Sunday, March 13, 2016

விளையாட்டு என்பது சாதாரண ஒரு மனிதனைக் கூட உலகப் பிரபல்யம் மிக்கவராக மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த துறை. இத்தகைய பிரபல்யமான விளையாட்டால் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் மனிதர்கள் பெருமளலில் சம்பாதிக்கக்கூடியவர்களாக மாறும் அதேவேளை, அவர்களுக்கு என்று ஒரு தனியான ரசிகர் கூட்டமும் கூடிவிடும்.

இத்தகைய பெருமைக்குரியவர்தான் ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, இவர் தனது 14ஆவது வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். பின்னர் தனது திறமையின் அடிப்படையில் டென்னிஸ் போட்டிகளில் வெற்றிவாகை சூட ஆரம்பித்தார்.
தான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்து (2001) மூன்று வருடங்களிலேயே (2004ஆம் ஆண்டு) டென்னிஸின் உயரிய கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓப்பின் பட்டத்தைக் கைப்பற்றி, மிகச்சிறிய வயதில் (17) கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் வீராங்கனை என்ற பெயரைப் பெற்றார். அதன் தொடர்ச்சியாக நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற அவர் மொத்தம் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வௌ்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் முதலிடத்திலும் அமரத் தவறாத இவர், தற்போது 7ஆவது நிலையில் உள்ளார்.
இவற்றுக்கு அப்பால் கடந்த 11 ஆண்டுகளாக உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை என்ற உயர் அந்தஸ்தையும் தனதாக்கிக்கொண்டுள்ளார். விளையாட்டில் மாத்திரமின்றி மொடலிங் துறையிலும் தனது அழகால் ரசிகர்களைக் கவர்ந்த அவர், அழகிய மங்கையாகவும் வலம் வருகிறார்.
இத்தகைய சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருந்த மரியா ஷரபோவாவை அவரது பரம்பரை நோயான நீரிழிவு நோய் தாக்கத் தவறவில்லை.இதற்காக அவர் மெல்டோனியம் அடங்கிய மருந்தை கடந்த 10 வருடங்களாக உட்கொண்டு வந்துள்ளார். இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து ஊக்க மருந்து வகைகளுள் மெல்டோனியமும் அடக்கப்பட்டு விளையாட்டு நட்சத்திரங்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த அறிவித்தலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஷரபோவாவுக்கு ஈமெயில் மூலம் அறிவித்திருந்தது. எனினும், அதனை அவர் சரியாகப் படிக்கவில்லை போலும்.
இந்த நிலையில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஷரபோவா முதல்முறையாக ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மெல்போர்ணில் நடந்த அவுஸ்திரேலிய ஓப்பின் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சொீனா வில்லியம்ஸிடம் தோல்வி கண்ட ஷரபோவாவுக்கு, போட்டிக்கு முன்பு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளார். இதன் தாக்கம் தற்போதே வௌிவந்துள்ளது. இதனால் சர்வதேச டென்னிஸ் சம்மேளம் அவர் விளையாட இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தத் தடை நேற்று முதல் (12ஆம் திகதி) அமுலுக்கு வந்துள்ளது.
ஊக்க மருந்து சோதனையில் சிக்கும் நட்சத்திரங்களுக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கமுடியும் என்பது சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் விதிமுறை
யாகும். இதன் அடிப்படையில் தடை விதிக்கப்படுமாயின் தற்போது 29 வயதான ஷரபோவாவின் டென்னிஸ் பயணம் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனினும், முதல் தடவையாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கினாலோ அல்லது வேண்டுமென்றோ தவறை செய்யவில்லை என்று தெரிந்தாலோ தண்டனையைக் குறைப்பதற்கான வழிவகைகள் உள்ளன. இதனால் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஷரபோவா விடயத்தில் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்புக் கிழம்பியுள்ளது.
இவர் மீதான தடை அமுலுக்கு வந்ததால் அவருடனான வர்த்தக உறவை ‘நைக்’ நிறுவனம் முறித்துக்கொண்டுள்ளது. நைக் நிறுவனம் 2010ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்கு இலங்கைப் பெறுமதியில் சுமார் 1,000 கோடி ரூபாவுக்கு ஷரபோவாவை விளம்பர ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிறுவனம் மாத்திரமின்றி வேறு சில நிறுவனங்களும் அவருடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிசீலனை செய்து வருகின்றன.
பெரும் சிக்கலில் சிக்கியுள்ள இவருக்கு முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் வழங்கும் ஆதரவே தற்போதைக்கு ஆறுதலான விடயம்.
டென்னிஸை மிகவும் ஆழமாக நேசித்து வந்த ஷரபோவா, பல்வேறு நெருக்கடிளுக்கு மத்தியிலும் தனது டென்னிஸ் பயணத்தை இத்தகைய அவப்பெயருடன் முடிக்கவிரும்பவில்லை. தனது பயணம்  தொடரும் என்ற நம்பிக்கையில் அவர் டென்னிஸ் பயிற்சிகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளார். அவரது முயற்சி - நேர்மைத்தன்மை உயிர்பெற்று மீண்டும் அவர் களமிறங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்போமாக...

எஸ்.ஜெயானந்தன்

No comments:

Post a Comment

Total Pageviews

8,866