சிறந்த திட்டமிடல்கள், பயிற்சிகள் இன்றி அணியை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பியதால் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது? மாறாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் மேலும் மேலும் குழப்ப நிலை ஏற்படும் சந்தர்ப்பமே உருவாகியுள்ளதுஇலங்கைக் கிரிக்கெட் சபையின் உயரதிகாரிகளுக்கிடையில் நிகழும் பனிப்போர், வீரர்கள் - அதிகாரிகளுக்கிடையில் நிகழும் மறைமுக மோதல்
எனப் பல்வேறு வடிவங்களில் இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் பெரும் குழப்பங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பாலியல் லஞ்ச’ விவகாரம் பூதகரமான சமகாலகட்டத்தில், இலங்கைக் கிரிக்கெட் அணியை பலவந்தமாக இந்தியா சென்று விளையாடுமாறு கிரிக்கெட் சபை பணித்தமையும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக மெதுமெதுவாகத் தயாராகிக்கொண்டிருந்த இலங்கை அணியினர், இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ரத்தானதால் அந்தத் தொடரில் பங்கேற்பதற்காக திடீரென அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்திய - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு இருபது-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளை ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதிவரை நடாத்த ஏற்பாடாகியிருந்தன.
எனினும், முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்
சபையுடன் அந்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு ஏற்பட்டிருந்த சம்பள விவகாரம் பூதாகரமானதையடுத்து அத்தொடர் பாதியில் கைவிடப்பட்டது.
இதையடுத்து இந்தியக் கிரிக்கெட்
சபை தமக்கு ஏற்படவிருந்த இழப்பை ஓரளவுக்குச் சரிசெய்யும் நோக்கில், அவசர அவசரமாக இலங்கைக் கிரிக்கெட் அணியை இந்தியா வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தது. அதற்கு இலங்கைக் கிரிக்கெட் சபையும் சரியென தலையை ஆட்டியது.
ஏற்கனவே இந்தியக் கிரிக்கெட்
சபையுடன் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையைத் தணிப்பதற்குச் சரியான தருணமாகக் கருதி கிரிக்கெட் சபை எடுத்த இந்த முடிவால் இலங்கை வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்தியத் தொடரில் விளையாடுவதற்கான எந்தவொரு தயார்படுத்தல்களையும் வீரர்கள் மேற்கொள்ளாமையும், அவர்களுக்குத் திடீரென ஒரு போட்டித் தொடரைத் திணிப்பதால் அவர்களின் உடல் மற்றும் மன அளவில் பெரும் சோர்வு நிலையையே ஏற்படுத்தும். இது வீரர்களது வாதம் மாத்திரமின்றி, கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரதும் கருத்தாகவும் இருந்தது. எனினும், இவற்றைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி அனுப்பிவைக்கப்பட்டது.
கடந்த 2ஆம் திகதிமுதல் 16ஆம் திகதி வரை நடைபெற்ற 5 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்பதற்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வீரர்கள் முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்கினார். இலங்கை அணி மூன்று போட்டிகளிலும் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இறுதி இரண்டு போட்டிகளிலும் சங்கக்கார, சுராஜ் ரண்டீவ், உபுல் தரங்க, தம்மிக பிரசாத் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இவர்களுக்குப் பதிலாக லஹிரு திரிமன்னே, தினேஸ் சந்திமால், அஜந்த மெண்டிஸ், சமிந்த எரங்க ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து, அணி தோல்விப்பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அணியிலிருந்து தன்னை
நீக்கியதற்கு சங்கக்கார எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், மஹேல ஜெயவர்தன, தான் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் ஆரம்ப வீரராகக் களமிறங்க விரும்புகிறார் எனவும், அதிகாரிகளே தன்னை மத்திய வரிசையில் களமிறக்குகின்றனர் எனவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இலங்கைக் கிரிக்கெட் அணித் தெரிவுக்குழுத் தலைவர்
சனத் ஜெயசூரிய, சங்கக்கார மற்றும் மஹேலவை இனிமேல் உயர்மட்டக் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், அவர்கள் உள்ளக விவகாரங்களை வெளிப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்ததுடன், வீரர்கள் எந்த வரிசையில் விளையாடவேண்டும் என்பதை தெரிவுக்குழுவினர்தான் தீர்மானிப்பர் என மஹேலவின் கருத்துக்கு பதிலடி கொடுத்ததுடன், முதல் மூன்று போட்டிகளில் மாத்திரம்தான் சங்கக்கார பங்கேற்பார் என்பதை அவரிடம் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம் எனவும் கூறியிருந்தார்.
இத்தகைய பல்வேறு முரண்பாடுகளுடன் இந்தியாவில் விளையாடிய இலங்கை அணி, குறித்த ஐந்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பெரும் அவமானத்துடன் நாடு திரும்பியது.
1983இல் இந்தியாவுடன் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை முழுமையாக இழந்தமையே இலங்கை அணியின் மோசமான தோல்வியாகக் கருதப்பட்டது. தற்போது 31 வருடங்கள் கழிந்த நிலையில் அந்த அவமானம் மீண்டும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக முந்தியடித்துக்கொண்டு சென்று மூக்குடைபட்டு வந்துள்ள இலங்கை அணியின் இந்த நிலைமை மிகவும் வருந்தற்குரியதாகும்.
சிறந்த திட்டமிடல்கள், பயிற்சிகள் இன்றி அணியை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பியதால் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது? மாறாக இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் மேலும் மேலும் குழப்ப நிலை ஏற்படும் சந்தர்ப்பமே உருவாகியுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்தபோது, அணித்தலைவராகச் செயற்பட்ட அஞ்சலோ மத்யூஸ் துடுப்பாட்ட வீரர்களைக் கடுமையாகச் சாடியிருந்தமையைக் குறிப்பிட்டலாம்.
அதேவேளை, இலங்கை அணியின் இந்தத் தொடர் குறித்த சர்ச்சை பாராளுமன்றம் வரை சென்றுள்ளமை அதன் விபரீதத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
இதுகுறித்து பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அணித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க,
இந்தத் தொடர் வேண்டத் தகாத - திட்டமிடல்கள் இல்லாத தொடர். விளையாட்டுத்துறை அமைச்சர் வைக்கோல் பொம்மையாகவுள்ளார். அவரே இத்தோல்விக்கான பொறுப்பை ஏற்கவேண்டும். அத்துடன், இலங்கைக் கிரிக்கெட், இந்தியக் கிரிக்கெட் சபைக்கு அடிமையாகிவிட்டது" எனச் சாடியிருந்தார்.
இதுகுறித்து தனது வாதத்தை முன்வைத்த கிரிக்கெட் அணித் தெரிவுக்குழுத் தலைவரும் பிரதியமைச்சருமான சனத் ஜெயசூரிய,
இலங்கை அணி அடைந்த தோல்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எந்த வகையிலும் பொறுப்பானவர் அல்லர். அணித் தெரிவுக்குழுத் தலைவர் என்ற ரீதியில் நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன். இந்தியாவுடனான தொடர் இலங்கையின் இளம் வீரர்களுக்கு சிறந்ததொரு களமாக அமைந்தது. அடுத்து வரும் தொடர்களுக்காக இங்கு மூத்த வீரர்களுக்கு ஓய்வும் வழங்கப்பட்டிருந்தது" என்றார்.
யார் என்ன கருத்தைக் கூறியிருந்தாலும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள பெருந் தொடர்கள், உலகக் கிண்ணத் தொடருக்கான போதிய பயிற்சிகளைக் கொடுக்கவல்லனவாகவே உள்ளன.
அதைவிடுத்து இந்தியக் கிரிக்கெட் சபையைத் திருப்திப்படுத்துவதற்காக, இலங்கை அணியின் உலகக் கிண்ணத் தொடருக்கான தயார்படுத்தல்களின் சமச்சீர்த் தன்மையைக் குழப்பி விடும் வகையில் எடுக்கப்பட்ட அவசர முடிவை நியாயப்படுத்த முனைவது எந்த வகையிலும் நியயாயமாக அமையாது.
இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயலானது உண்மையிலேயே, ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவரை அவரது உடல் வலுவுக்கு அப்பால் பணி புரியுமாறு கட்டாயப்படுத்துவது போன்ற அடாவடித்தனமான செயலாகவே கருதமுடியும். அதைவிடுத்து இதை நியாயப்படுத்த முனைவது கேலிக்குரியதாகவே அமையும்.
இந்தியத் தொடர் இலங்கையின் இளம் வீரர்களுக்கு சிறந்தகளமாக அமைந்துள்ளது என
சனத் ஜெயசூரிய கூறிய கருத்து பெரியளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
இந்தத் தொடரில் இலங்கை அணி தோற்ற விதம் இலங்கை வீரர்களிடம் மனதளவில் பெரும் சோர்வையே ஏற்படுத்தியிருக்கும். அதைவிடுத்து அந்தத் தோல்வி சிறந்த களமாக எந்த வகையில் அமைய முடியும்?
இந்தியா, தான் எதிர்பார்த்ததுபோல இலங்கையை அழைத்து மேற்கிந்தியத் தீவுகளால் தமக்கு ஏற்படவிருந்த இழப்பீட்டை ஓரளவுக்குச் சரிசெய்ததோடு, தொடர் வெற்றிகொண்டது மாத்திரமின்றி பல சாதனைகளையும் தன் வசப்படுத்திக்கொண்டது. ஆகவே, இத்தொடர் குறித்து இந்தியா முழுத் திருப்தியும் அடைந்திருக்கும்.
ஆனால், இலங்கைக் கிரிக்கெட்டின் நிலைமைதான் பரிதாபமாகச் சென்றுவிட்டது.
மொத்தத்தில் இலங்கைக் கிரிக்கெட்டின் அண்மைக்காலச் செயற்பாடுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் குழப்பம் மிகுந்ததாகக் காணப்படும் அதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் சபை இந்தியக் கிரிக்கெட் சபையின் கைப்பிள்ளையாகவே செயற்படுகிறது என்பதும் புலனாகும்.
அந்த வகையில் இலங்கைக் கிரிக்கெட் சபை, தமது அணியை இந்தியாவுக்கு அனுப்பியதன் மூலம் இந்தியக் கிரிக்கெட் சபையை திருப்திப்படுத்தியுள்ளது. அதேவேளை, அத்தொடருக்குத் தயாராகாத இலங்கை அணி, படுதோல்வியடைந்து இந்திய அணியைத் திருப்திப்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டியுள்ளது.
எஸ்.ஜெயானந்தன்
No comments:
Post a Comment