்கனவே 1928ஆம் ஆண்டில் பிரிஸ்பேர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 675 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 1980ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 408 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தோற்று இருந்தது.
மொத்தத்தில்  பாகிஸ்தான் அணியின் தரம் தற்போது மேலும் உயர்ந்துள்ளது. அதேவேளை, யூனுஸ்கானுக்கும் தனது திறமை மழுங்கவில்லை என்பதை தக்க முறையில் வெளிக்காட்டுவதற்கும் இத்தொடர் கைகொடுத்துள்ளது.

எஸ்.ஜெயானந்தன்

No comments:

Post a Comment

Total Pageviews

8,866