Sunday, March 29, 2015

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2015 - நடந்தது என்ன?

ஐ.சி.சி.யினால் நடத்தப்பட்டுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 11ஆவது அத்தியாயம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இந்தத் தொடரை அவுஸ்திரேலியா - நியூஸிலாந்து இணைந்து நடத்திவருகின்றன.


 இதன் ஆரம்ப விழா, போட்டிகள் ஆரம்பமாவதற்கு இரு தினங்களுக்கு முன்னரே (பெப். 12) இரு நாடுகளிலும் நடத்தப்பட்டன.
பெப்ரவரி 14ஆம் திகதி போட்டிகள் தொடங்கின. இத்தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. அவை ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
‘ஏ’ பிரிவில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்தன.
‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன இடம்பிடித்திருந்தன
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஒவ்வொன்றும் தத்தமது பிரிவிலுள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதின.
அதனடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
‘ஏ’ பிரிவில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத நியூஸிலாந்துடன் அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
‘பி’ பிரிவிலும் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத இந்தியாவுடன், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
பின்னர் நடைபெற்ற காலிறுதியாட்டங்களில் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து ‘பி’ பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
அதேபோல, ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, ‘ஏ’ பிரிவில் நான்காவது இடம்பிடித்திருந்த பங்களாதேஷை வென்றது.
மற்றொரு காலிறுதியாட்டத்தில் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த தென்னாபிரிக்க அணி, ‘ஏ’ பிரிவில் மூன்றாவது இடம்பிடித்த இலங்கையை வென்றது.
அதேபோல, ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்திருந்த அவுஸ்திரேலிய அணி, ‘பி’ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்த பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதலாவது அரையிறுதியில் நியூஸிலாந்து அணி, தென்னாபிரிக்காவையும், இரண்டாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியா, இந்தியாவையும் வீழ்த்தின.
அதனடிப்படையில் இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் நியூஸிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் களம் காண்கின்றன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது. அவுஸ்திரேலிய நேரப்படி இந்த ஆட்டம் பகல்-இரவு ஆட்டமாகவே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் இணைந்து நடத்திய உலகக் கிண்ணத் தொடரில் போட்டிகளை நடத்திய இந்தியா-இலங்கை அணிகள் இறுதியாட்டத்தில் விளையாடியிருந்தன. அதேபோலவே இம்முறையும் போட்டிகளை இணைந்து நடத்தும் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
அதேவேளை, 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஏதாவதொரு ஆசிய அணி இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்று வந்துள்ளது. அந்த ஆதிக்கத்துக்கு 23 வருடங்களின் பின்னர் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866