எஸ். ஜெயானந்தன்
போல்டின் கதை முடிந்துவிட்டதா?
உலக குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் பல்வேறுபட்ட சாதனைகளுக்குச் சொந்தக் காரராக விளங்குபவர் ஜமைக்காவின் உசைன் போல்ட்.
1986ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜமைக்காவில் பிறந்த இவர், 6.5 அடி உயரம் கொண்டுள்ளார். தனது உயரத்தையும் திறனுடன் கூடிய வியூகங்களையும் ஒருங்கிணைத்து நடப்புக் காலகட்டத்தில் முதல் தர ஓட்ட வீரராக விளங்குகிறார் இவர்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் சம்பியன்ஷிப் போட்டிகள் மூலம் உலக அரங்கில் அடையாளம் பதித்த இவர், அந்தப் போட்டிகளில் 200 மீற்றர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்.
தொடர்ந்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தடகள உலகக் கிண்ணப் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றம், 200 மீற்றர் மற்றும் 4து100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் என அனைத்திலும் தங்கப்பதக்கங்களை வென்று உலகத்தின் முழுப்பார்வையையும் தன் பக்கம் திருப்பிய உசைன் போல்ட், 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 2008ஆம் ஆண்டைப் போலவே மூன்று தங்கப்பதக்கங்களை வென்று தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்டார்.
இதற்கிடையை 2009ஆம் ஆண்டு பேர்ளினில் நடைபெற்ற உலக சம்பியன் ஷிப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 9.58 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தார். அதுமாத்திரமின்றி 200 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் 19.19 செக்கன்களில் போட்டித் தூரத்தை எட்டி சாதனை படைத்தார்.
இந்தச் சாதனைகளையடுத்து உலகின் ‘வேக மனிதன்’ என்ற நாமத்தைச் சூடிக்கொண்ட இவர், பின்னர் நடைபெற்ற பல்வேறுபட்ட குறுந்தூர ஓட்டப் போட்டிகளிலும் முன்னிலை நட்சத்திரமாக விளங்கிவந்தார்.
சிலவேளைகளில் ஓடுகளத்தில் ஏற்பட்ட சில சறுக்கல்களால் ஓட்டத்தூரத்தை முழுமையாக ஓடாது ஆரம்பித்தவுடன் முடித்துக்கொண்டு வெற்றிக்கான வாய்ப்பில் சறுக்கல்களை எதிர்கொண்டபோதும் அவரே முன்னிலை வீரராகத் திகழ்ந்து வந்தார்.
இவ்வாறு பல்வேறுபட்ட முன்னிலை பெறுபேறுகளைக் கொண்ட உசைன் போல்ட், அண்மைக்காலமாக தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றமை உலக ரசிகர்களைப் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் பஹமாசில் நடைபெற்ற உலக சம்பியன்ஷிப் போட்டியில், ஜமைக்கா சார்பாக 4து100 அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற போல்ட் அடங்கிய ஜமைக்கா அணியினர், இரண்டாவது இடத்தை அடைந்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பின்னடைவை எதிர்கொண்டனர்.
சரி, சிலவேளைகளில் ‘யானைக்கும் அடி சறுக்கும்தானே’ என ஆறுதல் படுத்திக்கொண்ட நிலையில், ஜமைக்காவில் நடைபெறும் சீனியர் தடகளப் போட்டிகளிலிருந்தும் உசைன் போல்ட் நீக்கப்பட்டமை, உலகளவில் அவரின் திறன் மீது சந்தேகங்களை உருவாக்க ஆரம்பித்துள்ளது.
இதனால், மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக விளங்கும் அவரின் அண்மைக்கால செயற்பாடுகள் அவரது திறமையின்மையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
எனினும், தற்போது அவர் உடல்நிலை சீரின்மை காரணமாகவே ஜமைக்காப் போட்டிகளிலிருந்து ஒதுங்கினார் எனவும், போல்டின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்தப் போட்டிகளில் அவரின் பெயர் இடம்பெறவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அணியில் அவர் நேரடியாகவே தகுதிபெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ, உசைன் போல்டின் அண்மைக்கால செயற்பாடுகள் அவரது வேகம் சற்றுக் குறைந்துள்ளமையேயே எடுத்துக்காட்டுவதாகவே அமைகின்றன. அதை தவிடுபொடியாக்கி, தான் இன்னும் முழுத்திறமையுடனே இருக்கிறேன் எனபைத வரும் ஓகஸ்டில் போல்ட் நிரூபித்தால் அவரது ரசிகர்களுக்குச் மகிழ்ச்சியே.
மாறாக அவர் தனது திறமையை இழந்திருப்பின் அது மற்றொரு சிறந்த வீரருக்கு, முன்னிலை நட்சத்திரமாக விளங்க வாய்ப்பளிக்கும். எனினும், இவரது சாதனையை அவர்களால் தற்போதைய காலகட்டத்தில் முறியடிக்க முடியுமா என்பது தற்போதைக்குக் கேள்விக்குறியே.
.......................
நாளை ஆரம்பிக்கும் விம்பிள்டன் தொடர்
ஆண்டுதோறும் முறையே அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின், விம்பிள்டன் ஓப்பின், அமெரிக்க ஓப்பின் ஆகிய கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெற்றுவருகின்றன.இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின் ஆகிய தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் நாளையதினம் (29) லண்டனில் ஆரம்பிக்கும் விம்பிள்டன் ஓப்பின் தொடரானது அடுத்த மாதம் 12ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரானது 1877ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் பாரம்பரியமிக்கதான இத்தொடர் புற்தரையிலான மைதானங்களில் நடைபெறுவது வழமை.
ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் இத்தொடரானது நடைபெறுகிறது. இவற்றுள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்களே மிகவும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணக்கூடிய போட்டிகளாக விளங்குகின்றன.
அந்த வகையில் இத்தொடரை அதிக தடவைகள் வென்றவர்கள் வரிசையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் வில்லியம் ரென்ஷவ், அமெரிக்காவின் பெடே சம்ப்ராஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் தலா 7 தடவைகள் வென்று முதலிடத்தில் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் மார்டினா நவரத்தினலோவா 9 தடவைகள் பட்டம் வென்று முன்னிலை வகிக்கிறார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் அடிப்படையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவாக் ஜோகோவிச்சும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிரோவாவும் நடப்புச் சம்பியன்களாக உள்ளனர்.
இம்முறை நடைபெறும் தொடரைப் பொறுத்தவரையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் உள்ள நோவாக் ஜோகோவிச், இரண்டாம் நிலையில் உள்ள ரோஜர் பெடரர், மூன்றாம் நிலையில் உள்ள அன்டி முர்ரே மற்றும் 4ஆவது இடத்திலுள்ள வாவ்ரிங்கா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
அதேவேளை, ரோஜர் பெடரர் இம்முறை சம்பியன் பட்டத்தை வென்றால் அதிக தடவைகள் பட்டம் வென்றவர் என்ற நாமத்தை தனி நபராக அவர் தனக்குரியதாக்கமுடியும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவைப் பொறுத்தவரையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள செக் குடியரசின் பெட்ரா கிவிரோவா, மூன்றாவது இடத்திலுள்ள ரோமானியாவின் சிமோனா ஹெலெப்பே மற்றும் நான்காவது இடத்திலுள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீராங்கனைகளாக உள்ளனர்.
No comments:
Post a Comment