
2011ஆம் ஆண்டு ஆசியக் கண்டத்தில் நடைபெற்ற 10ஆவது உலகக் கிண்ணத் தொடரில் எப்படி ஆசிய அணிகளின் - வீரர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டதோ, அதேபோலவே தற்போது அவுஸ்திரேலியா- நியூஸிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலகக் கிண்ணத் தொடரிலும் தமது திறமைகளை எகிறவிட்டுள்ளனர். ஆசியர்கள் மாத்திரமின்றி மேலும் சில அணிகளும் பயங்கரமாக- மூர்க்கத்தனமாக ஆடிவருகின்றமையும் இந்த உலகக் கிண்ணத் தொடரை பல மடங்கு
பரபரப்புக்குள்ளாக்கி யுள்ளது.
பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பித்த 11ஆவது உலகக் கிண்ணத் தொடரின் தற்போதுவரையான நிலைவரப்படி ‘ஏ’ பிரிவில் அசைக்க முடியாத அணியாக நியூஸி லாந்தும், அதேபோல ‘பி’ பிரிவில் இந்தியாவும் உள்ளது.
குறித்த இரு அணிகளும் முதல் சுற்று ஆட்டங்களில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியைச் சந்திக்கவில்லை.
அந்த அணிகளுக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளே பலம்பொருத்தியவையாகக் கருதப்படுகின்றன. அவுஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மாத்திரமே அதுவும் நியூஸிலாந்திடமே தோற்றுள்ளது. வேறெந்தப் போட்டியிலும் தோற்கவில்லை. துரதிஷ்டவசமாக பங்களாதேஷுடனான ஆட்டம் மழை காரணமாகத் தடைப்பட்டமையால் ஒரு புள்ளியையே பெறமுடிந்தது.
தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் அந்த அணி இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளது. எனினும், அந்த அணியும் பலமிக்கதாகவே உள்ளமையை அந்த அணியின் ஒவ்வொரு ஆட்டமும் வீரர்களின் அதிரடிகளும் வெளிக்காட்டுகின்றன.
மேற்குறித்த நான்கு அணிகளுக்கு அடுத்ததாக ஐந்தாவது அணியாகவே இலங்கை அணி வைத்துக் கணிப்பிடப்படுகிறது. ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி, பலமிக்க நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் தோற்றது. ஏனைய அணிகளுடனான போட்டிகளில் வென்றுள்ளது. இலங்கை அணி வெற்றிபெற்ற போட்டிகளில் எல்லாம் எதிரணிகள் பெரியளவில் பலமில்லாத சிறிய அணிகளே. இவற்றுள் இங்கிலாந்து பெரிய அணியாக உள்ளபோதும், அந்த அணியின் செயற்பாடுகள் பங்களாதேஷுடன் தோற்கும் அளவுக்கு இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘ஏ’ பிரிவிலிருந்து 4 அணிகள் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியிருந்தபோதும், எந்த எந்த அணிகள் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கின்றன என்பதை ஒவ்வொரு அணிகளும் பங்கேற்ற கடைசிப் போட்டிகளடிப்படையிலேயே தீர்மானிக்கும் அளவுக்கு அந்தப் பிரிவில் பரபரப்பு இருந்தது.
இந்தப் பிரிவிலிருந்து காலிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளையும் பார்க்கையில், நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சமபலம் கொண்டவையாகவே காணப்படுகின்றன. பங்களாதேஷ் அணியும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை மிரட்டிய மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியமை என தனது பலத்தைப் பறைசாற்றத் தவறவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் துடுப்பாட்டமே ஓரளவுக்குப் பலமாக உள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மலிங்க மற்றும் குலசேகர தவிர ஏனையவர்களை நம்பமுடியாது. சுழல்பந்துவீச்சாளர் ஹேரத் காயம் காரணமாக ஓய்விருக்கிறார். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்தால் இலங்கைக்கு பந்துவீச்சிலும் ஓரளவுக்குப் பலம் கிட்டலாம்.
இலங்கைக்குத் துடுப்பாட்டத்தில் குமார் சங்கக்காரவே முழுப்பலமாக உள்ளார். அவருக்கு அடுத்து டில்ஷான், மஹேல, மத்யூஸ் மற்றும் திரிமன்னே ஆகியோர் மீதே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
தொடர்ந்து 4 ஆட்டங்களில் சதங்களை விளாசிய சங்கக்காரவை உலகமே தற்போது ்கிரிக்கெட்டின் கடவுள்ி என வர்ணித்து அவரது திறமையைப் பாராட்டுமளவுக்கு இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவரின் ஆட்டம் பட்டையைக் கிளப்புகின்றது. இனிவரும் போட்டிகளிலும் அவரது ஆட்டம் இலங்கையின் முன்னேற்றத்துக்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, இனிவரும் ஆட்டங்கள் விலகல் முறையிலானது என்பதால் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படலாம். முழு இலங்கைக் கிரிக்கெட்டின் ரசிக பட்டாளங்களும் சங்காவின் அடுத்த சதத்தை எதிர்பார்ப்பதுடன், அந்தச் சதமே இலங்கையின் அரையிறுதிக்கான முன்னேற்த்துக்கு வழிவகுக்கும் எனவும் நம்புகின்றனர்.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவர் நிகழ்த்திய தொடர்ந்து 4 சதங்கள் என்ற சாதனையும், உலகக் கிண்ணத் தொடர்களில் 5 சதங்களை அடித்ததன் மூலம் அதிக சதங்களை அடித்தவர்கள் வரிசையில் பொண்டிங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளமையும் அதற்கு மேல் சென்று 6 சதங்களுடன் முதலிடத்திலுள்ள சச்சினின் சாதனையைச் சமன் செய்தோ அல்லது முறியடித்தோ முன்னேறும் வாய்ப்பும் உள்ளமையால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. அதுமாத்திரமின்றி நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் தற்போதுவரை அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் சங்கக்காரவே முதலிடத்தில் உள்ளார். அவரைத் துரத்தும் வகையில் தென்னாபிரிக்காவின் ஏபி.டி.வில்லியர்ஸ் உள்ளார். இதனால் தொடர்ந்தும் தனது அதிரடிமூலம் முதலிடத்தைச் சங்கக்கார தக்கவைத்துக்கொள்வாரா என்ற பரபரப்பு அவர் மீதான எதிர்பார்ப்பை மேலும் மேலும் எகிறவைக்கின்றது.
அவரது தற்போதைய நிலையான - அதிரடியான ஆட்டத்தைப் பார்க்கும்போது சாதனைகளின் மறுபெயராக சங்கா எனக் கேட்கத் தோன்றும் அதேவேளை ‘ஐ’ பட ஸ்டைலில் ‘அதற்கும் மேல’ என்றும் சொல்லத்தோன்றுகிறது.
கிறிஸ்கெய்ல், ஏபி.டி. வில்லியர்ஸ், மேக்ஸ்வேல் போல குறைந்த பந்துகளில் அதிரடியாக ஆடி கூடுதலான ஓட்டங்களைச் சேர்க்கக் கூடிய அளவில்
சங்கக்காரவின் அதிரடி இருக்காது. எனினும், அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் அவரது ஆட்டங்கள் அமைவதுண்டு. இதனால்தான் எத்தனையோ அதிரடி ஆட்டங்களை இந்த உலகக் கிண்ணம் கண்டபோதும், சங்கா மீதே கிரிக்கெட் உலகம் பார்வையைத் திருப்பியிருப்பதானது அவரது ஆட்டத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றதையை காட்டுகின்றது.
No comments:
Post a Comment