எஸ்.ஜெயானந்தன்
இது எப்படி சாத்தியமாயிற்று?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் இத்தொடரின் முதலாவது கிண்ணத்தை 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் வைத்து இந்திய அணி கைப்பற்றியது.
2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது தொடரில் பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டது (இறுதியாட்டத்தில் இலங்கை அணி மோதியது).
மூன்றாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 2010ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி சம்பியனானது.
2012ஆம் ஆண்டு நான்காவது உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி தனதாக்கிக்கொண்டது. (இறுதியாட்டத்தில் இலங்கை அணி பங்கேற்றது)
இந்நிலையில் ஐந்தாவது உலகக்கிண்ண இருபதுd20 தொடர் மார்ச் 16ஆம் திகதி பங்களாதே´ல் தொடங்கி, கடந்த 06ஆம் திகதியுடன் முடிவுற்றது.
முன்னர் இரண்டு தடவைகள் (2009, 2012) இறுதியாட்டம் வரை முன்னேறி கோட்டைவிட்ட இலங்கை அணி இம்முறை வெற்றியைப்பெற்றுள்ளது.
இது இவ்வாறிருக்க இந்த உலகக் கிண்ண இருபதுd20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி, இத்தொடரில் என்ன என்ன சவால்களையயல்லாம் எதிர்கொண்டு இந்தக் கிண்ணத்தைத் தன் வசப்படுத்தியது என்பது குறித்துச் சிறிது பார்ப்போம்.
தகுதிகாண் போட்டிகளுடன் மார்ச் 16ஆம் திகதி ஆரம்பித்த ஐந்தாவது உலகக் கிண்ண இருபதுd20 தொடரின் முக்கிய சுற்றான "சுப்பர் 10' சுற்றில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இச்சுற்று "பிரிவுd1', "பிரிவுd2' என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பிடித்தன. இதனடிப்படையில் தத்தமது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு போட்டியில் ஒவ்வொரு அணியும் மோதின. ஒவ்வொரு அணிக்கும் தலா 4 போட்டிகள் வீதம் நடைபெற்றன. சுப்பர்10 சுற்று மார்ச் 21ஆம் திகதி டாக்காவில் ஆரம்பமாகியது.
"பிரிவுd1'இல் இலங்கை, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இடம்பிடித்தன.
"பிரிவுd2'இல் இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பிடித்திருந்தன.
அந்த வகையில் "பிரிவுd1'இல் இடம் பிடித்திருந்த இலங்கை அணியின் இறுதிவரையான ஆட்டங்களை நோக்கையில்,
இந்த உலகக் கிண்ணத் தொடரின் தனது முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி, பலம் மிக்க தென்னாபிரிக்க அணியை சிட்டாகொங்கில் வைத்து மார்ச் 22ஆம் திகதி எதிர்கொண்டது.
தனது முதலாவது ஆட்டத்திலேயே நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தபோதும் ஓட்ட எண்ணிக்கையும் சிறிது சிறிதாக உயர்ந்தது. மத்யூஸின் 43 ஓட்டங்கள் இந்த ஆட்டத்தில் இலங்கையை 166 ஓட்டங்களை தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்காக நிர்ணயிக்க உதவியது.
பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கைத் துரத்திய தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்த்தபோதும் அவர்களை சராசரி இடைவெளியில் பெவிலியன் திருப்பிய இலங்கை வீரர்கள், பின் வரிசை வீரர்களை தலையயடுக்கவிடாது மடக்கினர். அந்த அணியின் 8 விக்கெட்டுகளைச் சாய்த்த அதேவேளை, 20 ஓவர்கள் நிறைவில் அந்த அணியை 160 ஓட்டங்களுள் கட்டுப்படுத்தி இலங்கை அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இலங்கையின் இரண்டாவது ஆட்டம் நெதர்லாந்துக்கு எதிராக அமைந்தது. இந்த ஆட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி சிட்டகொங்கிலேயே நடைபெற்றது.
ஏனைய அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விளங்கிய நெதர்லாந்து அணி, இலங்கை அணிக்கும் எதாவது திருகு தாளம் பண்ணி நெருக்கடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆட்டத்திலும் நாணயச் சுழற்றியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கிணங்க துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய நெதர்லாந்து அணியை இலங்கைப் பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்தனர். மத்யூஸ் (3விக்கெட்டுகள்), மலிங்க (2), குலசேகர (1) ஆகியோர் வேகத்தில் அசத்த, மெண்டிஸ் (3) சுழலில் திணற வைக்க, நெதர்லாந்து அணி 10.3 ஓவர்களுள் 39 ஓட்டங்களுடன் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
40 ஓட்டங்கள் என்ற மிகவும் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த இலங்கை அணி வீரர்கள், அதிரடியாக ஆடி 24 நிமிடங்களுள் ஆட்டத்தை முடிவுக்குக்கொண்டு வந்தனர். அதாவது வெறும் 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் பறிகொடுத்து 40 ஓட்டங்களைச் சேர்த்து 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றனர்.
இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச இருபதுd20 கிரிக்கெட் வரலாற்றில், அணி ஒன்றை குறைந்த ஓட்டங்கள் மற்றும் குறைந்த ஓவர்களுள் கட்டுப்படுத்திய அணி என்ற பெருமையை இலங்கை அணி தனதாக்கிக்கொண்டது. இந்த ஆட்டத்தின் நாயகனாக மத்யூஸ் தெரிவானார்.
இந்த ஆட்டத்துடன் 4 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கு, தான் எதிர்கொண்ட மூன்றாவது ஆட்டம் சற்றுக் கடினமாகவே அமைந்துவிட்டது.
மார்ச் 27ஆம் திகதி சிட்டாகொங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் தோற்ற இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி இங்கிலாந்து அணி பணித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, டில்ஷான் (55), மஹேல ஜெயவர்தன (89) ஆகியோரின் அரைச்சதங்கள் கைகொடுக்க, ஓவருக்கு 9.45 சராசரி ஓட்டங்களுடன் 4 விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்து 189 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் 190 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்து அணியால் எட்ட முடியாது என எண்ணியிருக்க, அந்த எண்ணத்தை ஹலெஸ் சதம் (116) அடித்து சிதைத்தார். அவருக்குக் கைகொடுத்த மோர்கனும் அரைச்சதம் (57) அடித்து அசத்த, அந்த அணி, 19.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து இலங்கைக்கு அதிர்ச்சிகொடுத்தது.
இந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி இலங்கை அணியின் அரையிறுதிக்கான வாய்ப்கை கேள்விக்குறியாக்கியது. அதனடிப்படையில் இலங்கை அணி எதிர்கொண்ட நான்காவது ஆட்டம் மிகவும் முக்கியமாக அமைந்தது.
ஏனெனில், "பிரிவு 1'இல் இடம்பிடித்த ஐந்து அணிகளுள், தென்னாபிரிக்க அணி இலங்கையிடம் தோற்றபோதும் தான் எதிர்கொண்ட ஏனைய மூன்று ஆட்டங்களிலும் வெற்றிபெற்று அரையிறுதியை உறுதி செய்திருந்த அதேவேளை, தலா 2 வெற்றிகளுடன் சம புள்ளிகளைப் (4) பெற்றிருந்த தமது நான்காவது ஆட்டத்தில் இலங்கை d நியூஸிலாந்து அணிகள் மோதின.
மார்ச் 31ஆம் திகதி சிட்டாகொங்கில் நடைபெற்ற இந்த முக்கிய ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி, இலங்கையைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி, தட்டுத்தடுமாறி பெரும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது. மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவுபெறாமலே (19.2) 119 ஓட்டங்களுள் தனது ஆட்டத்தை முடிக்க நேர்ந்தது. இதனால், இலங்கை அணியின் அரையிறுதி நோக்கிய நகர்வு கனவாகவே முடிந்துபோகப்போகிறது என்ற ஏக்கத்தில் இலங்கை ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பின்னர், இலங்கையை குறுகிய ஓட்டங்களுள் மடக்கிய உத்வேகத்தில் வெற்றியிலக்கை எட்டிவிடலாம் என்ற ஆர்ப்பரிப்புடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்களை (வில்லியம்ஸன் (42) தவிர) இரட்டையிலக்கை அடையவிடாமல் மளமளவென வெளியே அனுப்பிய ஹேரத் (5), சேனநாயக்க (2) ஆகியோர் இந்த ஆட்டத்தில் தமது பந்துவீச்சுத் திறமையைக் காட்டியிருந்தனர்.
இலங்கையின் பந்துவீச்சுத் தாக்குதலை இந்தளவுக்கு எதிர்பார்த்திராத நியூஸிலாந்து அணியினர் 15.3 ஓவர்களுள் வெறும் 60 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்திருந்த நிலையில் முற்றாக முடங்கிப்போயினர்.
59 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்ற இலங்கை வீரர்கள் மைதானம் எங்கும் துள்ளிக் குதித்தனர் d ஆர்ப்பரித்தனர். சற்றும் எதிர்பாராத நியூஸிலாந்து அணியினர் பேயறைந்தாற்போல் மைதானத்தைவிட்டு அகல மனமின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்தனர்.
தனது அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்த இலங்கை அணி, "பிரிவு 1'இல் தென்னாபிரிக்காவுடன் புள்ளிகளடிப்படையில் சமனிலையை (6) அடைந்திருந்தபோதும் சராசரி ஓட்ட அடிப்படையில் முதல் இடத்தைப்பிடித்தது. அதன்படி "பிரிவுd2'இல் இரண்டாவது இடம் பிடித்த அணியுடன் மோத இலங்கை அணி காத்திருந்தது.
அதன்படி பலம்மிக்க நடப்புச் சம்பியன் என்ற கோதாவில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலாவது அரையிறுதியாட்டத்தில் இலங்கை அணி எதிர்கொண்டது.
முதல் முறையாக வேறொரு மைதானத்தில் விளையாடக் களமிறங்கியது இலங்கை அணி. அதாவது, ஏற்கனவே நடைபெற்ற இலங்கை எதிர்கொண்ட ஆட்டங்கள் அனைத்துமே சிட்டாகொங்கிலேயே நடைபெற்றிருந்தன. இதனால் மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டம் இலங்கைக்குச் சிறிதேனும் வேறுபாட்டைக் காட்டும் என்ற அவதானிப்பும் இருந்தது.
கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற இறுதியாட்டத்துக்கு நுழையும் முதல் அணியைத் தெரிவுசெய்யும் இந்தப் போட்டிக்கான நாணயச் சுழற்சியில் இலங்கை அணிக்கே அதிஷ்டம் கிட்ட, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
இந்த ஆட்டத்தின் முதல் விக்கெட்டுக்கான ஓட்ட சேகரிப்பு ஓரளவு போதுமானதாக இருந்தபோதும்,முதல் விக்கெட்டின் வீழ்ச்சியுடன் அடுத்தடுத்த விக்கெட்டுகளும் சரிந்தமை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல் விக்கெட்டுக்காக 41 ஓட்டங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் பெரேரா (26) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மஹேல (0), சங்கக்கார (1) ஆகியோர் ஏமாற்றிச் சென்றனர். பின்னர் வந்த டில்ஷான் (39) தனது பங்குக்கு சிறப்பாக ஆடிச் சென்றார். அவரைத் தொடர்ந்து திரிமன்னே (44), மத்யூஸ் (40) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திச் செல்ல இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுள் 160 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் குறித்த இலக்கை இலகுவாக எட்டக்கூடிய பலமிக்க அணியாகக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, இலங்கைப் பந்துவீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினர். அவர்கள் தமது கட்டுக்கோப்பான பந்துவீச்சுத் தாக்குதலால் சவால் விடுத்தனர்.
இதனால் ஓட்டங்களை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்ன கனவில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு ஓட்டங்களைச் சேர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனினும், அந்த அணி தமது முயற்சியைத் தொடர்ந்த வண்ணமிருந்தது. அந்த அணி 13.5 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை மழை தனது விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தது. இதன் விளைவாக ஆட்டத்தை மேலும் தொடர முடியாத நிலையில், டக்வோர்த் லூவிஸ் முறைப்படி இலங்கை அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி, தன்னுடன் மோதும் அணி எது என்பதை உறுதிசெய்வதற்காக நான்காம் திகதி இரவுவரை காத்திருந்து, இத்தொடரில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத இந்திய அணியே தமது எதிராளி என்பதையும் உறுதி செய்தது.
ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி காலை விடிகிறது. இந்தியா, இலங்கை ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் தத்தமது அணிகள்தான் கிண்ணத்தை வெல்லப்போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்திய ஊடகங்கள் இரண்டாவது முறையாகத் தமது மண்ணுக்கு இருபதுd20 உலகக் கிண்ணம் வரப்போகிறது என்று முழுநம்பிக்கையுடன் செய்திகளை வெளியிட்டன. இலங்கை ஊடகங்களோ, இலங்கை அணி கடந்த இரண்டு தடவைகள் போல் உலகக் கிண்ணத்தைக் கோட்டைவிடுமா அல்லது கைப்பற்றுமா என்ற கேள்வியுடன் வெற்றிக்கான வாய்ப்பையும் ஊகித்தன.
காலை பகலாகி, பகல் மாலையாகி இறுதியாட்டத்துக்கான நேரம் நெருங்க இலங்கை d இந்திய அணியினர் மிர்பூர் மைதானத்துக்குள் புகுந்தனர்.
இந்த ஆட்டத்துக்கான நாணயச் சுழற்சியிலும் வென்ற இலங்கை அணித்தலைவர் மாலிங்க, தமக்கு அதிஷ்டம் கைகொடுத்திருப்பதை உணர்ந்து இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகளைச் சாய்ப்பதைவிட அந்த அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலேயே குறியாக இருந்த இலங்கைப் பந்துவீச்சாளர்கள், தாம் நினைத்ததைச் சாதித்தும் காட்டினர்.
இந்திய அணியின் முதல் விக்கெட்டாக ரகானே (3) சாய்ந்தார். அப்போது இந்திய அணி 4 ஓட்டங்களுடனே இருந்தது. அவரைத் தொடர்ந்து மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா (29) ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திச் சென்றார். இந்நிலையில் ஜோடி சேர்ந்த கோஹ்லி d யுவராஜ் சிங் ஜோடி வான வேடிக்கை காட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோஹ்லி மாத்திரமே அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்தார். மறுமுனையில் பதுங்கிய யுவராஜ் சிங், டெஸ்ட் பாணியில் ஆடி அனைவரதும் வெறுப்பையும் பெறவேண்டியதாயிற்று. அவர் 21 பந்துகளை எதிர்கொண்டு 11 ஓட்டங்களை மாத்திரமே சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஆக்ரோமாக ஆடிய கோஹ்லி (77) தனது பணியைச் சரிபடச் செய்து சென்றார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்திருந்தபோதும் 130 ஓட்டங்களையே சேர்த்தது.
தக்க தருணம் பார்த்து கோழிக்குஞ்சுகளைக் கெளவிச்செல்ல பறந்து திரியும் பருந்துகளைப் போலக் காத்திருந்த இலங்கை அணி, தனது விளையாட்டைக் காட்ட ஆரம்பித்தது.
இலகுவான இலக்கைத் துரத்த ஆரம்பித்த இலங்கை அணி, சங்கக்காரவின் அரைச்சதம் (52), மஹேல ஜெயவர்தன (24), திஷார பெரேரா (23), டில்ஷான் (18), திரிமன்னே (7), குசல்பெரேரா (5) ஆகியோரின் ஓட்ட எண்ணிக்கைகளும் ஒருங்கிணைந்து கைகொடுக்க 17.5 ஓவர்களில் வெற்றியிலக்கைக் கடந்து (134) வெற்றியைத் தமதாக்கிக்கொண்டது.
6 விக்கெட்டுகளால் வெற்றியைப் பெற இலகுவாக வழிசமைத்துக்கொடுத்த சங்கக்கார ஆட்ட நாயகனாகத் தெரிவாக, தொடரின் நாயகனாக இந்தியாவின் கோஹ்லி தெரிவானார்.
வெற்றிக்களிப்பில் மைதானம் எங்கும் புரண்டோடித் திரிந்த இலங்கை வீரர்கள், இந்த இறுதியாட்டத்துடன் விடைபெற்றுச்செல்லும் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன் ஆகியோரைத் தமது தோள்களில் ஏற்றி ஆர்ப்பரித்தனர்.
பின்னர் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்த மகிழ்ச்சியில் கடந்த 8ஆம் திகதி இலங்கை வந்தடைந்த வீரர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து காலி முகத்திடல் வரையான வீதிகளில் ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் பெரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வைச் சந்தித்து வீரர்கள் அனைவரும் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். பின்னர் 9ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்ட உலக சம்பியன் வீரர்களுக்கு கெளரவமும் அளிக்கப்பட்டது.
இத்தகைய வெற்றிக்களிப்புடன் உள்ள வீரர்கள் மத்தியில், சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர், வீரர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் இலங்கைக் கிரிக்கெட் சபை மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தமையும், அவர்களது செயற்பாடுகள் குறித்து இலங்கைக் கிரிக்கெட் சபை மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தமையும் அரசியல் சித்துவிளையாட்டாக நோக்கப்படுகிறது.
No comments:
Post a Comment