Monday, May 18, 2015

‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’

 பரபரப்புக் கட்டம்!
ரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தினால் 1955ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது ‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’ தொடர். ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சம்பியன் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்டதுடன், இத்தொடர் ஐரோப்பிய கிண்ணம் எனவும் அழைக்கப்பட்டது.

பின்னர் 1992ஆம் ஆண்டு ‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கப்பட்டது. அத்துடன், ஒரு நாட்டிலிருந்து ஓர் அணி அல்லாமல் மேலும் சில அணிகளும் பங்கேற்கும் வகையில் போட்டி முறை மாற்றியமைக்கப்பட்டமையால் முதல் தர அணிகளுக்கு இதில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இவ்வாறு மாற்றம் பெற்றுள்ள சம்பியன்ஸ் லீக் தொடரின் 2014-2015 பருவகாலத்துக்கான போட்டிகள் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது.
இத்தொடரின் ஆரம்பப் போட்டிகள் குழு நிலைப் போட்டியாகவே நடைபெற்றது. அதன்படி இதில் பங்கேற்ற 32 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தமது பிரிவிலுள்ள ஏனைய மூன்று அணிகளுடனும் தலா 2 போட்டிகளில் பங்கேற்றன. இதன்படி குழுநிலைப் போட்டிகளில் ஓர் அணி மொத்தம் 6 போட்டிகளில் பங்கேற்றது.
பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள், அடுத்த சுற்றுக்கு (16 அணிகள்) முன்னேறின. இந்தச் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் வேறொரு அணியுடன் தலா இரண்டு போட்டிகளில் போட்டியிட்டன. இரு போட்டிகளடிப்படையில் கூடுதலான கோல்களைப் போட்ட அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றன. இச்சுற்றும் 16 அணிகள் பங்கேற்ற சுற்றுப் போலவே நடைபெற்றது.
பின்னர் இச்சுற்றிலிருந்து நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதன்படி அரையிறுதிச்சுற்றில், ஸ்பெய்னைச் சேர்ந்த பார்ஸிலோனா அணி, ஜேர்மனியின் பெயன் முனிச் அணியையும், ஸ்பெய்னைச் சேர்ந்த மற்றொரு அணியான ரியல் மார்டிட் அணி, இத்தாலியின் ஜூவென்ரஸ் அணியையும் எதிர்கொண்டன. அரையிறுதிச் சுற்றிலும் ஒவ்வொரு அணிகளும் இரு ‘லெக்’ ஆட்டங்களில் பங்கேற்றன.
அதன்படி கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ரியல்மார்டிட்-ஜூவென்ரஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது ‘லெக்’ ஆட்டத்தில் ஜூவென்ரஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்த ஆட்டத்துக்கு அடுத்த தினம் நடைபெற்ற பார்ஸிலோனா-பெயன்முனிச் அணிகளுக்கிடையிலான முதலாவது ‘லெக்’ ஆட்டத்தில் பார்ஸிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற பார்ஸிலோனா-பெயன் முனிச் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ‘லெக்’ ஆட்டத்தில் பெயன் முனிச் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. எனினும், இரு அணிகளும் காலிறுதியின் இரு லெக் ஆட்டங்களிலும் பெற்ற கோல்கள் அடிப்படையில் பார்ஸிலோனா அணி 5-3 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இந்நிலையில், கடந்த 13ஆம் திகதி ரியல் மார்டிட் - ஜூவென்ரஸ் அணிகளுக்கிடையில் இரண்டாவது ‘லெக்’ ஆட்டம் நடைபெற்றது. ஏற்கனவே 1-2 என்ற கோல் கணக்கில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானே ரொனால்டோ விளையாடும் ரியல் மார்டிட் அணி பின் தங்கியிருந்தமையால், இந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு சவால் காணப்பட்டதுடன், அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றும் வகையில் ரொனால்டோவின் ஆட்டத்தில் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தமையால், இரு ‘லெக்’ ஆட்டங்களினதும் கோல்களடிப்படையில் ஜூவென்ரஸ் அணி 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி பெர்ளினில் நடைபெறவுள்ளது.
பார்ஸிலோனா - ஜூவென்ரஸ் அணிகள் இதுவரை ஒன்றை ஒன்று எதிர்த்து ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளையும் இரு தோல்விகளையும் சந்தித்த அதேவேளை, இரு போட்டிகளில் சமநிலையையும் எட்டியுள்ளன.
‘ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்’ தொடரைப் பொறுத்தவரையில் ரியல் மார்டிட் அணியே அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றதுள்ளது.
அந்த அணி இதுவரை 10 தடவைகள் சம்பியனாகியுள்ளது. எனினும், இம்முறை அந்த அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போய்விட்டது.
நடப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணிகளுள் ஒன்றான பார்சிலோனா அணி, 4 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணி அதிக தடவைகள் சம்பியனான அணிகள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதேபோல, ஜூவென்ரஸ் அணி, இரு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்ஸிலோனா அணியின் முன்னணி வீரராக ஆர்ஜென்ரீனாவின் லயனல் மேசி உள்ளார். அதேபோல ஜூவென்ரஸ் அணியின் முன்னணி வீரராகவும் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த கரோலஸ் டேவிஸ் உள்ளார்.
இது இவ்வாறிருக்க, இந்த இறுதியாட்டத்தில் வெற்றிபெறும் அணியே ஒவ்வொரு கண்டத்தி லிருந்தும் தெரி வாகும் சம்பியன் அணிகள் மோதும், உலகத் தொடரில் பங்கேற்க
தகுதி பெறும் என்பது முக்கிய விடய மாகும்.

............
முன்னாள் சம்பியன்கள்

அணிகள் சம்பியன் இரண்டாமிடம் வென்ற ஆண்டுகள்
ரியல் மார்டிட் (ஸ்பெய்ன்) 10 03 1956, 1957,1958,1959,
1960,1966,1998,2000,
2002, 2014
மிலான்(இத்தாலி) 07 04 1963, 1969, 1989, 1990,
1994, 2003, 2007
பெயன் முனிச் (ஜேர்மனி) 05 05 1974. 1975, 1976, 2001
2013
லிவெர்பூல் (இங்கிலாந்து) 05 02 1977, 1978, 1981, 1984,
2005
பார்ஸிலோனா (ஸ்பெய்ன்) 04 03 1992, 2006, 2009, 2011
அஜக்ஸ் (நெதர்லாந்து) 04 02 1971, 1972, 1973, 1995
இன்ரெனாசியோனாலே (இத்.) 03 02 1964, 1965, 2010
மான்செஸ்டர் யுனைடட் (இங்.) 03 02 1968, 1999, 2008
பென்பிகா (போர்த்துக்கல்) 02 05 1961, 1962
ஜூவென்ரஸ் (இத்தாலி) 02 05 1985, 1996
நாட்டிங்காம் (இங்.) 02 00 1979, 1980
போர்டோ (போர்த்துக்கல்) 02 00 1987, 2004
கல்டிக் (ஸ்கொட்லாந்து) 01 01 1967
ஹம்பர்க் (ஜேர்மனி) 01 01 1983
ஸ்ரெயுவா புசிரெஸ்ரி (ரோமானியா) 01 01 1986
மார்செய்ல் (பிரான்ஸ்) 01 01 1993
பொருசியா டோட்மன்ட் (ஜேர்.) 01 01 1997
செல்சியா (இங்கிலாந்து) 01 01 2012
பெயெனூர்ட் (நெதர்லாந்து) 01 00 1970
அஸ்ரன் வில்லா (இங்.) 01 00 1982
பிஎஸ்வி எய்ன்டோவன் 01 00 1988
ரெட் ஸ்ரார் பெல்ஹ்ராட் (யூகோஸ்லோவோகியா) 01 00 1991
..........


No comments:

Post a Comment

Total Pageviews

8,866