எஸ்.ஜெயானந்தன்
இருபது-20 தொடருடன் ஆரம்பிக்கும்
இலங்கை-இங்கிலாந்துத் தொடர்
இலங்கைக் கிரிக்கெட் அணியின் அயர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் நடைபெறவுள்ள இருபது-20 போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
ஒரே ஒரு இருபது-20 போட்டி முடிவடைந்தவுடன் இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளிலும் பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கின் றன.
இரு அணிகளும் இதுவரை 5 இருபது-20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இலங்கை 3 வெற்றிகளையும் இங்கிலாந்து 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் 51 போட்டிகளில் பங்கேற்று இலங்கை அணி 25 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி 26 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதனடிப்படையில் கடந்தகால நிலைமைகளை நோக்கின் இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலத்துடனேயே காணப்பட்டுள்ளன.
அதேபோலவே தற்போதைய நிலையைப் பார்த்தாலும் இரு அணிகளும் சம பலத்துடனேயே காணப்படுகின்றன.
எது எப்படியோ இரு அணிகளும் மோதும் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
....................
பரபரப்பில் ஐ.பி.எல்.!
இந்தியாவில் மிகவும் பரபரப்புடன் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது சுற்றான ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளுள் இரண்டு அணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது அணியும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பே தற்போது அதிகரித்துள்ளது.
7ஆவது ஐ.பி.எல். இருபது-20 தொடரின் முதல் கட்டப் போட்டிகள், கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றன. பின்னர் எஞ்சிய ஆட்டங்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் இந்தியாவின் பல பாகங்களிலும் நடைபெற்றுவருகின்றன.
இந்தத் தொடரில் தற்போதுவரை ஜொலித்துவரும் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று தலா 16 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்றில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளன. இந்த அணிகளுக்கு இன்னும் தலா 4 போட்டிகள் விளையாடவேண்டியுள்ளன. எனினும், இந்தப் போட்டிகளின் வெற்றி-தோல்வி இந்த அணிகளின் ‘பிளே ஆப்’ சுற்றுக்கான முன்னேற்றத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தப் போவதில்லை.
அதேவேளை, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் மூன்றாவது அணியாக ராஜஸ்தான் அணிக்குக் கூடுதலான வாய்ப்புகள் உள்ளன. அந்த அணி இதுவரை பங்கேற்ற 11 ஆட்டங்களில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்னும் அந்த அணிக்கு 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் ஒன்றில் வென்றாலே ‘பிளே ஆப்’ சுற்றை உறுதிசெய்யமுடியும். மூன்றிலும் தோற்றால் வெளியேறக் கூடிய நிலையும் உள்ளது. எனினும், பெரும்பாலும் ராஜஸ்தான் அணி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கலாம்.
மேற்குறித்த மூன்று அணிகளின் நிலைமை இவ்வாறிருக்க, நான்காவதாக ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும் அணி எது என்ற பரபரப்பான நிலையே ஐ.பி.எல். அரங்கில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
நான்காவது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளன. குறித்த மூன்று அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இன்னும் தலா 4 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இவற்றுள் கொல்கத்தா அணி முன்னிலை வகிக்கின்றது. அந்த அணி 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஹைதாபாத் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், பெங்களூர் அணியும் 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளைப் பெற்றபோதும் சராசரி ஓட்ட அடிப்படையில் ஆறாவது இடத்தையை பெற்றுள்ளது.
ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுள் எந்த அணி தாம் எதிர்கொள்ளும் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றிபெறுகிறதோ அந்த அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் இருக்காது. அதேவேளை, கொல்கத்தா அணிக்கு 3 போட்டிகளில் வெற்றிபெற்றாலே போதும் என்ற நிலை உள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டி இவ்வாறு நடைபெற கடைசி இரு இடங்களில் உள்ள மும்பை மற்றும் டில்லி அணிகள் இனிவரும் ஆட்டங்களில் வெற்றிபெற்றால்கூட அடுத்த சுற்றை அடைய இயலாத நிலையே உள்ளது.
எனினும், கொல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் குறைந்தது இரண்டு போட்டிகளினேனும் தோல்வியைத் தளுவுகின்ற அதேவேளை, மும்பை அணி தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று சராசரி ஓட்ட அடிப்படையிலும் முன்னிலை பெறுமாயின் நான்காவது அணியாக ்பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழைய சிறு வாய்ப்பு உள்ளது. டில்லி அணி தொடரைவிட்டு முதல் அணியாக வெளியேறியுள்ளது.
No comments:
Post a Comment