எஸ்.ஜெயானந்தன்
மூடிய அறைக்குள் பேசுதல்
இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக்காலமாகப் பல வெற்றிகளைக் குவித்து வருகிறது. அதற்கு வீரர்களின் திறமை, அனுபவம் மற்றும் ஒன்றுபட்ட ஆற்றல் வெளிப்பாடு என்பவற்றுடன் குறித்த வீரர்களுக்குத் தகுந்தமுறையில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுமே காரண கர்த்தாக்களாக அமைகின்றனர். இவைதவிர, வேறெந்தக் காரணங்களையும் நாம் பெரியளவில் குறிப்பிட்டுக்கூறுமளவுக்கு இல்லை.
அண்மையில் பங்களாதே´ல் நடைபெற்ற இருபதுd20 உலகக் கிண்ணத் தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி, அதற்கு முன்னர் ஆசிய அணிகள் பங்கேற்ற ஆசியக் கிண்ணத் தொடரையும் தன்வசப்படுத்தியிருந்தது.
இத்தகைய சிறப்புமிக்க இலங்கைக் கிரிக்கெட் அணியில் விளையாடிவரும் வீரர்கள், அண்மைக்காலமாக சம்பளப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்ச்சைகளில் சிக்கித் தவித்துவருகின்றனர்.
உலகக் கிண்ணத் தொடருக்காகப் புறப்பட்டுச் செல்லமுன்னர் இலங்கை வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்த சர்ச்சை ஏற்பட்டிருந்தமையால், இரண்டாம் தர அணியை இத்தொடருக்காக அனுப்பும் நிலைமை இருந்தது. எனினும், வீரர்கள் குறித்த பிரச்சினையைப் பெரியளவில் பொருட்படுத்தாமல் அத்தொடரில் விளையாடிவிட்டு வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பினர்.
வீரர்கள் நாடு திரும்பிய பின்னரும் வீரர்களுக்கான சம்பளப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் கிரிக்கெட் சபை பின்னடித்துவந்த அதேவேளை, மாறாக வீரர்கள் சிலருடன் கருத்து முரண்பாடுகளை வளர்த்துக்கொள்வதிலேயே மும்முரமாக இருந்து வந்தது.
இதனால், இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியைத் தெரிவுசெய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே இருந்த சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாமல் சர்ச்சை நீடித்துவந்த நிலையில் மேலும் மேலும் சிக்கல்கள் உருவாக்கப்பட்டவண்ணமே இருந்தன. உலகக் கிண்ணத்தை வென்றமைக்காக இலங்கைக் கிரிக்கெட் சபைக்கு வழங்கப்படும் தொகையில் குறிப்பிட்ட ஒரு தொகையை வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு வழங்கப்படுவதே வழமை. ஆனால், கிரிக்கெட் சபை இதுகுறித்துக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் நடந்துகொண்டமையால் இதுகுறித்து வீரர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, இலங்கை அணி அண்மையில் பெற்ற வெற்றிகளுக்கு வித்திட்டவரான இங்கிலாந்தைச் சேர்ந்த போல் பார்பிராஸ், திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளமை பெரும் சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் அமைந்தது.
இவர், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர் பதவிவை வகிக்க எண்ணியுள்ளமையாலும், இவருக்கு தற்போது இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை வழங்கவென தீர்மானித்துள்ள தொகையினை இலங்கைக் கிரிக்கெட் சபையால் வழங்க முடியாது என்ற நிலைமையாலுமே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகள் காரணமாக அதிருப்தியடைந்தே அவர் விடைபெற்றுச் செல்வதாகவும் அவதானிப்புகள் உள்ளன. (அவரது இடத்துக்கு தற்போது மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.)
இலங்கைக் கிரிக்கெட்டுக்காக குறுகிய காலத்தில் சிறப்பான முறையில் பணியாற்றிய அவரை, தொடர்ந்து தக்க வைக்க இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகள் பேச்சுகளை நடத்தியபோதும், அவர் தமது முடிவில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டார் எனவும் தெரியவருகிறது. இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு வெறும் நான்கே மாதங்களுள் அவர் தனது பதவியைத் துறந்துள்ளமைதான் இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
அத்துடன், இலங்கைக் கிரிக்கெட் அணியை ஆசியக் கிண்ணம் மற்றும் இருபதுd20 உலகக் கிண்ணத்தை வெல்ல வைத்த நன்மதிப்புடனேயே விடைபெறுவதற்கான நல்லதொரு தருணமாக இதை அவர் (போல்), எண்ணியிருப்பதற்கான வாய்ப்புகளும் இல்லாமலில்லை.
அதேவேளை, இருபதுd20 உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச இருபதுd20 போட்டிகளிலிருந்து விடைபெற்ற குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரது ஓய்வு குறித்து இலங்கைக் கிரிக்கெட் சபை பல்வேறுபட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டது.
இத்தகைய பின்னணில் அரசியலே உள்ளது என இலங்கைக் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் உணரத் தவறவில்லை.
ஏற்கனவே, கிரிக்கெட் சபைக்கும் d வீரர்களுக்கும் இடையில் சம்பளம் தொடர்பாக முரண்பாடு நிலவியிருந்த நிலையிலேயே சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோரது ஓய்வு முடிவு அறிவிக்கப்பட்டமையும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இருவரும் ஓய்வு குறித்த முடிவை தமக்கு (கிரிக்கெட் சபைக்கு) அறிவிக்காமல் ஊடகங்களுக்கு அறிவித்தமையும், வீரர்களுக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையில் சம்பளப்பிரச்சினை நிலவிவருகின்ற நிலையில் இருவரும் ஓய்வு பெற்றமையுமே கிரிக்கெட் சபையை மேலும் கோபத்துக்குள்ளாக்கியிருக்கலாம்.
அதேவேளை, மஹேல, சங்கக்கார இருவரும் இலங்கைக் கிரிக்கெட் சபையை சாடும் விதத்தில், உலகக் கிண்ணத்தை வென்றபின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது தெரிவித்த கருத்துக் குறித்து, இலங்கைக் கிரிக்கெட் சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை விடுக்குமளவுக்கு நிலைமை விபரீதமானது. இந்த விடயம் அண்மையில் பரபரப்பாகப் பேசக்கப்பட்டது. இதற்குப் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வகையில் கருத்துத் தெரிவித்த இலங்கைக் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால,
மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முயற்சிசெய்யுமானால் அது முட்டாள்தனமான செயற்பாடாகவே அமையும். இலங்கைக் கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவர் முறையற்ற முறையில் பின்வாசல் வழியாகப் புகுந்தவர் எனத் தெரிவித்தார். அத்துடன், கிரிக்கெட் சபையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அவர் காட்டமான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து சங்கக்கார, மஹேல இருவரும் 2015ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடருக்கு முன்னர் விலகுவார்களாக இருந்தால், அதற்கு கிரிக்கெட் சபையே பொறுபபுக்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மஹேல ஜெயவர்த்தன விமான நிலையத்தில் வைத்து, ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துத் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மின்னஞ்சல் ஒன்று கிரிக்கெட் சபையால், இலங்கைக் கிரிக்கெட்டின் ஒழுக்காற்றுக் குழுவில் அங்கம் வகித்த பிரபல சட்டத்தரணி தினால் பிலிப்பிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இதனால், அவர் தனது பதவியை ராஜிநாமாச் செய்யும் முடிவை எடுத்தார். எனினும் தமது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.
அவரின் இந்த முடிவு, குறித்த வீரர்கள் மீது ஒழுக்காற்று விசாரணையை மேற்கொண்டால் தமது பெயருக்கும் களங்கம் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தால் எடுக்கப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு பல்வேறு சம்பவங்களின் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் (ஒருநாள், டெஸ்ட்) தலைவர் அஞ்சலோ மத்யூஸுடன் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்து வீரர்களின் கோரிக்கைகளை இலங்கைக் கிரிக்கெட் சபை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து கிரிக்கெட் சபையின் திருத்தப்பட்ட 5 வருட ஒப்பந்தத்தில் வீரர்கள் கைச்சாத்திட்டனர்.
வீரர்கள் d கிரிக்கெட் சபைக்கிடையிலான சச்சரவு தற்போதைக்கு தீர்க்கப்பட்டுள்ளபோதும் இத்தகைய பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின் அவ்வாறு ஏற்படாதவண்ணம் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடந்துகொள்ளவேண்டும்.
அத்துடன், இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதியன்று லோட்ஸ் மைதானத்தில் விரிவுரை ஒன்றை ஆற்றிய குமார் சங்கக்கார, இலங்கைக் கிரிக்கெட்டுக்குள் அரசியல் புகுந்துள்ளமையால் வீரர்கள் சுயமாக இயங்கக்கூடிய தன்மைகள் அருகிவருகின்றன என துணிவுடன் உண்மையைப் பேசியமையால், அப்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.
அதேவேளை, 2011ஆம் ஆண்டு சங்கக்காரவின் மேற்படி விரிவுரைக்கு முன்னர் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து நடத்திய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்போது, மஹேல ஜெயவர்தன உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஆளும் அரசியல் தலைவர் ஒருவரின் மகனால் எச்சரிக்கப்பட்டிருந்தனர் என அப்போது வெளியாகிய தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன.இத்தகைய பல்வேறுபட்ட காரணங்களே சங்கக்காரவின் லோட்ஸ் உரைக்கு வித்திட்டிருந்தது.
இவ்வாறு பல்வேறு அரசியல் புகுதல்களைக் கொண்ட இலங்கைக் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளை வீரர்கள் விமர்சிப்பதும், அதற்குப் பதிலடியாக எதிர்க்கருத்துத் தெரிவிக்கப்படுவதும் இலங்கைக் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.
எனவே, சர்ச்சைகளால் பெரும் நெருக்கடிக்குள் அகப்பட்டு இலங்கை அணியின் திறன் எந்த வகையிலும் குன்றாதவண்ணம் பார்க்கவேண்டியது கிரிக்கெட் சபையினதும் வீரர்களதும் கடமையாகும்.
அத்துடன், வீரர்களின் கோரிக்கைகளிலும் நியாயங்கள் இருப்பதால் அவர்களது நலன்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்தும் கவனம் செலுத்துவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
அதேவேளை, மஹேல, சங்கக்கார போன்ற திறமையான வீரர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் கிரிக்கெட் சபையினர், அவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு மாத்திரமின்றி, இலங்கைக் கிரிக்கெட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்தவல்லது என்பதையும் உணரவேண்டும். இது வீரர்களுக்கும் பொருந்தும்.
எனவே, எத்தகைய பிரச்சினைகள் இருப்பினும் வீரர்களும், அவர்களுடன் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அதிகாரிகளும் மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தி சுமுகமான முறையில் தீர்வுகளைக் காண்பதே சிறந்த வழியாக இருக்கும். இதுவே யதார்த்தமும் கூட.
......................................
பரபரப்பாக்கிய மேக்ஸ்வெல்ஸ்
ஏப்ரல் 16ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பித்த, இந்தியன் பிரீமியர் லீக் இருபதுd20 தொடர் மீதுதான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது. அந்தளவுக்கு எப்போதுமே விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாததாகவே இந்தத் தொடர் அமைவதுண்டு.
எதிர்பார்த்ததுபோல் ஒவ்வொரு அணிகளும் தமது பங்குக்கு விறுவிறு ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராத அணி ஒன்று தனது பாட்டுக்கு ஆட்டத்தைக் காட்டிக்கொண்டு முன்னிலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐ.பி.எல்லின் ராஜாவாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்தகால தொடர்களில் ஜொலிக்காத பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்துக்கான நாணயச் சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஸ்மித் (66), மைக்கலம் (67) ஆகியோரின் அதிரடியுடன் ஆரம்பித்த சென்னை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் பறிகொடுத்து 205 ஓட்டங்களைக் கைப்பற்றியது.
சென்னை அணியின் வெற்றி உறுதி என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அதற்கேற்றாற்போல் பஞ்சாப் அணியின் முதலிரு விக்கெட்டுகளும் 38 ஓட்டங்களுள் சரிக்கப்பட்டது.
நிலைமை இவ்வாறிருக்க, மேக்ஸ்வெல்ஸ் தனது பாட்டுக்கு பந்துகளை நாலாபுறமும் விரட்டிக்கொண்டிருந்தார். எவருமே எதிர்பார்க்காதவண்ணம் 43 பந்துகளை எதிர்கொண்ட இவர், 2 சிக்ஸர்கள் 15 பெளண்டரிகள் என விளாசி மொத்தம் 95 ஓட்டங்களைச் சேர்த்து தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த ஆட்டத்தில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த பஞ்சாப் அணி, 206 ஓட்டங்களைச் சேர்த்து 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி சென்னைக்கு முதல் போட்டியிலேயே அதிர்ச்சிகொடுத்தது.
பின்னர் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற தனது இரண்டாவது ஆட்டத்தில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி, எதிரணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்ததற்கிணங்க துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களைச் சேர்த்தது.
இந்தமுறையும் எட்டுதற்கரிய இலக்கைத் துரத்திய பஞ்சாப் அணிக்கு, 45 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் 4 பெளண்டரிகள் என விளாசி 89 ஓட்டங்களைச் சேர்த்துக்கொடுத்தார் மேக்ஸ்வெல்ஸ்.
இவரின் இந்த அதிரடி கைகொடுக்க 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் பறி கொடுத்து 193 ஓட்டங்களைச் சேர்த்த பஞ் சாப் அணி, 7 விக்கெட்டுகளால் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த ஆட்டத்துடன் கிங்ஸ் லெவன் பஞ் சாப் அணி மீதும், அந்த அணியின் மேக்ஸ்வெல்ஸ் மீதும் அனைவரதும் கவனம் திரும்பியது.
தனது மூன்றாவது ஆட்டத்தில் கடந்த 22ஆம் திகதி சார்ஜாவில் வைத்து ஹைதராபாத் சன்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி, நாணயச் சுழற்சியில் வென்ற ஹைதராபாத்தின் பணிப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி தனது ஆட்டத்தை ஆடிய பஞ் சாப் அணிக்கு, கடந்த இரு ஆட்டங்களைப் போலவே அதிரடியைக் காட்டிய மேக்ஸ்வெல்ஸ், 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பெளண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களைச் சேர்த்துக்கொடுக்க அந்த அணி 193 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கைத் துரத்த முடியாமல் தடுமாறிய ஹைதராபாத் அணி, 19.2 ஓவர்களில் 121 ஓட்டங்களுள் முடங்கியது. இதனால், இந்த ஆட்டத்தில் 72 ஓட்டங்களால் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி, யஹட்ரிக் வெற்றியைப் பெற்றது.
கடந்தகாலத் தொடர்களில் பெரியளவில் சோபிக்காத பஞ்சாப் அணி மீது, நடப்புத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அணி மீது இத்தகைய எதிர்பார்ப்புக்கு வித்திட்ட பெருமை எல்லாம் மேக்ஸ்வெல்ஸையே சாரும். அவர்தான் தமது அணி எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களைச் சேர்த்தது மாத்திரமின்றி வெற்றியின் நாயகனாகவும் திகழ்ந்தார். அவர்தான் குறித்த மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
நேற்றையதினம் தனது நான்காவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி களமிறங்கியது. எனினும், இந்தக் கட்டுரை வரையப்படும்வரை அதுகுறித்த பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை.
பஞ்சாப் அணியைப் பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய இந்த மேக்ஸ்வெல்ஸ், 1988ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பிறந்தார்.
உள்ளூர் அணிகளுக்காக கிரிக்கெட் ஆடிவந்த இவர், 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டின் மூலம் சர்வதேச களத்துக்குள் புகுந்தார். பின்னர், 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக டுபாயில் நடைபெற்ற இருபதுd20 ஆட்டத்தில் அவுஸ்திரேயா சார்பாகக் களமிறங்கினார். பின்னர் டெஸ்ட் போட்டிகளிலும் இவர் களமிறங்கினார்.
அவுஸ்திரேலிய அணிக்காக இவர் இதுவரை, 21 இருபதுd20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். எனினும், 17 இன்னிங்ஸ்களிலேயே இவர் துடுப்பெடுத்தாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வாறு களமிறங்கிய இவர் இதுவரை மொத்தம் 303 ஓட்டங்களையே சேர்த்துள்ளார். அதேவேளை, ஓர் இன்னிங்ஸில் அவர் பெற்ற 74 ஓட்டங்களே அதிகூடியதாகவும் உள்ளது. ஒரு அரைச்சதம், 21 சிக்ஸர்கள், 24 பெளண்டரிகளை இவர் அவுஸ்திரேலிய அணிக்காக அடித்துள்ளார்.
ஆனால், தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் இவரது ஆட்டம் பல மடங்கு சிறப்பானதாக உள்ளது.
அவுஸ்திரேலியாவுக்காக மொத்தம் 17 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 303 ஓட்டங்களையே சேர்த்துள்ள இவர், பஞ்சாப் அணிக்காக வெறும் 3 இன்னிங்ஸ்களில் ஆடி 279 ஓட்டங்களைக் குவித்துள்ளமை பிரமிக்கத்தக்கதே. தான் ஆடி மூன்று இன்னிங்ஸ்களிலுமே இவர்தான் ஆட்டநாயகன் என்பது மேலும் குறிப்பிடற்குரிய விடயமாகும்.
அதேவேளை, அவுஸ்திரேலியாவுக்காக அத்தனை இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரே ஒரு அரைச்சதமே அடித்துள்ள இவர், நடப்பு ஐ.பி.எல். தொடரில் மூன்றே மூன்று இன்னிங்ஸ்களில் மூன்று அரைச்சதங்களை அடித்துச் சாதித்துள்ளார். அதேவேளை, மொத்தம் 279 ஓட்டங்கள், 17 சிக்ஸர்கள், 28 பெளண்டரிகள் என்பவற்றுடன் ஓர் இன்னிங்ஸில் கூடுதலாக 95 ஓட்டங்கள் பெற்றுள்ளார் (25,26ஆம் திகதிகளில் நடைபெற்ற போட்டிகளின் பெறுபேறுகள் சேர்க்கப்படவில்லை).
இவ்வாறு தனது அதிரடியால் பஞ்சாப் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெக்ஸ்வெல்ஸ், ஏற்கனவே டில்லி மற்றும் மும்பை அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். எனினும், தற்போதே இவரது திசையில் ஐ.பி.எல். ரசிகர்கள் அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது. கடந்த காலத் தொடர்களில் கிறிஸ் கெய்ல் தனது அதிரடி மூலம் தன்பக்கம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். ஆனால் இம்முறை அவரது இடத்தைத் தகர்க்கும் வகையில் மேக்ஸ்வெல்ஸின் ஆட்டம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment