Monday, May 26, 2014

எஸ்.ஜெயானந்தன்
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் குறித்த மீள் பார்வை (4)

கடந்த வாரத் தொடர்ச்சி...
முதலாவது தங்கப்பந்தை 
வென்ற நசாஸி

கடந்த தொடர்களில் ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடர்களினதும் இறுதியாட்டங்களில் பங்கேற்ற அணிகள் குறித்தும் கிண்ணத்தைக் கைப்பற்றிய அணிகள் குறித்தும் பார்த்தோம். இனி இப்பத்தியில் அதே உலகக் கிண்ணப் போட்டிகளில் பெறப்பட்ட ஏனைய வெற்றிகள் குறித்துப் பார்ப்போம்.
உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதியாட்டத்தில் வெல்கின்ற அணிக்குக் கிடைக்கின்ற விருதுகளைப் போலவே, அத்தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட திறமைகளுக்கான விருதுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தகைய விருதுகள் பல வகையில் வழங்கப்படுகின்றன. எனினும், அவற்றுள் தங்கப்பந்து விருது, தங்கக்காலணி விருது, தங்கக் கையுறை விருது என்பன மிகவும் பிலபல்யம் பெற்றதுடன், அனைவரதும் எதிர்பார்ப்புக்குள்ளானதும் கூட.
அந்த வகையில் இத்தகைய சிறப்பு மிக்கவற்றுள் முதலில் தங்கப்பந்து விருது குறித்துப் பார்ப்போம்.
இந்த விருதுக்குரியவரைத் தெரிவுசெய்யும் முறைகுறித்துப் பார்க்கையில், உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சிறந்த வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியலை ஐ.சி.சி.யின் தொழில்நுட்பக் குழுவினர் வாக்கெடுப்புக்கு விடுவர். பின்னர் வாக்கெடுப்பின் அடிப்படையில் உலகக் கிண்ணத் தொடரின் இறுதித் தினத்தன்று இந்த விருதைப் பெறும் வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டு அந்தத் தருணத்திலேயே விருதுகளும் வழங்கப்படும்.
வாக்கெடுப்பு அடிப்படையில் முதலிடத்தைப் பிடிக்கும் வீரருக்கு தங்கப்பந்து வழங்கப்படும். அதேபோல இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு வெள்ளிப்பந்தும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வீரருக்கு வெண்கலப் பந்து விருதும் வழங்கப்படும்.
1930ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை இந்த விருது வழங்கும் முறையும் நடைமுறையில் உள்ளது.
1930ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் தங்கப்பந்து விருதினை முதல் முறையாக வென்றவர் உருகுவேயின் அப்போதைய அணித்தலைவராக இருந்தவரும் பின்கள வீரரருமான ஜோஸ் நசாஸி ஆவார். அதேவேளை, வெள்ளிப்பந்து விருது ஆர்ஜென்ரீனாவின் குல்லெர்மோ ஸ்ரேபிலேக்கும், வெண்கலப்பந்து விருது ஜோஸ் லென்ட்ரோ அன்ராட்டுக்கும் கிடைத்தது.
1930ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு உலகக் கிண்ணத் தொடரிலும் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இந்த விருதுகளை வென்றனர். அந்த வகையில் இந்த விருதுப் பட்டியலில் தங்கப்பந்துகளை வென்றோரில் பிரேஸில் வீரர்களின் ஆதிக்கமே மோலோங்கிக் காணப்படுகிறது. பிரேஸில் வீரர்கள் 7 தடவைகள் இந்த விருதினை தமதாக்கிக்கொண்டதுடன், கூடுதலான தடவைகள் தங்கப்பந்து விருதினை வென்றவர்கள் என்ற பெருமையையும் தம் வசம் வைத்துள்ளனர்.
அதேவேளை, 1938ஆம் ஆண்டு முதல் முறையாக தங்கப்பந்து விருது உருகுவே வீரருக்குக் கிடைத்தபோதிலும், பின்னர் அந்த விருதினை 2010ஆம் ஆண்டு வரை எந்தவொரு உருகுவே வீரராலும் அதனை நுகரமுடியவில்லை. 85 வருட கால இடைவெளியின் பின்னர் 2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின்போது உருகுவே வீரர் டிகோ போர்லன் அந்த விருதை வென்று, இரண்டாவது தடவையாக தமது நாட்டுக்கு இந்த விருதினை எடுத்துச் சென்றார்.
அதேவேளை, இந்தத் தொடரின் வெள்ளிப்பந்து விருதினை நெதர்லாந்தின் வெஸ்லெ ஸ்னெஜ்டர் பெற, வெண்கலப் பந்து விருதினை ஸ்பெய்னின் டோவிட் வில்லா வென்றெடுத்தார்.
தங்கப்பந்து விருதினை எந்தவொரு வீரரும் ஒரு தடவைக்கு மேல் வென்றிருக்கவில்லை. எனினும், வெவ்வேறு கால கட்டத்தில் தங்கப்பந்து, வெள்ளிப்பந்து, வெண்கலப்பந்துகளை வென்றிருக்கின்றனர்.
அந்த வகையில், பிரேஸில் ஜாம்பவன் பீலே, 1958ஆம் ஆண்டு வெள்ளிப்பந்து விருதினை வென்றதுடன், 1970ஆம் ஆண்டு தங்கப்பந்தினை வென்றார். அதேபோல, இத்தாலி வீரரான பவோலா ரொஸி, 1978ஆம் ஆண்டு வெள்ளிபந்தினையும் பின்னர் 1982ஆம் ஆண்டு தங்கப்பந்தினையும் வென்றார். இவர்களின் வரிசையில் ஆர்ஜென்ரினா ஜாம்பவான் டியாகோ மரடோனாவும் உள்ளார். இவர் 1986ஆம் ஆண்டு தங்கப்பந்தினையும், 1990ஆம் ஆண்டு வெண்கலப்பந்தினையும் வென்றார். அதேபோல பிரேஸில் வீரரான ரொனால்டோ 1998ஆம் ஆண்டு தங்கப்பந்தினை வென்ற அதேவேளை, 2002ஆம் ஆண்டு வெள்ளிப்பந்தினை வென்றார்.
அத்துடன், தொடர்ந்து இரு உலகக் கிண்ணத் தொடர்களில் தங்கப்பந்து விருதினை வென்ற நாடு என்ற பெருமையை பிரேஸில் தன்னகத்தே கொண்டுள்ளது.
1938, 1950ஆம் ஆண்டுகளிலும் (1942, 1946ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவில்லை), 1958, 1962ஆம் ஆண்டுகள் மற்றும் 1994, 1998ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களில்  (3 தடவைகள்) பிரேஸில் வீரர்களால் தங்கப்பந்து வெல்லப்பட்டுள்ளது.
(தொடரும்)

No comments:

Post a Comment

Total Pageviews

8,866