Sunday, December 21, 2014

உத்வேகமளித்த வெற்றித்தொடர்!

தாய் மண்ணுக்கு விடைகொடுத்த இரு நட்சத்திரங்கள்
அண்மைய சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்குப் பெருந்தோல்வியை ஏற்படுத்தி, கடந்த மாதம் இந்தியாவுடன் ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து மீளும் வகையில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது இலங்கை அணி.
இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது.

நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்ற இத்தொடரின் முதலாவது ஒருநாள் ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, டில்ஷான் (88), குசல் பெரேரா (59), மஹேல ஜெயவர்தன (55) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 317 ஓட்டங்களைக் குவித்தது.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெற்றியிலக்கை எட்ட முடியாமல் 292 ஓட்டங்களைச் சேர்த்த
நிலையில் 47.1 ஓவர்களுள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 25 ஓட்டங்களால் தோற்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக இலங்கையின் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
நவம்பர் 29ஆம் திகதி ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 43 ஓவர்களுள் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 185 ஓட்டங்களையே சேர்த்தது. அந்த அணி சார்பாக ஆகக்கூடுதலாக போபரா 51 ஓட்டங்களையும், ரூட் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கையின் பந்துவீச்சில் கலக்கிய அஜந்த மென்டிஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 
பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, மஹேல (77), சங்கக்கார (67) ஆகியோரின் ஆட்டமிழக்காத - நிலையான ஆட்டம் கைகொடுக்க 34.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 186 ஓட்டங்களைச் சேர்த்து, 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் நாயகனாக இலங்கையின் மஹேல ஜெயவர்தன தெரிவானார்.
முதலிரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்த நிலையில், கடந்த 3ஆம் திகதி அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது.
இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சங்கக்கார (63), திரிமன்னே (62*) ஆகியோரின் அரைச்சதங்கள் கைகொடுக்க, மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 36 ஓவர்களில் 242 ஓட்டங்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து சார்பாக அபாரமாகப் பந்துவீசிய வோர்கஸ் 3 விக்கெட்டுகளைச் 
சாய்த்தார்.
பின்னர் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து, 33.4 ஓவர்களில் 236 ஓட்டங்களைச் சேர்த்தபோது மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் டக்வோர்த் லூவிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 55 ஓட்டங்களைச் சேர்த்த இங்கிலாந்தின் பட்லர்(*) ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நான்காவது ஆட்டம் கடந்த 7ஆம் திகதி ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 
இதில் முதலில் ஆடி 50ஆவது ஓவரில் கடைசி விக்கெட்டையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணி 265 ஓட்டங்களைச் சேர்த்தது. 
இலங்கையின் டில்ஷான், ஹேரத், அஜந்த மென்டிஸ் கூட்டணி அபாரமாகப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தமை சிறப்பம்சமாகும்.
பின்னர், 49.4ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து, 266 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கைக் கடந்த (267) இலங்கை அணி, 6 விக்கெட்டுகளால் மூன்றாவது வெற்றியை ருசித்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் சங்கக்கார (86), மத்யூஸ் (51*) ஆகியோரின் அரைச்சதங்கள் சிறப்பானவையாகும். ஆட்டநாயகனாக சங்கக்கார தெரிவானார்.
3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இலங்கை அணி, பல்லேகல மைதானத்தில் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற தொடரின் 5ஆவது ஆட்டத்திலும் வெற்றிபெற்று கிண்ணத்தைத் தன் வசப்படுத்தும் நோக்கில் களமிறங்கியது. 
அதேபோல, இங்கிலாந்து அணியும் எப்படியாவது இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் இருந்தது.
இந்நிலையில், பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனி மனிதனாக ஆடிய சங்கக்காரவின் 91 ஓட்டங்களுடன் 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 239 ஓட்டங்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து சார்பாக அபாரமாகப் பந்துவீசிய வோர்கஸ், 6 விக்கெட்டுகளைச் சாய்த்தமை இலங்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆட இங்கிலாந்து தயாரானபோது மழை குறுக்கிட்டமையால் அன்றையதினம் ஆட்டம் கைவிடப்பட்டு மறுநாள் நடத்தப்பட்டது.
மறுநாள் தனது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை எட்டி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இங்கிலாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்று கடைசிவரை ஆட்டமிழக்காது ஆடி சதமடித்த ரூட் (104) ஆட்டநாயகன் விருதைத் தன்வசப்படுத்திக்கொண்டார்.
இலங்கை 3 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றமையால் தொடரின் 6ஆவது ஆட்டம் பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
கடந்த13ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சங்கக்கார (112) தனது 20ஆவது சதத்தை விளாச, அவருக்கு பக்கதுணையாக நின்று ஆடிய டில்ஷான், 64 ஓட்டங்களைச் சேர்க்க இலங்கை அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ஓவர்களில் 292 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கை நெருங்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, 41.3ஆவது ஓவரில் கடைசி விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ஓட்டங்களுடன் சுருண்டது. இதையடுத்து இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றிக்கனியைப் பறித்தது.
இங்கிலாந்து சார்பாக துடுப்பாட்டத்தில் ஆகக்கூடுதலாக ரூட், 55 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார்.
இங்கிலாந்தைத் திக்குமுக்காட வைத்த லக்மல் 4 விக்கெட்டுகளையும், சேனநாயக்க 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற சகலதுறை வீரரான டில்ஷானும் தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார்.
இந்த ஆட்டத்தின் நாயகனாக சங்கக்கார தெரிவாக, 6ஆவது ஆட்டத்தில் வெற்றிபெற்ற இலங்கை அணி 4-2 என்ற கணக்கில் தொடரையும் தன்வசப்படுத்திக்கொண்டது.
இந்நிலையில், தொடரின் 7ஆவது மற்றும் கடைசி ஆட்டம் கடந்த 16ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் பகல்-இரவு ஆட்டமாக அரங்கேறியது.
இந்தப் போட்டி, தொடரைத் தீர்மானிக்கும் ஆட்டமாக இல்லாதபோதும், இலங்கைக்கு முக்கிய ஆட்டமாகக் கருதப்பட்டது.
அதாவது, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா-நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ள  சங்கக்கார மற்றும் மஹேல ஆகியோர் இலங்கையில் ஆடும் இறுதிப் போட்டியாக அமையும் என்பதால் இந்த ஆட்டம் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளானது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைச் சேர்த்தது.
டில்ஷான் சதமடித்து (101) அசத்தினார்.  சந்திமால் (55), திசார பெரேரா (54) ஆகியோர் அரைச்சதம் கண்டனர். மஹேல 28 ஓட்டங்களையும், சங்கக்கார 33 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பின்னர் 303 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் இலங்கை வீரர்களின் பந்துவீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால், 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 215 ஓட்டங்களுள் சுருண்டது. இதையடுத்து இலங்கை அணி 87 ஒட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் ரூட் 80 ஓட்டங்களைச் சேர்த்திருந்தார். இலங்கை சார்பாக பந்துவீச்சில் டில்ஷான் (3), பிரசன்ன (3), லக்மல் (2), டில்ருவன் பெரேரா (1), மஹேல ஜெயவர்தன (1) ஆகியோர் விக்கெட்டுகளைத் தமக்கிடையை பகிர்ந்துகொண்டனர்.
ஏழாவது ஆட்டத்திலும் அபாரமாக வெற்றிபெற்ற இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் தொடரையும் அபாரமாகவே வெற்றிகொண்டது.
கடைசி ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவான டில்ஷானே தொடரின் நாயகனாகவும் ஆனார்.
இந்தத் தொடரில் பெரு வெற்றிபெற்ற இலங்கை அணி, இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது.
அந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகமாக - உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிவருவதாலும் இலங்கை அணி தனது பலத்தை நிரூபித்துள்ளமை ஏனைய அணிகளுக்கு சற்று கிலியை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால், மறுமுனையில் ஆடிய இங்கிலாந்து அணியின் நிலைமைதான் மோசமாகிவிட்டது. ஒரு தடவைகூட ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை நுகரமுடியாமல் தவித்து வருகின்ற நிலையில் இத்தொடரின் தோல்வியும் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தவல்லதாக அமையும்.


தொடரில் கூடுதல் ஓட்டம் பெற்றோர்
வீரர் போட்டி ஓட்டம்
சங்கக்கார (இல.) 7 454
ரூட் (இங்.) 7 367
டில்ஷான் (இல.) 7 357
அலி (இங்.) 7 236
மஹேல (இல.) 6 211

சதம்/ஓர் இன்னிங்ஸில் கூடுதல் ஓட்டம் பெற்றோர்
வீரர் பந்து ஓட்டம்
அலி (இங்.) 87 119
சங்கக்கார (இல.) 112 112
ரூட் (இங்.) 117 104*
டில்ஷான் (இல.) 124 101

கூடுதல் இணைப்பாட்டம்
வீரர் ஓட்டம்
சங்கக்கார-டில்ஷான் (இல.) 153 (2ஆவது விக்கெட்)
சங்கக்கார-மஹேல (இல.) 149* (3)
டில்ஷான்-பெரேரா (இல.) 120 (1)
ரெய்லர்-ரூட் (இங்.) 104 (3)
சங்கக்கார-மஹேல (இல.) 96 (3)

ஓர் இன்னிங்ஸில் கூடுதல் ஓட்டம் பெற்ற அணி
அணி ஓவர் ஓட்டம்
இலங்கை 50 317/6
இலங்கை 50 302/6
இங்கிலாந்து 47.1 292
இலங்கை 50 292/7
இலங்கை 49.4 267/4

தொடரில் கூடுதல் விக்கெட் வீழ்த்தியோர்
வீரர் போட்டி விக்கெட்
வோர்கஸ் (இங்) 7(58 ஓவர்) 14
டில்ஷான் (இல) 7 (58.1) 12
ஜோர்டன் (இங்) 5 (46) 10
அஜந்த மென்டிஸ் (இல) 5 (39.4) 09
ஹேரத் 4 (34) 07

ஓர் இன்னிங்ஸில் கூடுதலாக ஆட்டமிழக்கச் செய்தோர்
வீரர் ஆட்டமிழப்பு
சங்கக்கார (இல) 4 (ஸ்டம்பிங்)
சங்கக்கார (இல) 3(1ஸ்டம்பிங், 2 பிடிஎடுப்பு)
பட்லர் (இங்) 3(2ஸ்டம்பிங்,1 பிடிஎடுப்பு)
சங்கக்கார (இல) 2 (பிடிஎடுப்பு)
சங்கக்கார (இல) 2 (பிடிஎடுப்பு)
சங்கக்கார (இல) 2 (பிடிஎடுப்பு)

இத்தொடர் முழுவதும் சங்கக்கார 10 பிடியெடுப்புகள் மற்றும் 4 ஸ்டம்பிங்குகள் உட்பட 14 ஆட்டமிழப்புக்களைச் செய்து, கூடுதலாக ஆட்டமிழப்புச் செய்தோர் வரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்

ஓர் ஆட்டத்தில் இரு அணிகளும் பெற்ற கூடுதல் ஓட்டம்
அணி ஓவர் ஓட்டம்
கொழும்பு 97.1 609
கொழும்பு 99.4 532
கொழும்பு 95.5 517
பல்லேகல 91.3 494

பல்லேகல 98.1 479


No comments:

Post a Comment

Total Pageviews