எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (3)
கடந்த வாரத் தொடர்ச்சி...
1986ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை மெக்ஸிக்கோ பெற்றது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேறிய ஆர்ஜென்ரீனா - மேற்கு ஜேர்மனி அணிகள் மோதின.
இதில், 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஆர்ஜென்ரீனா அணி, இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது.
பின்னர், மெக்ஸிக்கோவைப் போலவே இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருந்த இத்தாலி, 1990ஆம் ஆண்டு தமது நாட்டில் மீண்டும் சிறப்பானதொரு தொடரை நடத்தியது.
மெக்ஸிக்கோவில் நடைபெற்ற முந்தைய உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் மோதிய ஆர்ஜென்ரீனா - மேற்கு ஜேர்மன் அணிகளே மீண்டும் இத்தொடரின் இறுதியாட்டத்திலும் பங்கேற்றன.
ஏற்கனவே தலா இரு முறை சம்பியன் பட்டங்களை வென்ற அணிகளாக இவ்விரு அணிகளும் விளங்கியமையால் மூன்றாவது முறையா யார் பட்டம் வெல்வது என்ற கோதாவில் களம் கண்டன.
அதேவேளை, கடந்த தொடரின் இறுதியாட்டத்தில் கண்ட தோல்விக்கும் சரியான பதிலடி கொடுக்கக்கூடிய சந்தர்ப்பமாக இதைப்பயன்படுத்த மேற்கு ஜேர்மனி அணி எண்ணியது.
மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒரே ஒரு கோலைப் போட்ட மேற்கு ஜேர்மனி அணி, ஆர்ஜென்ரீனாவை பதில் கோல் எதையும் போட விடாது தடுத்து ஆடி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மீண்டும் உலக சம்பியனானது. அதேவேளை, இந்த வெற்றி மூலம் அதிக தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற அணிகள் என்ற பெருமையுடன் தலா 3 பட்டங்களுடன் முன்னிலை பெற்றிருந்த இத்தாலி, பிரேஸில் அணிகளுடன் மேற்கு ஜேர்மனி அணியும் இணைந்துகொண்டது.
அதேவேளை, தொடர்ந்து மூன்று தடவைகள் (1982, 1986, 1990) இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதலாவது அணி என்ற பெருமையும் மேற்கு ஜேர்மனிக்குச் சொந்தமானது.
1994ஆம் ஆண்டு 15ஆவது உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை ஐக்கிய அமெரிக்கா பெற்றது. போட்டியை நடத்தும் நாடு என்பதால் அமெரிக்க அணியும் ஏதாவது ஜாலங்கள் காட்டக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அந்த அணி பெரியளவில் சோபிக்கவில்லை.
பதிலாக, ஏற்கனவே தலா 3 தடவைகள் பட்டம் வென்ற பிரேஸில் - இத்தாலி அணிகள் இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டின. இந்த ஆட்டத்தில் கடைசிவரை போராடிய இரு அணிகளாலும் கோல் எதையும் போட இயலவில்லை. இதனால் ‘பெனால்டி’ முறையில் முடிவை அடைய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பிரேஸில் அணி, நான்காவது தடவையாகவும் சம்பியன் பட்டத்துக்குச் சொந்தமானது. அத்துடன், அதிக தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை தனி அணியாகப் பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து 1998ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதியாட்டதில், நடப்பு சம்பியனாகக் களமிறங்கிய பிரேஸில் அணியை, தனது சொந்த மண்ணில் வைத்து எதிர்கொண்ட பிரான்ஸ் அணி, மிகவும் இலகுவாக (3-0) வென்றது. இதன் மூலம் முதல் முறையாக சம்பியன் பட்டத்தைப் பெற்றது. ஏற்கனவே ஒருமுறை பிரான்ஸில் உலகக் கிண்ணத் தொடர் (1938) நடைபெற்றிருந்தது. அதில் இந்த அணியால் சாதிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2002ஆம் ஆண்டு முதல் முறையாக ஆசியக் கண்டத்தில் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரை நடத்தும் வாய்ப்பை தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து பெற்றுக்கொண்டன. இதன்படி இத்தொடர் ஆசியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இத்தொடரின் இறுதியாட்டத்தில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வெற்றிபெற்று ஐந்தாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது.
அதேவேளை, இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றதன் மூலம் பிரேஸில் அணி, தொடர்ந்து மூன்று தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய அணி என்ற பெருமையை மேற்கு ஜேர்மனியுடன் பகிர்ந்துகொண்டதுடன், அத்துடன் 7 தடவைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முலாவது அணி என்ற பெருமையையும் தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
2006ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை ஜேர்மனி பெற்றது. (ஏற்கனவே 1974ஆம் ஆண்டு இத் தொடரை நடத்தியிருந்தது.)
இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இத்தாலி - பிரான்ஸ் அணிகள், தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமநிலையை எட்ட, பெனால்டி முறையில் முடிவைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்படி நடைபெற்ற பெனால்டி உதைகளில், இத்தாலி 5-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று மீண்டும் ஒருமுறை (4ஆவது தடவையாக) உலக சம்பியனானது.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் 19ஆவது அத்தியாயத்தை நடத்தும் வாய்ப்பை தென்னாபிரிக்கா பெற்றது. மிகவும் உணர்வுபூர்வமாக தென்னாபிரிக்கர்களால் நடத்தப்பட்ட இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு, அக்கால கட்டத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் காணப்பட்ட வீரர்களைத் தன்னகத்தே கொண்ட ஸ்பெய்ன் அணி, முதல் முறையாகத் தகுதிபெற்றது.
அதேவேளை, ஏற்கனவே இரு தடவைகள் இறுதிப் போட்டிகளில் (1974, 1978) கோட்டைவிட்ட நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாகவும் இறுதியாட்டத்திற்குத் தகுதிபெற்றது.
இத்தொடரில் ஏற்கனவே பல போட்டிகளின் முடிவுகளை சரியாகக் கணித்துக் கூறியபடியிருந்த ஒக்டோபர்ஸ் என்ற கடல் விலங்கு, இறுதியாட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஊகத்தையும் கணித்திருந்தது. அதன்படி ஸ்பெய்ன் அணியே சம்பியனாகும் என அது கணித்தது.
எனினும், அதன் கணிப்பைத் தவிடுபொடியாக்கும் முனைப்பில் களமிறங்கிய நெதர்லாந்துக்கு, தக்க அடி கொடுத்த ஸ்பெய்ன் அணி, தாம் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதலாவது தருணத்திலேயே கிண்ணத்தை வெற்றிபெற்று, ஒக்டோபஸின் கணிப்பையும் உறுதி செய்தது.
இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வெற்றிபெற, மூன்றாவது முறையாகவும் உலகக் கிண்ணக் கனவை நனவாக்க முடியாமல் நெதர்லாந்து அணி ஏமாற்றமடைந்தது.
அத்தொடர் முடிவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு பிரேஸிலில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடர் குறித்த பரபரப்பு சிறிது சிறிதாக ஆரம்பித்து தற்போது உச்சத்தை நெருங்கியுள்ளது.
(உதை தொடரும்)
No comments:
Post a Comment