Monday, December 29, 2014

ரியல் மார்டிட்டின் மற்றொரு இலக்கு!

சியர்களான நமக்குப் பரீட்சயமான உலக கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்போன்றதொரு  உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது.
உலகளவில் பிரபல்யமிக்க உள்ளூர் சம்பியன் கழகங்களுக்கிடையிலான இத்தொடர் கடந்த 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் நடைபெற்றது.
2000ஆம் ஆண்டு முதல் முதலாக இப்போட்டித் தொடர் பிரேஸிலில் நடத்தப்பட்டது. பின்னர் 2005ஆம் ஆண்டு இரண்டாவது தொடர்
நடத்தப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் புதிய முறையில் அதாவது பிபா கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
வருடந்தோறும் நடைபெற்றுவரும் இத்தொடரில் ஆறு கண்டங்களைச் சேர்ந்த சம்பியன் அணிகள் பங்கேற்று 
வருகின்றன.
அந்த வரிசையில் 11ஆவது மற்றும் இந்த ஆண்டுக்கான இத்தொடர் கடந்த 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை மொராக்கோவில் நடைபெற்றது.
இதில், ஆர்ஜென்ரீனாவைச் 
சேர்ந்த சான் லொரன்சோ, ஸ்பெய்னின் ரியல் மார்டிட், அவுஸ்திரேலியாவின் வெஸ்டன் சிட்னி வன்டெரெர்ஸ், அல்ஜீரியாவின் ஈஎஸ் செடிவ், மெக்சிக்கோவின் கிறஸ் அசுல், நியூஸிலாந்தின் அக்லான்ட் சிட்டி மற்றும் போட்டியை நடத்தும் மொராக்கோவின் மொஹ்ரெப் டெரௌன் ஆகிய ஏழு அணிகள் பங்கேற்றன.
அணிகளின் தரத்தைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு அணிகளும் நேரடியாக வெவ்வேறு கட்டங்களுக்கு முன்னேறியிருந்தன.
அந்த வகையில் ஈஎஸ் செடிவ்,  கிறஸ் அசுல் மற்றும் வெஸ்டன் 
சிட்னி வன்டெரெர்ஸ் அணிகள் காலிறுதிக்கும், சான் லொரன்சோ மற்றும் ரியல் மார்டிட் அணிகள் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தன.
அதன்படி முதல் சுற்றான ஒரே ஒரு ்பிளே ஓவ்’ போட்டியில் மொஹ்ரெப் டெரௌன்-அக்லான்ட் சிட்டி அணிகள் மோதின. இதில் குறிப்பிட் நேரத்துக்குள் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதையடுத்து நடைபெற்ற ‘பனால்டி’ உதையில் 4-3 என்ற கோல் கணக்கில் அக்லான்ட் சிடி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
காலுறுதியில் அந்த அணி, ஈஎஸ் செடிவ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் வன்டெரெர்ஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெஸ்டன் சிட்னி அணியை வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலாவது அரையிறுதியில் கிறஸ் அசுல் அணியை 4-0 என்ற கணக்கில் தனது முதலாவது ஆட்டத்திலேயே ரியல் மார்டிட் அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
மற்றொரு அரையிறுதியில் சான் லொரன்சோ அணி, அக்லான்ட் சிட்டி அணியை 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
இந்நிலையில் ஐந்தாவது இடத்தைத் தீர்மானிப்பதற்கான போட்டியில், காலிறுதியில் தோல்வியடைந்த ஈஎஸ் செடிவ் - வெஸ்டன் சிட்னி வன்டெரெர்ஸ் அணிகள் மோதின. ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களைப் போட்டிருந்தமையால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் ‘பனால்டி’ உதை மூலம் வெற்றி-தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் ஈஎஸ் செடிவ் அணி வெற்றிபெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
அதேபோல, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் அரையிறுதியாட்டங்களில் தோல்வியடைந்த கிறஸ் அசுல் - அக்லான்ட் அணிகள் மோதின. இந்த ஆட்டமும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தமையால், ‘பனால்டி’ உதை மூலமே  வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ‘பனால்டி’
உதையில் சிறப்பாகச் செயற்பட்ட அக்லான்ட் சிட்டி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலகின் மூன்றாவது கழக அணி என்ற நாமத்தைச் சூடிக்கொள்ள கிறஸ் அசுல் அணி நான்காவது இடத்தைப் பிடிக்கவேண்டியதாயிற்று.
அடுத்ததாக உலக கழக சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் ஆட்டம் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில், ஏற்கனவே நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றிருந்ததுடன், தாம் எதிர்கொண்ட ஒரே ஒரு போட்டியான அந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற ரியல் மார்டிட் மற்றும் சான் லொரன்சோ அணிகள் தமது இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கின.
இந்த ஆட்டத்தில் ரியல் மார்டிட் அணியில் கிறிஸ்டியானோ உள்ளிட்ட சர்வதேச நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியது. இதனால் அவர்களது ஆட்டத்தைப் பார்ப்பதற்கென்றே அரங்கம் நிறைந்தது.
இந்த ஆட்டத்தில் ரியல் மார்டிட் அணி சார்பாக அந்த அணி வீரர்களான ரொமொஸ் 37ஆவது நிமிடத்திலும், பாலே 51ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோலைப் போட்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர். ஆட்ட நேரமுடிவில் எதிரணியால் எந்தவொரு கோலையும் போட முடியாமல் போக, ரியல் மார்டிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று உலக சம்பியன் கழகமாக மகுடம் சூட்டிக்கொண்டது.
உலகக் கிண்ணத் தொடரில் முதல் முறையாகத் தகுதிபெற்றிருந்த ரியல் மார்டிட் அணி, தனது முதல் சம்பியன் பட்டத்தைப் பதிவுசெய்தது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரியல் மார்டிட் அணியின் ரொமொஸ் தங்கப்பந்து விருதை வென்றார். அதே அணியைச் 
சேர்ந்த ரொனால்டோ வெள்ளிப் பந்தையும் அக்லான்ட் அணியைச் 
சேர்ந்த இவன் வெண்கலப்பந்தையும் வென்றனர்.
இத்தொடரில் ஸ்பெயினின் பார்சிலோனா (2009, 2011), பிரேசிலின் கோரின்தியன்ஸ் (2000, 2012) அணிகள் தலா 2 தடவைகள் கிண்ணம் வென்றுள்ளதுடன், அதிக தடவைகள் கிண்ணம் வென்ற அணிகள் என்ற பெருணாடுமையையும் பெற்றுள்ளன.
அதேவேளை, சாவ் பாலோ (2005), இன்டர்னாசியோனல் (2006), மிலன் (2007), மான்செஸ்டர் யுனைடெட் (2008), இன்டர்னாஜியோனல் (2010), பேயர்ன் முனிக் (2013) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கிண்ணத்தை வென்றுள்ளன.
தற்போது இந்த வரிசையில் ரியல் மார்டிட் அணியும் இணைந்துள்ளது. இந்த அணியே இந்த ஆண்டுக்கான ஐரோப்பிய சம்பியன் அணியாகவும் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866