எஸ்.ஜெயானந்தன்
தேடிவந்த பதவி
இலங்கைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் சிறந்த வீரர்கள் பல உருவாகியுள்ளனர் - உருவாகிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிறந்த ஒரு பயிற்சியாளராக இலங்கையிலிருந்து எவரும் பிரகாசித்ததாகத் தகவல் இல்லை.
இந்த நிலைக்குப் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினரின் செயற்பாடு.
1968ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் பிறந்தவர்தான் சந்திக ஹத்துருசிங்க. இவர், தனது இளமைக் காலத்தில் முதல் தரக் கிரிக்கெட் போட்டிகள் பலவற்றில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இலங்கைக் கிரிக்கெட் அணிக்குள்ளும் உள்வாங்கப்பட்டார்.
1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஹமில்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார் ஹத்துருசிங்க. இதேபோட்டியில்தான் இலங்கை அணியின் முன்னாள் அதிரடித்துடுப்பாட்ட வீரரான சனத் ஜெயசூரியவும் தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்தார். (இவர் ஏற்கனவே 1989ஆம் ஆண்டு ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமாகியிருந்தார்.)
தனது முதல் சர்வதேச ஆட்டத்திலேயே (டெஸ்ட்) ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஹத்துருசிங்க, முதல் இன்னிங்ஸில் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடி 81 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார். சகல துறை வீரராக விளங்கிய இவருக்கு இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 2 ஓவர்கள் பந்து வீசும் வாய்ப்பும் கிடைத்தது. எனினும், இவரால் விக்கெட்டுகள் எதையும் கைப்பற்றமுடியவில்லை.
மூன்று போட்டிகளைக் கொண்டதாக நடைபெற்ற இத்தொடரின் முதலாவது ஆட்டத்தில் இவருக்கு வாய்ப்புக்கிடைக்க வில்லை. பின்னர் இரண்டாவது போட்டியிலேயே வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தியமையால் மூன்றாவது ஆட்டத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த ஆட்டத்திலும் அவர் முதல் இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழந்தபோதும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைச்சதம் அடித்தார்.
இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளுமே சமநிலையில் முடிவடைந்தமையால், இத்தொடரும் சமநிலையிலேயே முடிந்தது.
இவரது ஒருநாள் போட்டிகள் குறித்துப் பார்க்கையில் இவர் 1992ஆம் அண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக சர்கோதாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் முறையாகக் களமிறங்கினார். அந்த ஆட்டத்திலும் ஆரம்ப வீரராகக் களமிறங்கிய இவர், 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட அத்தொடரில் இவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் இவர் ஆடிய ஆட்டங்கள் பெரிதாக எடுபடாததன் காரணமாக இலங்கை அணியில் சேர்க்கப்படுவதும் வெளியேற்றப்படுவதுமாக மாறி மாறி இருந்துவந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கைக் குழாமில் இவர் சேர்க்கப்பட்டிருந்தபோதும், எந்தவொரு போட்டியிலும் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் அந்த ஆண்டே சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முழுக்குப் போட்டார்.
மொத்தம் 26 டெஸ்ட் போட்டிகளுக்காக 44 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள இவர், 1274 ஓட்டங்களை மொத்தமாகச் சேர்த்துள்ளார். இவரது ஓர் இன்னிங்ஸின் அதிகூடிய ஓட்டமாக 83 ஓட்டங்களைப் பெற்றமையே காணப்படுகின்றது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் 1962 பந்துகளை வீசி 789 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 17 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளமையைக் குறிப்பிடலாம்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் மொத்தம் 35 போட்டிகளுக்காகக் களமிறங்கி 33 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 669 ஓட்டங்களை மொத்தமாகச் சேர்த்துள்ளார். ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக 66 ஓட்டங்களைப் பெற்றமையே உள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் பந்துவீச்சைப் பொறுத்தவரையில், 954 பந்துகளை வீசி 709 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார். ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைச் சாய்த்தமையைக் குறிப்பிடலாம்.
இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதத்தைக் கூட அடிக்கவில்லை. எனினும், டெஸ்டில் 8 அரைச்சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 4 அரைச்சதங்களையும் அடித்துள்ளார்.
அதேபோல, இரு வகை ஆட்டங்களிலும் எந்தவொரு சிக்ஸரையும் அடிக்காத இவர், டெஸ்டில் 154 பௌண்டரிகளையும் ஒருநாள் ஆட்டங்களில் 59 பௌண்டரிகளையும் விளாசியுள்ளார்.
இத்தகைய பெறுபேறுகளையுடைய இவர், கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஒதுங்கிய பின்னர், பயிற்சியாளராக அவதரித்தார். 2005-2006 காலப்பகுதியில் ஓர் ஆண்டுக்கான ஐக்கிய அரபு இராச்சிய முதல் தர இருபது-20 அணிக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் இலங்கை ஏ அணிக்காக மூன்று வருடங்களுக்கு பயிற்சியாளரானார்.
அதன் பயனாக இலங்கை தேசிய அணியின் துணைப்பயிற்சியாளராக 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். எனினும், ஒழுக்காற்று நடவடிக்கை என்ற ரீதியில் 2010இல் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, அப்போதைய இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்கார, ஹத்துருசிங்க சிறந்த நுட்பங்களை அறிந்தவர் எனக் குறிப்பிட்டிருந்ததுடன், அவரது விலக்கலுக்கு அதிருப்தியையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்த ஹத்துருசிங்க, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான கனடா அணியின் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
பின்னர், 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணியின் துணைப்பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார். அந்தத் தருணத்தல் பிரதான பயிற்சியாளராகப் பணியாற்றிய அந்தோனி ஸ்ரார்ட் பதவி விலக்கப்பட்டதையடுத்து, அந்த இடத்துக்கு 2012-2013 காலப் பகுதிக்கு ஹத்துருசிங்க நியமனம் பெற்றார்.
தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர், அந்த அணியின் துணைப்பயிற்சியாளராகப் பணியாற்றிவந்ததுடன், 2013-2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிட்னி தண்டர் அணிக்காக பிரதம பயிற்சியாளராகவும் நியமனம் பெற்றிருந்தார். அந்த அணியை சிறப்பான முறையில் மேம்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு சர்வதேச அணி ஒன்றுக்கான பயிற்சியாளர் பதவி தேடிவந்தது.
அண்மையில் பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த இருபது-20 தொடரில், சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணி பெரிதாக ஜொலிக்காததையடுத்து, அந்த அணியை மேம்படுத்தும் நோக்கில் சிறந்த பயிற்சியாளரைத் தேடிய பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்தினருக்கு ஹத்துருசிங்கவை நியமிக்க விருப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கும் தகவலை அவருக்கு அனுப்பியது. இதையடுத்து தாம் தற்போது பயிற்சியாளராகப் பணி புரியும் சிட்னி தாண்டர் அணியிலிருந்து விலகி பங்களாதேஷ் அணியுடன் இணைந்துகொண்டார். இவர் அடுத்த மாதம் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.
அதேவேளை, பங்களாதேஷ் அணியினரின் உடல்தகுதியை மேம்படுத்தும் பயிற்சியாளராக இலங்கையின் முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள மரியோ வில்லவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு வேகப்பந்து மற்றும் சுழல்பந்துப் பயிற்சியாளர்களும் தேவைப்படுகின்றனர் எனவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர்களைத் தெரிவுசெய்வதற்கான பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான சமிந்த வாசின் பெயரும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. சமிந்தவாஸ் தற்போது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்தது.
மொத்தத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதில் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் முனைகின்றமை தெளிவாகின்றது.
No comments:
Post a Comment