எஸ். ஜெயானந்தன்
2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின்போது அவுஸ்திரேலிய சர்வதேச அணியில் இடம்பிடித்திருந்த பிலிப் கியூஸ், எதிரணி வீரரின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஓரிரு தினங்களில் மரணத்தை எட்டியமை கிரிக்கெட் உலகை மாத்திரமின்றி விளையாட்டு உலகையே கலங்க வைத்தது.
இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு சில தினங்களில் இஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் நடுவராகக் கடமையாற்றியபோது, பந்துத் தாக்குதலுக்குள்ளாகி இறந்தார்.
அண்மையில் இந்திய உள்ளூர் போட்டி ஒன்றில் இளம் வீரர் ஒருவரும் இவ்வாறு ஆடுளகத்தில் இறந்தார்.
இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டால் ஏற்படும் மரணங்களின் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நம்மவர் ஒருவர் இரையாகியுள்ளமையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2005ஆம் ஆண்டு ்பிரிட்டன் தமிழர்களால் ‘பிரிட்டன் தமிழர்கள் கிரிக்கெட் லீக் அமைப்பு’ ஒன்று தொடங்கப்பட்டது. இதில் பெரும்பாலான இங்கிலாந்து வாழ் இலங்கைத் தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2006ஆம் ஆண்டு முதல் பல்வேறு கிரிக்கெட் கழகங்கள் இணைக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த கிரிக்கெட் லீக்கில் தற்போது 1000 இளம் தமிழ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 32 கழகங்கள் இதில் இணைந்துள்ளன.
இந்தக் கழகங்களுக்ளுக்கிடையில் நடைபெற்றுவரும் தொடரிலேயே மானிப்பாய் பரிஸ் அணிக்காக பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்றவருமான பத்மநாதன் பாவலன் பங்கேற்றார்.
கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்ட பாவலனால், அந்தப் பந்தைத் தடுக்கமுடியாமல்போக அது அவரது நெஞ்சில் தாக்கியது.
இதனால் சற்று நிலை குலைந்த பாவலன் ஆடுகளத்தை விட்டு வெளியேற முயன்றபோது தடுக்கிக் கீழே விழுந்தார்.
இதனையடுத்து அம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இவரது இழப்புக்குப் பல தரப்பினரும் அனுதாபங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியதுடன், தனது திறமை மூலம் கல்லூரிககு வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்துள்ளார். இதன் பயனாகவே மானிப்பாய் பரிஸ் கழகத்திலும் இடம்பிடிக்க முடிந்தது.
அண்மைக்காலமாக இத்தகைய உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இது விளையாட்டுலகத்தினரை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.உள்ளூர் போட்டிகளிலேலேய அண்மைய மூன்று உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
இதற்குக் காரணம் என்ன? உள்ளூர் போட்டிகளில் விளையாட்டுக்கான போதிய பாதுகாப்பு அல்லது உத்திகள் இல்லையா? அதாவது களத்தில் விளையாடும் வீரர்கள் பந்துகளை எதிர்கொள்வதற்கும் அவை தம்மைத் தாக்குவதையும் தவிர்ப்பதற்கான வழி வகைகளை அறியாதவர்களாக உள்ளனரா? வன் பந்துகளில் விளையாடும் உள்ளூர் கழக வீரர்களுக்கு அத்தகைய பயிற்சிகள் முறையாக வழங்கப்படுவதில்லையா?
இவ்வாறு பல்வேறுபட்ட கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியே ‘கிரிக்கெட் கொலைகள்’ தொடர்ந்தவண்ணம் இருந்தால் இந்த விளையாட்டைத் தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்து போகலாம்.
எனவே, கிரிக்கெட்டில் சில விதி முறைகளை மாற்றியமைத்து அந்த விளையாட்டை விளையாட வருபவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது ஐ.சி.சியின் கடமையாகும்.
இல்லையேல் இத்தகைய கள மரணங்களைக் கண்டு தமது பிள்ளைகளைப் பெற்றோர் இந்த விளையாட்டுக்கு அனுமதிக்கப் பின்னடிப்பர்.
எனவே, கிரிகெட்டுக்கு பரபரப்பு வேண்டும் என்பதற்காகப் புதிய புதிய அதிரடி விதிகளை அறிமுகப்படுத்தும்போது, களத்தில் வீரர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும். இல்லையேல் இத்தகைய ‘கிரிக்கெட் கொலைகள்’ தொடரத்தான் செய்யும்.
No comments:
Post a Comment