எஸ். ஜெயானந்தன்
யாருக்கு என்ன இலாபம்?
விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்." இது முன்னோர்கள் நமது கிராமத்துச் சிறார்களுக்குக் கூறும் அறிவுரை. ஆனால், உலகளவில் நோக்கும்போது விளையாட்டு என்பது விளையாட்டு என்பதற்கு அப்பால் வாணிகமாகவும் மாறிவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக எமக்கு மிகவும் பரிச்சார்த்தமான உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் (ஐ.பி.எல்.) போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் உள்ளூர் அணிகள் மோதும் ‘லீக்’ போட்டிகளைக் குறிப்பிடலாம்.இந்தப் போட்டிகளுக்காக பல்லாயிரம் கோடிகளைக் கொடுத்து சிறந்த வீரர்களைத் தத்தமது அணிகளுக்காக அந்தந்த அணிகளின் உரிமையாளர்கள் வாங்குகின்றனர். இந்தப் போட்டிகள் உள்ளூர் வீரர்களை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்துவதற்கான களமாக விளங்குகின்றபோதும், இதனுள் வணிகமே அதிகம் கலந்துள்ளது.
அதேவேளை, சூதாட்டங்களும் பரவலாக நடைபெறுவதால் விளையாட்டுப் போட்டிகளில் விட்டுக்கொடுப்புகள் நிகழுகின்றனவோ என்ற சந்தேகங்களும் ஏற்படுவது வழமை.
மேற்குறித்த செயற்பாடுகள் ஒருபுறமிருக்க, வீரர்கள் களத்தில் விளையாடும்போது தமக்கு ஏற்படும் ஆக்ரோஷத்தை எதிரணி வீரர்களிடம் காட்டுவதும் - அதனால் அபராதங்கள் மற்றும் தடைகளை எதிர்நோக்குவதும் விளையாட்டுக்கு ஆரோக்கியமான உணர்வல்ல.
இத்தகைய செயற்பாடுகள் இன்று நேற்று அல்ல ஒவ்வொரு விளையாட்டுக்களும் எப்போது ஆரம்பிக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே தொடர்ந்து வருபவைதான்.
இந்த வரிசையில் விளையாட்டுலகை அண்மையில் அதிர வைத்த இரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று ‘கோபா அமெரிக்கா’ தொடரிலும் மற்றொன்று பங்களாதேஷ் - இந்திய அணிகள் மோதிய போட்டியிலும் ஆகும்.
44ஆவது கோபா அமெரிக்கா உதைபந்தாட்டத் தொடர், சிலியில் நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 நாடுகளும் ‘ஏ’, ‘பி’, ‘சி’, என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகளில் மோதிவருகின்றன.
இலங்கை நேரப்படி கடந்த 18ஆம் திகதி அதிகாலை நடந்த ‘சி’ பிரிவு ‘லீக்’ ஆட்டம் ஒன்றில் பிரேசில்-கொலம்பிய அணிகள் மோதின. இதில் கொலம்பிய அணி, முதல் பாதியில் முதல் கோல் அடித்தது. பிற்பாதியில் பதில் கோலடிக்க முயற்சித்த பிரேசில் அணிக்குக் கடைசி வரை வாய்ப்புக் கிட்டவில்லை. இந்தப் போட்டியில் 8 தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி 0-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி கண்டது.
ஆட்டம் முடிந்துவிட்டதாக நடுவர் விசில் அடித்தபோது, தோல்வியின் விரக்தியில் இருந்த பிரேசில் அணித்தலைவர் நெய்மார், கோபத்துடன் உதைத்த பந்து எதிரணி வீரர் மேல் பட்டது. இதனால், இரு அணி வீரர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. கொலம்பிய வீரர் கார்லோஸ் பாகா, நெய்மாரை பலமாகத் தள்ளிவிட்டார்.
பின்னர் நெய்மார் வெளியேறிச் சென்றபோது பின்னால் ஓடிச் சென்ற நடுவர் என்ரிக் ஒசெஸ் (சிலி), அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்தார். இதேபோல் நெய்மாரைத் தள்ளிய கார்லோஸ் பாகாவுக்கும் சிவப்பு அட்டை காட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தத் தொடரின் ்சிி பிரிவில் இடம்பிடித்துள்ள பேரு, பிரேசில், வெனிசூலா மற்றும் கொலம்பியா ஆகிய நான்கு அணிகளும் தலா இரு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன.
இதனால், நான்கு அணிகளுக்கும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வெற்றிபெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளன.
இந்த நான்கு அணிகளுக்குமான அந்த கடைசி ‘லீக்’ ஆட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது. இதில், கொலம்பியா, பேருவை எதிர்த்தும் பிரேசில், வெனிசூலாவை எதிர்த்தும் மோதவுள்ளன.
போட்டியின் தன்மை அவ்வாறிருக்க, இரு போட்டிகளிலும் பங்கேற்கும் முக்கிய அணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, முன்னைய போட்டியின் இறுதியில் சிவப்பு அட்டை பெற்றமையால், இன்றைய போட்டியில் பிரேசில் அணியின் தலைவர் நெய்மரும், கொலம்பிய வீரரான கார்லோஸ் பாகாவும் விளையாட முடியாது. இதனால் அந்த இரு அணிகளும் இக்கட்டான நிலையில் இன்று களம் காண்கின்றன.
கார்லோஸுக்கு ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நெய்மருக்கு நான்கு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோபா அமெரிக்கத் தொடரின் இந்தப் பருவ காலத்துக்கான போட்டிகளில் நெய்மரால் விளையாட முடியாது.
இன்றைய ஆட்டத்தில் பிரேஸில் வெற்றிபெற்றால் காலிறுதிக்கு முன்னேறும். அதிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அதிலும் வென்றால் இறுதியாட்டம். எனவே, நெய்மருக்கு நடப்பு ‘கோபா அமெரிக்க’த் தொடரின் இனி நடக்கும்போட்டிகள் எட்டாக்கனியே.
இது இவ்வாறிருக்க, இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கிடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் பங்களாதேஷில் நடைபெற்றுவருகிறது.
இதன் முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ஆம் திகதி மிர்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 307 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் அந்த வெற்றியிலக்கு நோக்கி இந்திய அணி ஆடியது.
இந்த இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை வீசிய பங்களாதேஷ் வீரர் முஸ்தாபீர் ரஹ்மான் அடிக்கடி பிட்சின் குறுக்கே வந்தார். அப்போது துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா, ரஹ்மானை எச்சரித்தார். பின்னர் 24ஆவது ஓவரை ரக்மான் வீசியபோது, அந்த ஓவரின் 2ஆவது பந்தை அடித்துவிட்டு டோனி ஓடினார். அப்போதும் ரஹ்மான் பிட்சின் குறுக்கே வந்து நின்றார்.
ரஹ்மான், பிட்சின் குறுக்கே நிற்பதைப் பார்த்தபோதும், டோனி அவரை விட்டு விலகி ஓடாமல், வந்த வேகத்தில் ரஹ்மானைத் தள்ளிவிட்டார். இதில் நிலை தடுமாறிய ரஹ்மான், காயமடைந்து களத்தை விட்டே வெளியேறிவிட்டார். பின்னர் தொடர்ந்து பந்துவீசிய அவரே ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
டோனி - ரஹ்மான் இருவரதும் செயல்கள் மீது, ஐ.சி.சி.யின் நடத்தை விதி முறைச் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து டோனிக்கு குறித்த போட்டிக் கட்டணத்தில் 75 சதவீதமும், ரக்மானுக்கு 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இஇரு அணிகளும் இன்றையதினம் முக்கிய போட்டியில் மோதுகின்றன. ஏற்கனவே ஒரு போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் வெல்லவேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோற்றால் பங்களாதேஷ் அணி தொடரைத் தன் வசப்படுத்தும். மாறாக இந்தியா வெற்றிபெற்றால் தொடரை வெல்வதற்கான வாய்ப்பை இந்தியா தக்க வைக்க முடியும். மூன்றாவது போட்டி 24ஆம் திகதி நடைபெறும்.
மேற்குறித்த உதைபந்தாட்ட மற்றும் கிரிக்கெட் மோதல்களால் எவருக்கும் இந்த இலாபமும் இல்லை. மாறாக வீரர்கள் தமக்கான வாய்ப்புகளைத் தவறவிடுவதுடன் தமது நடத்தையைக் குறைத்தும் விட்டனர். அதேவேளை, குறித்த வீரர்களை நம்பியுள்ள அந்தந்த நாட்டு அணிகளுக்கும் பெரும் இக்கட்டான நிலையே ஏற்பட்டுள்ளது.
மேற்குறித்த போட்டிகளில் வீரர்களின் நடத்தைகள் கிட்டத்தட்ட ஒரே மன நிலையிலேயே இடம்பெற்றுள்ளன. அதாவது பிரேசில் அணி தோல்வி நிலையில் இருந்தமையால் நெய்மரும், இந்திய அணி தோல்வி நிலையில் இருந்தமையால் டோனியும் ஆக்ரோஷத்துடன் தமது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எது எப்படியோ வீரர்களின் இத்தகைய அடாவடிச் செயல்களால் அவர்கள் சார்ந்த எவருக்கும் எந்த லாபமும் இல்லை என்பதே உண்மை.
No comments:
Post a Comment