Monday, September 22, 2014

உலகக் கிண்ணமா?


எஸ்.ஜெயானந்தன்

உலகக் கிண்ணமா?

கிரிக்கெட்.... இதுதான் இலங்கையரான எம் எல்லோருக்கும் தெரிந்த உலகக் கிண்ணத் தொடர் நடக்கும் விளையாட்டு. இது தவிர உதைபந்தாட்ட உலகக் கிண்ணம். இவைதான் நம்மில் பலருக்குத் தெரிந்த குழுநிலையாக சர்வதேச அணிகள் பங்கேற்கும் பெரிய தொடர்கள் ஆகும்.

இவைகுறித்துத் தெரிந்த நம்மவர்களில் 75 வீதத்துக்கும் அதிமானவர்கள், ஏனைய சர்வதேச ரீதியிலான குழுநிலை விளையாட்டுகள் குறித்து எதுவும் தெரியாதவர்களாகவே உள்ளனர்.
இதற்கும் காரணம் உண்டு. கிரிக்கெட் தவிர எமது நாட்டிலிருந்து சர்வதேச அளவில் பிரகாசிக்கக்கூடிய அளவில் எந்தவொரு விளையாட்டும் இல்லை.
அண்மையில் உலகக் கிண்ணக் கூடைப்பந்தாட்டத் தொடர் ஒன்று ஸ்பெய்னில் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து எத்தனை பேருக்குத்தான் தெரியும்?
கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நமது நாட்டிலும் பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றமை குறித்து பலருக்கும் தெரியாது.
எனவே, நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணக் கூடைப்பந்தாட்டத் தொடர் குறித்து இங்கு சிறிது  பார்ப்போம்.
1950ஆம் ஆண்டு ‘பிபா’ வால்ஆரம்பிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் 17ஆவது தொடர் கடந்த மாதம் 30ஆம் திகதி தொடக்கம் கடந்த 14ஆம் திகதிவரை ஸ்பெய்னில் நடைபெற்று வந்தது.
ஏற்கனவே நடைபெற்ற 16 தொடர்கள் அடிப்படையில் முறையே, ஆர்ஜென்ரீனா (1950), அமெரிக்கா (1954), பிரேஸில் (1959), (1963), சோவியத் ஒன்றியம் (1967), யுகோஸ்லாவியா (1970), சோவியத் ஒன்றியம் (1974), யுகோஸ்லாவியா (1978), சோவியத் யூனியன் (1982), ஐக்கிய அமெரிக்கா (1986), யுகோஸ்லாவியா (1990), ஐக்கிய அமெரிக்கா (1994), யுகோஸ்லாவியா (1998), (2002), ஸ்பெய்ன் (2006), ஐக்கிய அமெரிக்கா (2010) ஆகிய நாடுகள் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.
யுகோஸ்லாவியா 5 தடவைகள் சம்பியனாகி அதிக தடவைகள் பட்டம் வென்ற நாடாக விளங்கியது.
இவ்வாறானதொரு கடந்த காலப் பெறுபேறுகளுடன், 2014ஆம் ஆண்டுக்கான தொடர் நடைபெற்றது.
மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. இவை நான்கு பிரிவுகளாக (ஏ, பி, சி, டி) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 6 அணிகள் இடம்பெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தமது பிரிவிலுள்ள ஏனைய அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முன்னிலை வகிக்கும் தலா 4 அணிகள், ‘16 அணிகள்’ சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் (4) அரையிறுக்கு முன்னேறும். பின்னர் அதில் வெற்றிபெறும் இரு அணிகள் இறுதியாட்டத்துக்கு தெரிவாகும். இதிலிருந்து சம்பியன் அணி தெரிவுசெய்யப்படும்.
இத்தகைய போட்டி முறைமை அடிப்படையில் முதல் சுற்று மற்றும் 16 அணிகள் சுற்று என்பவற்றைக் கடந்து காலியிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய எட்டு அணிகளுக்கிடையிலான போட்டிகளில், லித்துவேனியா 73-61 என்ற கோல் கணக்கில் துருக்கியையும், அமெரிக்கா 119-76 என்ற கோல் கணக்கில்
ஸ்லோவேனியாவையும், செர்பியா 84-56 என்ற கோல்கள் கணக்கில் பிரேஸிலையும், பிரான்ஸ் 65-52 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரையிறுதியில் அமெரிக்கா - லித்துவேனிய அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் - செர்பிய அணிகளும் மல்லுக்கட்டின.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - பரபரப்பானதாக இந்த அரையிறுதியாட்டங்கள் நடைபெற்றன. அமெரிக்க - லித்துவேனிய அணிகளுக்கிடையிலான அரையிறுதியாட்டத்தில் அமெரிக்கா 96-68 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டிக்கு அடுத்த நாள் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியாட்டத்தில் செர்பியா 90-85 என்ற கோல் கணக்கில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் பிரான்ஸை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடந்த 14ஆம் திகதி இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் அமெரிக்கா - செர்பிய அணிகள் களமிறங்கின.
இதற்கு முதல்நாள் மூன்றாவது இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அரையிறுதியில் தோற்ற அணிகளான லித்துவேனியா - பிரான்ஸ் அணிகள் மோதின.மூன்றாவது இடத்துக்கான போட்டியாக அன்றி சம்பியன் பட்டத்தை வெல்ல இரு அணிகள் எவ்வாறு மோதிக்கொள்ளுமோ அந்தளவுக்கு இந்த ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு அணிகளும் கடைசிவரை மாறி மாறி கோல்களைப் போட்டுக்கொண்டிருந்தன. எனினும், இறுதியில் 95-93 என்ற கோல் அடிப்படையில் இரு கோல்கள் வித்தியாசத்தில் பிரான்ஸ் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
மறுநாள் கூடைப்பந்தாட்ட உலகமே  எதிர்பார்த்துக் கிடந்த இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக எதிரணியினரின் கோல் வளையங்களுக்குள் தனது கைகளால் ஜாலம் காட்டிய அமெரிக்காவின் கிரி இர்விங் 26 கோல்களைப் புகுத்தினார். இவரைப் போலவே சக வீரரும் அணித்தலைவருமான ஹார்டன் தனது பங்குக்கு 23 கோல்களைப் போட்டுக்கொடுத்தார். இவர்களுடன் ஏனைய வீரர்களும் இணைந்து அவ்வப்போது கோல்களைப் போட அமெரிக்கா 129-92 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வெற்றிகொண்டது.
செர்பியா சார்பாக சிறப்பாக விளையாடிய கலிபிக் அதிகபட்சமாக 18 கோல்களைப் போட்டார்.
அமெரிக்கா இந்தத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாமல், ஐந்தாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் உலகக் கிண்ணத்தை அதிக தடவைகள் (5) வென்ற அணி என்ற பெருமையை யுகோஸ்லாவியாவுடன் பகிர்ந்துகொண்டது.
அத்துடன், உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இரு தடவைகள் வென்ற அணிகள் வரிசையில் பிரேஸில் (1959, 1963), யுகோஸ்லாவியா (1998, 2002) ஆகியவற்றுடன் அமெரிக்காவும் இணைந்துகொண்டுள்ளது.
2010ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் அமெரிக்காவே சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


..........................................
ஆசிய சம்பியன் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டம்;சாதிக்குமா இலங்கையின் விமானப்படை அணி?
ஆசிய உதைபந்தாட்டக் கூட்டமைப்பினால் ஆண்டு தோறும் நடத்தப்பட்டுவரும் உறுப்பு நாடுகளிலுள்ள சம்பியன் கழகங்களுக்கிடையிலான ஏ.எவ்.சி.தலைவர் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதிச் சுற்று கடந்த 20ஆம் திகதி முதல் வரும் 26ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
ஆசியக் கண்டத்தில் உள்ள உதைபந்தாட்ட நாடுகளில் உள்ள கழகங்கள் அந்நாட்டு உதைபந்தாட்ட சபையின் அனுமதியுடன் இப்போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கமுடியும்.
அதன்படி அந்தந்த நாடுகளின் அனுமதி வழங்கப்படும் உள்ளூர் சம்பியன் அணிகள் பங்கேற்கும் வகையில் ஏ.எவ்.சி. (அண்டிச்ண ஊணிணிணாஞச்டூடூ இணிணஞூஞுஞீஞுணூச்ணாடிணிண) அமைப்பினால் 2005ஆம் ஆண்டு முதல் இத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
2014ஆம் ஆண்டுக்கான தொடர் பத்தாவது  தொடராக அமைகின்றது. இதை மொனோகோலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
மொத்தம் 11 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் கட்டப் போட்டிகளுக்கான அணிகள், மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்குமான போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டன.
அதன்படி ‘ஏ’ (4 அணிகள்) பிரிவுக்கான போட்டிகள் இலங்கையிலும், ‘பி (4 அணிகள்) பிரிவுக்கான போட்டிகள் பிலிப்பைன்ஸிலும், ‘சி’ (3 அணிகள்) பிரிவுக்கான போட்டிகள் மொனோகோலியாவிலும் கடந்த மே மாதம் நடைபெற்றன.
இப்போட்டிகளின் பெறுபேறுகளின்படி ஒவ்வொரு பிரிவிலுமிருந்து தலா இரண்டு அணிகள் தெரிவுசெய்யப்பட்டன. தெரிவுசெய்யப்பட்ட 6 அணிகளும் தலா 3 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். பின்னர் இரு பிரிவுகளிலும் முன்னிலை பெறும் இரு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.
இத் தொடரின் இறுதிச் சுற்று கடந்த 20ஆம் திகதி முதல் வரும் 26ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.
இத்தொடரில் இலங்கை சார்பாக பங்கேற்ற விமானப்படை அணியும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற தொடர்களில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற அணிகளின் சிறப்பான பெறுபேறுகளாக 2005ஆம் ஆண்டு புளுஸ்டார் கழகமும், 2007ஆம் ஆண்டு ரத்னம் கழகமும் அரையிறுதிவரை முன்னேறியமையே உள்ளன.

போட்டி அட்டவணை
20 செப். 2014 பி.ப. 1 மணி ஏர்சிம் எவ்சி - சேக் ருசெல் க்ராரா சக்ரா
பி.ப. 4 மணி மனாங் மார்சியங்டி - இலங்கை விமானப்படை
22 செப். 2014 பி.ப. 1 மணி ரிமியங்சு - ஏர்சிம் எவ்சி
பி.ப. 4 மணி எப்சி ஹுடு - மனாங் மார்சியங்டி கழகம்
24 செப். 2014 பி.ப. 1 மணி சேக் ருசெல் க்ராரா சக்ரா - ரிமியங்சு
பி.ப. 4 மணி இலங்கை விமானப்படை - எப்சி ஹுடு
26 செப். 2014 பி.ப. 4 மணி இறுதியாட்டம்

பிரிவுகள்
‘ஏ’
இலங்கை விமானப்படை
எப்சி ஹுடு (துருக்மெனிஸ்தான்)
மனாங் மார்சியங்டி (நேபாளம்)

‘பி’
சேக் ருசெல் க்ராரா சக்ரா லிமிட்டட் (பங்களாதேஷ்)
ரிமியங்சு (தென் கொரியா)
ஏர்சிம் எவ்சி (மொனோகோலியா)


............................................
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுபளுதூக்கல் போட்டிகளில் வடக்குக்கு 18 பதக்கங்கள்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற பளுதூக்கலில் வட மாகாணத்துக்கு  18 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 5ஆம் திகதி ஆரம்பித்த பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதிவரை நான்கு கட்டங்களாக நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுவருகிறது.
இதன் இரண்டாம் கட்டப் போட்டிகள் கடந்த 14, 15, 16ஆம் திகதிகளில்  நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக வெவ்வேறு வயதடிப்படையில் வெவ்வேறு நிறைப் பிரிவுகளில் பளுதூக்கல் போட்டிகள் டிப்பிடிய ராஜகிரிய அரநாயக்க  மகாவித்தியாலத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளிலேயே வட மாகாணத்துக்கு 18 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில், 4 முதலாமிடங்களும், 7 இரண்டாமிடங்களும், 7 மூன்றாமிடங்களும் அடங்குகின்றன.
17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான 56 கிலோ கிராம் பளுதூக்கல் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரி மாணவனான விதுசன், 17 வயதுப்பிரிவுப் பெண்களுக்கான 63 கிலோ கிராம் பளுதூக்கலில் யாழ்.
சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி அர்சிகா, 19 வயது ஆண்களுக்கான 94 கிலோ கிராம் பளுதூக்கல் பிரிவில் அச்சுவேலி மத்திய கல்லூரியின் துஷாந்த், 19 வயதுப் பிரிவுப் பெண்களுக்கான 63 கிலோ கிராம் பளுதூக்கலில் யாழ். வேம்படி மகளிர் உயர் கல்லூரி மாணவி டேனுஜா ஆகியோர் முதலிடங்களைப் பெற்றனர்.
வடக்குக்குக் கிடைக்கப்பெற்ற 18 பதக்கங்களுள் யாழ். இந்துக்கல்லூரி  ஒரு முதலாமிடம், நான்கு இரண்டாமிடங்கள் மற்றும் 3 மூன்றாமிடங்கள் அடங்கலாக மொத்தம் 8 பதக்கங்களை வென்று முன்னிலை பெற்றுள்ளது.

பெயர்                பிரிவு நிறை இடம் பாடசாலை வலயம்
1. விதுசன் 17-ஆண்) 56 1 யா/யாழ். இந்துக்கல்லூரி                   யாழ்.
2. அர்சிகா 17-பெண்        63 1 யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரி யாழ்.
3. துஷாந்த்      19-ஆண் 94              1 யா/அச்சுவேலி மத்திய கல்லூரி வலி.
4. தேனுஜா 19-பெண் 63 1 யா/வேம்படி மகளிர் உயர் பாடசாலை
யாழ்ப்பாணம்
5. விஸ்னுகாந்த் 17-ஆண் 69 2 யா/ யாழ். மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம்
6. பபிலன் 17-ஆண் 77 2 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
7. மிதுன் 17-ஆண் 85 2 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
8. மைதிரேஜன்சர்மா 17-ஆண் 94+ 2 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
9. சுஷதிகா 17-பெண் 53 2 யா/மகாஜனாக்கல்லூரி வலிகாமம்
10. கிருசிகன் 19-ஆண் 105+ 2 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
11. கௌசிகா 19-பெண் 58 2 மு/வித்யானந்தாக் கல்லூரி
முல்லைத்தீவு
12. அஜிதரன் 17-ஆண் 50 3 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
13. மிது 17-ஆண் 77 3 வ/வவுனியா தமிழ் ம.ம.வி. வவுனியா
தெற்கு
14. ஹரிகரன் 17-ஆண் 94 3 வ/வீரபுரம் மணிவாசகர் வித். வவுனியா
தெற்கு
15. சிறிசன் 17-ஆண் 94 3 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
16. ஜெனோஜன் 19-ஆண் 77 3 வ/வவுனியா தமிழ் ம.ம.வி.
வவுனியா தெற்கு
17. அபிஷேக் 19-ஆண் 85 3 யா/யாழ். இந்துக்கல்லூரி
யாழ்ப்பாணம்
18. தஷாந்தினி 19-பெண் 63 3 யா/ சிதம்பராக்கல்லூரி வடமராட்சி

No comments:

Post a Comment

Total Pageviews