எஸ்.ஜெயானந்தன்
பணம் கொழிக்கும்
பரபரப்பு மிகு தொடர்
உலகளவில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளைப் போலவே ரசிகர்களைத் தன்னகத்தே கவர்ந்துள்ள உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிதான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) இருபதுd20 போட்டி. இதில் புரளும் கோடி ரூபாய்கள்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆச்சரியமிகுந்ததாகும்.
இத்தகைய பிரபல்யம் மிக்க தொடரை இந்தியக் கிரிக்கெட் சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவரும் ஐ.பி.எல். அமைப்பானது வருடந்தோறும் நடத்திவருகிறது.
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களை, ஏலம் மூலம் தெரிவுசெய்து அதிரடியான இருபதுd20 போட்டிகளாக ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக வருடந்தோறும் இத்தொடரை ஐ.பி.எல். அமைப்பு வழங்கிவருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான தொடர் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், இத்தொடரின் கடந்தகால பெறுபேறுகள் குறித்து சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.
ஐ.பி.எல். அமைப்பின் முதலாவது தொடர் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. முதல் தொடரின் இறுதியாட்டத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் d ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் தகுதிபெற்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் வெற்றியிலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களைச் சேர்த்ததன் மூலம் 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று முதலாவது சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது. இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரரான யூசுப் பதான் ஆட்டநாயகனாகவும், தொடரின் நாயகனாக சக வீரரான ஷேர்ன் வோர்ணும் தெரிவாகினர்.
முதலாவது தொடருடன் பெரும் பரபரப்பை எட்டிய இத்தொடரின் இரண்டாவது அத்தியாயம் 2009ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் காரணமாக தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது.
இத்தொடரின் இறுதியாட்டத்தில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் வெற்றியிலக்கைத் துரத்த முற்பட்ட பெங்களூர் அணி, 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது 137 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்தமையால் டெக்கான் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது.
இந்த ஆட்டத்தின் நாயகனாக பெங்களூர் வீரரான அனில் கும்ளேயும், தொடரின் நாயகனாக டெக்கான் வீரரான அடம் கில்கிறிஸ்டும் தெரிவுசெய்யப்பட்டனர்.
2010ஆம் ஆண்டு மீண்டும் இந்தியாவிலேயே நடைபெற்ற மூன்றாவது ஐ.பி.எல். தொடரின் இறுதியாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் கண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் தனது ஆட்டத்தை ஆடிய மும்பை அணியால் வெற்றியிலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களையே சேர்க்க முடிந்தது. இதனால் சென்னை அணி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்று முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டநாயகனாக சென்னை வீரர் ரெய்னாவும், தொடரின் நாயகனாக மும்பை வீரரான டெண்டுல்கரும் தெரிவாகினர்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது ஐ.பி.எல். தொடரில், நடப்புச் சம்பியனாகக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை இறுதியாட்டத்தில் எதிர்கொண்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி(205/5), எதிரணிக்கு சவால் மிகுந்த இலக்கை (206) நிர்ணயித்தது. மிகக் கடினமான இலக்கு நோக்கி ஆடிய பெங்களூர் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை மாத்திரமே சேர்க்க முடிந்தது. இதனால், 58 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சென்னை அணி, தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று, தன்னை ஐ.பி.எல். தொடரின் சிங்கமாக அடையாளப்படுத்தியது.
இந்த இறுதியாட்டத்தின் நாயகனாக சென்னை அணியின் முரளி விஜயும். தொடரின் நாயகனாக பெங்களூர் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும் தெரிவாகினர்.
யஹட்ரிக் சம்பியன் பட்டக் கனவுடன் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஐ.பி.எல். தொடரின் இறுதியாட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்துக் களமிறங்கிய சென்னை அணி(190/3), கொல்கத்தா அணிக்கு 191 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. அந்த இலக்கை பெரும் பரபரப்புக்கு மத்தியில் கடந்த கொல்கத்தா அணி (192/5d19.4), முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்று சென்னையின் யஹட்ரிக் கனவைக் கலைத்தது. இந்த ஆட்டத்தின் நாயகனாக கொல்கத்தா வீரரான பிஸ்லா தெரிவாக, தொடரின் நாயகனாக சக வீரரான சுனில் நரைன் தெரிவானார்.
பின்னர் கடந்த ஆண்டு (2013) ஆண்டு நடைபெற்ற தொடரிலும் இறுதிப் போட்டிக்குத் தெரிவான சென்னை அணி, தொடர்ந்து நான்கு தடவைகள் இறுதிப் போட்டியில் விளையாடிய அணி என்ற பெருமையைப் பெற்ற அதேவேளை, ஐந்தாவது தடவையாக இறுதியாட்டத்திற்கு நுழைந்த அணி என்ற பெருமையையும் பெற்ற நிலையில், மும்பை இந்தியன் அணியை எதிர்த்து இறுதியாட்டத்தில் களமிறங்கியது. இதன்போது தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டத்தில் களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர்.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெறும் 148 ஓட்டங்களை மாத்திரமே சேர்த் தது. சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட சென்னை அணி, வெற்றியிலக்கை இலகுவாக எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, மும்பை வீரர்களின் பந்துவீச்சில் சிக்கிச் சின்னாபின்னமாகிய சென்னை அணி, 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்கள் முழுமையாக ஆடியபோதும் 125 ஓட்டங்களுள் கட்டுப்பட்டனர். இதனால் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்ற மும்பை அணி, முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றதுடன், சச்சினையும் வெற்றிக்களிப்புடன் விடைகொடுத்து அனுப்பிவைத்தது. இப்போட்டியின் நாயகனாக பொல்லார்ட்டும் தொடரின் நாயகனாக வொட்சனும் தெரிவாகினர்.
இவ்வாறு ஆறு அத்தியாயங்களின் பெறுபேறுகள் இவ்வாறிருக்க, நாம் அடுத்தபடியாக நடப்பு ஐ.பி.எல். தொடருக்கு முன்னர் நிகழ்த்தப்பட்டிருந்த பல்வேறுபட்ட சாதனைகள் குறித்தும் இங்கே ஆராய்வோம்.
அந்த வகையில், ஓர் இன்னிங்ஸில் ஓர் அணி பெற்ற அதிக ஓட்டங்களாக 263 ஓட்டங்கள் உள்ளன. இந்த ஓட்ட எண்ணிக்கையை ரோயல் சலஞ்சர்ஸ் அணி புனே வாரியர்ஸுக்கு எதிராக கடந்த ஆண்டு பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (246/5, 240/5) தன்னகத்தே கொண்டுள்ளது.
அதேவேளை, ஒட்டுமொத்தமாக கூடுதல் ஓட்டங்களைச் சேர்த்த வீரர்கள் வரிசையில் சென்னை அணி வீரரான ரெய்னா உள்ளார். இவர் 95 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 2802 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ரோஹித் சர்மா (2513 ஓட்டங்கள், 93 இன்னிங்ஸ்கள்), கிறிஸ்கெய்ல் (2512 ஓட்டங்கள், 58 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் உள்ளனர்.
ஓர் இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டங்களைச் சேர்த்தவர்கள் வரிசையில் கிறிஸ்கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர் 66 பந்துகளை எதிர்கொண்டு 175 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் மக்கலம் (158, 73) உள்ளார். மூன்றாவது இடத்தையும் கிறிஸ்கெய்லே (128, 62) பிடித்துள்ளார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்தகால ஐ.பி.எல். வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 73 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 103 விக்கெட்டுகளைப் பிடுங்கியுள்ள மும்பை அணியின் லசித் மலிங்க முன்னிலை வகிக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே மிஷ்ரா (95), ஆர்.பி.சிங் (87) ஆகியோர் உள்ளனர்.
ஓர் இன்னிங்ஸில் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தியவர்கள் வரிசையில் சொஹைல் தன்வீர் (6/14) உள்ளார். இரண்டாவது இடத்தில் கும்ளேயும் (5/5), மூன்றாவது இடத்தில் இஷாந்த் சர்மாவும் (5/12) உள்ளனர். நான்காவது இடத்தில் மலிங்க (5/13) உள்ளார்.
அதேவேளை, ஐ.பி.எல். சதங்கள் குறித்துப் பார்க்கையில், கடந்த ஆறு தொடர்களிலும் மொத்தம் 28 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அதிகபட்சமாக பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் 4 சதங்களை அடித்து முன்னிலையில் உள்ளார். கில்கிறிஸ்ட், முரளி விஜய், டேவிட் வோர்னர் ஆகியோர் தலா 2 சதங்களையும், பிரண்டன் மக்கலம், ரோஹித் சர்மா, வொட்சன், மைக்கல் ஹசி, சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஷேன் மார்ஷ், டி வில்லியர்ஸ், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், மஹேல ஜெயவர்தன, போல் வல்தாட்டி, சச்சின், சேவாக், அஜின்கியா ரகானே, கெவின் பீட்டர்சன், சுரேஷ் ரெய்னா, டேவிட் மில்லர் ஆகியோர் தலா ஒரு சதத்தையும் அடித்துள்ளனர்.
அதேவேளை, இருபதுd20 போட்டிகளில் பரபரப்பை ஏற்படுத்தும் சிக்ஸர்கள் அடித்தோரில் முன்னிலை வகிப்பவராக பெங்களூர் வீரரான கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர் எவரும் எட்ட முடியாத அளவுக்கு 180 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்தடுத்த இடங்களில் முறையே ரெய்னா (115) ரோஹித் சர்மா (111) ஆகியோர் உள்ளனர்.
அத்துடன், ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் வரிசையிலும் கிறிஸ்கெய்ல் (17) தனது முதலிடத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. அடுத்த இடத்தில் மைக்கலத்துடன் (13) கிறிஸ்கெய்லும் (13) உள்ளார் என்பது அவரது அதிரடி ஆட்டத்தை மேலும் பறைசாற்றுகிறது.
அதேவேளை, விக்கெட் காப்பாளராகப் பணியாற்றி அதிக விக்கெட்டுகள் வீழ்வதற்குக் காரணமாக இருந்தவராக பஞ்சாப் அணியின் கில்கிறிஸ்ட் முன்னிலை வகிக்கிறார். இவர் 80 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகள் சாய்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். அதேவேளை, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இவரே இவ்வாறான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல சாதனைகளை உள்ளடக்கி வெற்றிகரமாக முடிந்துள்ள ஆறு அத்தியாயங்களுக்கு அடுத்ததான நடப்புத் தொடர் கடந்த 16ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியது. எதிர்வரும் 30ஆம் திகதிவரையான ஆட்டங்கள் அனைத்தும் அங்கேயே நடைபெறுகின்றன. இந்திய பாராளுமன்றத் தேர்தல் காரணமாகவே மேற்குறித்த கால கட்ட ஆட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன. அதன் பின்னர் அதாவது மே 2 முதல் ஜூன் முதலாம் திகதிவரையான எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெறும்.
இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா 2 தடவைகள் மோதும். பின்னர் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் "பிளேdஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இச்சுற்றில் முன்னிலை வகிக்கும் இரு அணிகள் முதலில் மோதும். இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். அடுத்ததாக மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றிபெறும் அணி, முந்தைய ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணியே, ஏற்கனவே இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற அணியுடன் சம்பியன் பட்டத்துக்கு இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும். இறுதிப் போட்டி மும்பையில் ஜூன் முதலாம் திகதி நடைபெறும்.
இவை இவ்வாறிருக்க இம்முறை கிண்ணத்தை வெல்லும் அணி என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அணியாக வழமைபோல் சென்னை அணியே உள்ளது.
அதேவேளை, நடன மங்கையர்களின் கிளு கிளு நடனங்களும் அதிரடி வீரர்களின் அதிரடி ஜாலங்களும் இணைந்து ரசிகர்களுக்கு சிறந்த விருந்தை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது.
No comments:
Post a Comment