Sunday, August 16, 2015

எங்ககிட்டயேவா?
லங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இதன் முதலாவது ஆட்டம் கடந்த 12ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது. 
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டம் காரணமாக முதல் நாளிலேயே விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 

மிகவும் மோசமாகச் சென்ற இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை மத்யூஸ் (64), சண்டிமால் (59) ஆகியோரின் அரைச்சதங்கள் 183 ஓட்டங்கள் வரை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் கலக்கிய அஷ்வின் 13.4 ஓவர்கள் பந்துவீசி 46 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் முதல் நாளிலேயே தனது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, இரண்டாம் நாளின் பிற்பகுதியில் 375 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தவான் (134), கோலி (103) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இலங்கை சார்பாக பந்துவீச்சில் கௌசல் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
பின்னர் தனது இன்னிங்ஸை இரண்டாவது நாளின் பிற்பகலில் ஆரம்பித்த இலங்கை அணி, மூன்றாம் நாளின் மாலையில் 367 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி இந்த இலக்கை எட்டுவதற்கு பெரும் துணை புரிந்த சண்டிமால் 162 ஓட்டங்களைச் சேர்த்தார். இதுவே இவரது ஆகக்கூடுதலான டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையாகும். இவருக்கு அடுத்தபடியாக சங்கக்கார (40), மத்யூஸ் (39), திரிமான்னே (44), முபாரக் (49) ஆகியோரும் ஓரளவு சிறப்பான ஓட்டங்களைச் சேர்த்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஆகக்கூடுதலாக அஷ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கி வெற்றிப் பெருமிதத்துடன் களமிறங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடியும்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது.
மீண்டும் நான்காம் நாளில் தனது ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு, இலங்கையின் சுழல்பந்து வீச்சாளரான ஹேரத் அதிர்ச்சி கொடுத்தார்.
முளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இந்திய அணி, 112 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் தவான் (28), இஷாந் ஷர்மா (10), ரகானே (36), மிஷ்ரா (15) ஆகியோரே இரட்டை இலக்கை அடைந்தவர்களாவர்.
இலங்கை அணி சார்பாக பந்து 
வீச்சில் கலக்கிய - இந்திய அணியை சின்னாபின்னமாக்கிய ஹேரத் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு பக்கபலமாகப் பந்து வீசிய கௌசல் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
ஆட்டநாயகனாக இலங்கை அணி 
சார்பாக சதமடித்த சண்டிமால் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி, 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

..................................

கிளாா்க்!!
நீங்கள் நல்லவரா, கெட்டவரா?
டெஸ்ட் போட்டிகளுள் மிகவும் பிரபல்யமிக்க தொடராக இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் விளங்கிறது.
இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதலாவது ஆட்டம் கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 169 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பின்னர் ஜூலை 16ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. தொடர்ந்து ஜூலை 29ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் மிக முக்கிய ஆட்டமாகக் கருதப்பட்ட நான்காவது ஆட்டம் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகியது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு துரதிஷ்டம் காத்திருந்தது. அந்த அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 60 ஓட்டங்களையே சேர்த்தது.
பின்னர் தனது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணி 253 ஓட்டங்களுள் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி, ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் பெரு பெற்றி பெற்றது.
அது மாத்திரமின்றி 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 வெற்றிகளைப் பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரைத் தன் வசப்படுத்திக்கொண்டது. 
ஐந்தாவது போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், நான்காவது போட்டி யில் படுதோல்வியைச் சந்தித்த அவுஸ்திரேலிய அணியை வழிநடத்திய அணித்தலைவர் மைக்கல் கிளார்க், எதிர்வரும் ஐந்தாவது போட்டியுடன் தாம் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இருபது-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு
பெற்றுள்ள அவர், தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார்.
தனது ஓய்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், 
இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க நான் ஓய்வு பெறமாட்டேன். அடுத்த போட்டியிலும் விளையாடிய பின்னர்தான் ஓய்வு பெறவுள்ளேன். இத்துடன் எனது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வரும்" என்றார்.
அண்மைக்காலமாக கிளார்க்கின் விளையாடு திறன் குறித்து ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வந்துள்ளன. இதனால் ரசிகர்களும் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்ததுடன், கிளார்க் உடனடியாக ஓய்வுபெறவேண்டும என்றும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆஷஸ் தோல்வியுடன் தனது ஓய்வை அறித்த அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
அதராவது, கிளார்க் தலைமையிலான தற்போதைய அவுஸ்திரேலிய அணிக்குள் ஒற்றுமை இல்லை எனவும், அவர் வீரர்களைப் பிரித்தாழ்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டதுடன், இந்நிலைமையே அவுஸ்திரேலிய அணி, நடப்பு ஆஷஸ் தொடரில் படுதோல்வியைச் சந்தித்தமைக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
அணிக்குள் பிளவு என்பதை மறுத்துள்ள கிளார்க், அவுஸ்திரேலிய அணியின் மூத்த வீரர்கள் இருவருடைய மனைவிகளுக்கு இடையிலான பிரச்சினை மற்றும் விக்கெட் காப்பாளர் ஹெடினை அணியிலிருந்து நீக்கியமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அணி வீரர்கள் இடையே பிளவு நிலவுவதாகவும் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானதாகும். எங்களுக்குள் அபரீதமான ஒற்றுமை நிலவுகிறது என்பதை உறுதியாக சொல்கிறேன். அணி வீரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. நான் பார்த்ததில் ஒற்றுமையில் சிறந்த அணியாக இது விளங்குகிறது" என்றார்.
இதற்கிடையே கிளார்க் மீது முன்னாள் வீரர்கள் சிலரும் சீற்றம்கொண்டுள்ளனர்.
ஒரு போட்டியின்போது துடுப்பாட்ட வீரருக்கு அருகில் ‘ஷோர்ட் லெக்’ திசையில் ஜஸ்டின் லாங்கர் களத்தடுப்பு செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் லாங்கரால், அந்த இடத்தில் சரியாக களத்தடுப்பு செய்ய முடியவில்லை. அப்போது இளம் வீரராக இருந்த மைக்கேல் கிளார்க்கை அந்த இடத்தில் நிறுத்த முடிவு செய்தோம்.
பொதுவாக இளம் வீரரைத்தான் அந்த இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். ஆனால் மைக்கேல் கிளார்க் அந்த இடத்தில் களத்தடுப்புச் செய்ய மறுத்து விட்டார். அத்துடன், அவர் கூறிய பதில் கடும் அதிர்ச்சியை அளித்தது. அந்த இடத்தில் களத்தடுப்பு செய்யத்தான் வேண்டுமென்றால் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டு விடுகிறேன்" என்று பதிலளித்தார்" என முன்னாள் அவுஸ்திரேலிய வீரரான மத்யூ ஹைடன் சாடியுள்ளார். 
அண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறுகையில்,  
கிளார்க் எப்போதுமே, அணியில் வீரர்களைப் பிரித்தாளுபவர், இவர் எப்போதுமே ஆணித்தரமான சில கருத்துக்களைக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர்கள் இளம் வயதினராக இருக்கும்போது பிரித்தாள்வதையே முதல் நடவடிக்கையாக கொண்டிருப்பார்கள்.
அவருடைய கருத்துக்கள் எப்போதுமே பிறரை காயப்படுத்தும். என்னிடம் கூட அவர் பல தடவைகள் மோதியுள்ளார். ஸ்டீவ் வோஹ், ரிக்கி பொண்டிங் போல மைக்கேல் கிளார்க் இயல்பான அணித்தலைவர் இல்லை. மைக்கேல் கிளார்க்கின் தலைவர் பதவி அவரது செயற்பாடுகளால்தான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது" என்றார்.
இவ்வாறு பல்வேறுபட்ட சர்ச்சைக்குரியவராக விளங்கும் கிளார்க், 2004ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர். 
கிளார்க் அறிமுகமான இந்தத் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி கைப்பற்ற, அப்போது மைக்கேல் கிளார்க் உதவியாக இருந்தார். 
தற்போது வரை 114 டெஸ்ட் போட்டிகளில் 197 இன்னிங்களிற்காக துடுப்பெடுத்தாடியுள்ள மைக்கேல் கிளார்க்,  8,628 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இதற்குள் 28 சதங்களும், 27 அரைச் சதங்களும் அடங்கும்.  ஓர் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றமை இவரது சிறந்த பெறுபேறாக  உள்ளது. அதேவேளை,  அவுஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைச் சேர்த்த வீரர்கள் வரிசையில் இவர் நான்காவது இடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலியக் கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆலன் பார்டர், ரிக்கி பொண்டிங் ஆகியோருக்குப் பிறகு மிகச்சிறந்த அணித்தலைவராகக் கருதப்பட்ட மைக்கேல் கிளார்க்,  இவ்வருடம் தனது சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் உலகக் கிண்ணத்தையும் வென்றுகொடுத்தார்.
ஆனால், தற்போதைய ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான தோல்விகளையடுத்து 34 வயதான அவர் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.
இது மாத்திரமின்றி இவரது அண்மைக்கால ஆட்டமும் சொல்லும்படியாக இருக்கவில்லை.
கடைசியாக அவர் விளையாடிய 28 இன்னிங்ஸ்களில் 668 ஓட்டங்களைத்தான் சேர்த்துள்ளார். இதில் 2 தடவைகள் சதமடித்துள்ளார். சராசரி 28.67 ஆகும். இந்த 28 இன்னிங்ஸ்களில் அவர் 23 தடவைகள், 30 ஓட்டங்களுக்கும் குறைவாகவே பெற்றுள்ளார். 

எது எப்படியோ, விளையாட்டில் ஏற்றத் தாழ்வுகள் வந்துபோகத்தான் செய்யும். இதனால், அவர் அவுஸ்திரேலிய அணிக்காக செய்த நல்லவற்றைக் கணக்கில் எடுத்து அவரை சிறந்த முறையில் வழியனுப்பி வைப்பதே விளையாட்டு உணர்வை மதிப்பதாக அமையும்.

.........................


No comments:

Post a Comment

Total Pageviews

8,866