Monday, May 5, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (1)

உலக விளையாட்டுக்களில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட போட்டி என்றால் அது உதைபந்தாட்டமாகத்தான் இருக்கிறது. அந்தளவுக்கு உதைபந்தாட்டத்தின் மீது அதீத ஆர்வம் உடையவர்களாக உலக மக்கள் உள்ளனர்.
அந்த வகையில் உதைபந்தாட்டப் போட்டிகளை மிகுந்த தீவிரமாக ரசித்து வரும் ரசிகர்களுக்கு, உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பித்தால் சொல்லத் தேவையில்லை. அவர்கள் பாடு பெரும் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 13 வரை பிரேஸிலில் உலகக் கிண்ணத் திருவிழா இடம்பெறவுள்ளமையால் அந்தத் தொடரைக் கண்டுகளிப்பதற்காக ரசிககர்களும் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டிகள்தான் பிரபல்யம். ஆனால், நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப் புறங்களையும் எடுத்துக்கொண்டால் கிரிக்கெட்டைப் போலவே உதைபந்தாட்டத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனவே, உலகக் கிண்ண உதைபந்தாட்டக் காய்ச்சல் மெதுமெதுவாக பரவர ஆரம்பித்துள்ள நிலையில், முதலாவது உலகக் கிண்ணத் தொடர் முதல் கடைசியாக நடைபெற்ற போட்டிகள் குறித்தும் பிரேஸிலில் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளது நிலைவரங்கள் குறித்தும் சிறிதுசிறிதாக இப்பத்தியில் தொடராக ஆராய்வோம்.
பன்னாட்டுக் உதைபந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பு 1928ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதியன்று ஆம்ஸ்டர்டமில் கூடி எடுத்த முடிவின்படி, 1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் நாடாக உருகுவை தெரிவுசெய்யப்பட்டது.
அப்போதைய நிலைவரப்படி, உருகுவேக்குச் சென்று விளையாடுவதற்கு அதிக பணத்தைச் செலவழிக்கவேண்டிய நிலை ஏனைய நாடுகளுக்கு ஏற்பட்டது. இதனால், இந்தத் தொடரியில் தென் அமெரிக்காவிலிருந்து ஏழு நாடுகளும், ஐரோப்பாவிலிருந்து நான்கு நாடுகளும், வட அமெரிக்காவிலிருந்து இரண்டு நாடுகளும் என மொத்தம் பதின்மூன்று நாடுகள் பங்கேற்றன.
போட்டிகளின் இறுதியில் மொண்டேவீடியோ நகரில் 93,000 ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், உருகுவே அணி, ஆர்ஜென்டீனா அணியை எதிர்த்து ஆடியது. இதில் உருகுவே அணி 4d2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது.
இதன்மூலம் முதலாவது உலகக் கிண்ணத் தொடரை நடத்தியதுடன் முதலாவது கிண்ணத்தை வென்ற பெருமையும் உருகுவேக்குக் கிடைத்தது.
அன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின், இரண்டாவது அத்தியாயம் இத்தாலியில் பதிவாகியது. 1934ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. (இதையடுத்து 1934ஆம் ஆண்டு தொடக்கம் 1978ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர்களில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் வகையில் அட்டவணைகள் அமைக்கப்பட்டன.)
1934ஆம் ஆண்டின் உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் செக்கோசிலோவோக்கியாவை எதிர்த்து ஆடிய இத்தாலி, 2d1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சொந்த மண்ணில் வைத்து கிண்ணத்தை நுகர்ந்தது.
பின்னர் 1938ஆம் ஆண்டு மூன்றாவது உலகக் கிண்ணத் தொடர் பிரான்ஸில் நடைபெற்றது. இத்தொடரிலும் 16 அணிகளே பங்கேற்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும், போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்பட்ட பின்னர் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் ஆஸ்திரியா வந்தமையால், ஆஸ்திரியா விலகிக்கொண்டது. பின்னர் ஆஸ்திரிய விளையாட்டு வீரர்கள் சிலர்  ஜேர்மன் அணியில் இணைந்து விளையாடினர். இதனால், இப்போட்டியில் 15 அணிகளே பங்கேற்றன.
இதன் இறுதிப் போட்டியில் ஹங்கேரி அணியை இறுதியாட்டத்தில் சந்தித்த நடப்பு சம்பியனாகக் களமிறங்கிய இத்தாலி அணி, 4d2 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்து இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
பின்னர் 1942, 1946 ஆண்டுகளில் முறையே ஜேர்மன் மற்றும் பிரேஸிலில் நடைபெறவிருந்த உலகக் கிண்ணத் தொடர்கள் இரண்டாம் உலக யுத்தம் காரணமாகக் கைவிடப்பட்டன.
பின்னர் 1950ஆம் ஆண்டு மீண்டும் உலகக் கிண்ணத் தொடர் நடத்தப்பட்டது. இதுவரை காலமும் உதைபந்தாட்டத்தைப் புறக்கணித்து வந்த இங்கிலாந்து, பிரேஸிலில் நடைபெற்ற இத்தொடரில் முதல் முறையாகப் பங்கேற்றது.
இத்தொடரில் 13 அணிகளே பங்கேற்றன. 16 அணிகள் போட்டிக்கான அட்டவணையில் இடம்பெற்றிருந்தன. இருப்பினும், துருக்கியும் இஸ்கஸ்தானும் போட்டிநிரல் தயாரிக்கும் முன்னரே விலகிக் கொண்டன. இதனால்  15 அணிகளுடன் நடத்துவதற்கு பிரான்ஸ் (தகுதிகாண் போட்டிகளில் தோற்றிருந்தாலும்) அழைக்கப்பட்டது. எனினும், போட்டி நிரல் தயாரிக்கப்பட்ட பின்னர் இந்தியாவும் பிரான்ஸும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதால் 13 அணிகளே பங்கேற்றன.
இத்தொடரின் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியனான உருகுவே அணி, போட்டியை நடத்திய பிரேஸில் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 2d1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது முறையாகவும் உலக சம்பியனானது.
(தொடரும்)

No comments:

Post a Comment

Total Pageviews

8,866