Monday, May 5, 2014

எஸ்.ஜெயானந்தன்
அயர்லாந்துடன் கிரிக்கெட் ஆடும்
இரண்டாம் தர இலங்கை அணி
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் கிரிக்கெட் அணி, அதற்குத் தம்மைத் தயார்படுத்தும் விதமான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு இருபதுd20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட பெருந்தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே, அதற்கு முன்னர் அயர்லாந்து அணியுடன் இரு ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது.
அயர்லாந்துடனான ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக அமைந்தாலும், அந்த அணிக்கு எதிராக இலங்கை அணி சவாலான கட்டத்தையும் எட்டக்கூடும். ஏனெனில்,  அந்த அணி ஏற்கனவே பல முன்னணி அணிகளுக்கு     சவால்விடுத்து ஆடியுள்ளது.
அதேவேளை, அயர்லாந்துக்குச் சென்றுள்ள இலங்கை அணியைப் பொறுத்தவரையில் அதில் முக்கிய சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இரண்டாம் தர அணியாகவே பங்கேற்கிறது என்பதையும் கருத்தில்கொள்ளல் வேண்டும்.
அந்த வகையில், அஞ்சலோ மத்யூஸ் (அணித்தலைவர்) லகிரு திரிமன்னே (துணைத்தலைவர்), டினேஸ் சண்டிமால், சத்துரங்க டி சில்வா, நிரோ­ன் டிக்வெல்ல, நுவான் குலசேகர, சுரங்க லக்மல், அஜந்த மென்டிஸ், குசல்பெரேரா, திஷார பெரேரா, தம்மிக்க பிரசாத், அஷான் பிரியஞ்சன், சசிந்திர சேனநாயக்க, உபுல் தரங்க, கிதுருவன் விதனகே ஆகியோர் அடங்கிய உத்தேச அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுள் இறுதி 11 பேர் கொண்ட அணி தெரிவுசெய்யப்படும். குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, லஸித் மலிங்க போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கெதிராகக் களமிறங்கும் அயர்லாந்து அணியைப் பொறுத்தவரையில், வில்லியம் போர்ரெர்பில்ட் (அணித்தலைவர்), அலெக்ஸ் குசாக், ஜோர்ஜ் டொக்ரெல், எட் ஜோஸ், அன்டி மைக்பிரைன், டிம் முர்ரே, கெவின் ஓ பிரைன், நியால் ஓ பிரைன், அன்ட்ரூ பொய்ன்ரெர், மக்ஸ் சொரென்சென், பெளல் ஸ்ரிர்லிங், ஸ்ரர்ட் தோம்சன், ஹரி வில்சன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அயர்லாந்து அணியுடன் இதுவரை இலங்கை அணி ஒரே ஒரு ஒருநாள் போட்டியிலேயே விளையாடியுள்ளது. அதுவும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்போதே எதிர்த்தாடியுள்ளது. அந்தப் போட்டியில் இலங்கை அணியே வெற்றிபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டம் எதிர்வரும் 6ஆம் திகதியும், இரண்டாவது ஆட்டம் 9ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள இருபது-20 ஆட்டத்துடன் ஆரம்பிக்கிறது.
.........................

No comments:

Post a Comment

Total Pageviews

8,866