Sunday, August 9, 2015

சங்காவின் கடைசித் தொடர்

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.


இத்தொடருடன் இலங்கை அணியின் நட்சத்திர - நம்பிக்கைத் துடுப்பாட்ட வீரரான சங்கக்கார, சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளமையால் இத்தொடர் முக்கியப்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற சங்கக்கார, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே இத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையால், ஒவ்வொரு போட்டியிலும் சங்கக்காரவின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பட்டாளமாகப் படையெடுப்பர்.
அதேவேளை, சங்கக்காரவை வெற்றியோடு வழியனுப்பும் முனைப்பில் இலங்கை செயற்படும். இதனால் இப்போட்டித் தொடரை இந்திய அணி சவாலாக எடுத்துக்கொண்டு களமிறங்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரஹானே முன்னாள் இந்திய வீரர் டிராவிட்டைப் போலலே மிகவும் நிதானமாக நின்று ஆடக்கூடிய வீரராகக் கருதப்படுகிறார்.
அவருக்குப் பக்க பலமாக அணித்தலைவர் விராட் கோஹ்லி, தவான், ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். முன்னாள் அணித்தலைவர் டோனி இடம்பெறாதமை அந்த அணிக்குப் பின்னடைவாக இருக்கும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின்-ஹர்பஜன் சிங் சுழல் கூட்டணி கலக்க வாய்ப்புண்டு. அதேவேளை, ரோஹித் ஷர்மா, புவனேஸ்வர், உமேஸ் யாதவ், ஆகியோர் தமது பங்கை சிறப்பாகச் செய்வதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரையில், அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியின் அடிப்படையில் பார்த்தால், துடுப்பாட்டத்தில் மிகப்பெரிய பலமாக குமார் சங்கக்கார உள்ளார். அவருக்கு அடுத்து அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ், டினேஸ் சண்டிமால், லகிரு திரிமன்னே, குசல் சில்வா, டிமுத் கருணாரட்ன மற்றும் உப்புல் தரங்க ஆகியோர் அடங்கிய அனுபவ வீரர்கள் உள்ளனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரங்கன ஹேரத்தின் சுழல்பந்துவீச்சே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பக்க பலமாக சகல துறை வீரரான தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் ஆகியோர் வேகப்பந்துவீச்சில் அசத்தக்கூடும். அதேவேளை,, மத்யூஸு பந்துவீசி விக்கெட்டுகளைப் பிடுங்கக்கூடியவர்.
இவை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கவுள்ள இரு அணிகளதும் வீரர்களது நிலையாகும்.
இனி கடந்தகாலப் பெறுபேறுகள் குறித்து நோக்குகையில், இரு அணிகளும் 13 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 6 தொடர்களைத் தன்வசப்படுத்தியது. இதில் 5 இந்தியாவில் நடைபெற்றுள்ளன. ஒரு தொடர் இலங்கையில் நடைபெற்றுள்ளது. 1993ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. இதுவே இந்திய அணி இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரை வெற்றிபெற்ற தொடராகும்.
அதேவேளை இலங்கை அணி 3 தொடர்களில் வென்றுள்ளது. இந்த மூன்று தொடர்களும் இலங்கையில் நடைபெற்றவையாகும்.
இரு அணிகளும் மோதிய 4 டெஸ்ட் தொடர்கள் சமநிலையில் முடிந்துள்ளன. அவற்றில் 2 இந்தியாவிலும் 2 இலங்கையிலும் நடைபெற்றவையாகும்.
இரு அணிகளும் கடைசியாக 2010ஆம் ஆண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதியுள்ளன. இது இலங்கையில் நடைபெற்றது. அதேவேளை இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
போட்டிகளடிப்படையில் பார்த்தால் இரு அணிகளும்35 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இலங்கை 6இலும் இந்தியா 14இலும் வெற்றிபெற்றுள்ளன.
கடந்தகாலப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தியாவே முன்னிலை வகிக்கின்றபோதும், இலங்கையில் நடைபெற்ற போட்டிகளடிப்படையில் இலங்கையே முன்னிலை பெறுகிறது. எனவே, இலங்கை அணிக்கே சாதகம் அதிகமாக உள்ளது என எடுத்துக்கொள்ளலாம்.
எனினும், அண்மையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று வகையான தொடர்களிலும் இலங்கை அணி கோட்டை விட்டமை, இந்தியத் தொடரில் இலங்கையின் வெற்றிகுறித்ததுக் கேள்வியை எழுப்புகிறது.

மறக்க முடியாத 1997

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதிவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டி மறக்க முடியாத ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.
அந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,
சிட்டு (111), சச்சின் (143), அஸாருதீன் (126) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 537 ஓட்டங்களைக் குவித்த நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிய சிறிது நேரம் இருந்தவேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.
பின்னர் பதிலுக்கு ஆடிய இலங்கை அணியினர் மிகுதி நாட்களைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அபாரமாக ஆடினர். சனத் (340), மஹானாமா (225), அரவிந்த டி சில்வா (126) சில்வா ஆகியோர் முறையே முச்சதம், இரட்டைச் சதம், சதம் என விளாச, இலங்கை அணி ஐந்தாவது நாள் ஆட்டம் முடியும்போது 6  விக்கெட்டுகள் இழப்புக்கு 952 ஓட்டங்களைக் குவித்தது. எனினும், இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இலங்கை அணி அடித்த இந்த மிகப்பெரிய
ஓட்ட எண்ணிக்கையே இன்றுவரை சாதனையாகவுள்ள அதேவேளை, இந்த ஓட்ட இலக்கைக் குவித்தமைக்காக அன்று இலங்கை அணி விளையாட்டு உணர்வை மீறியதாக விமர்சிக்கப்பட்டது. இந்தப் போட்டியில்தான் மஹேல ஜெயவர்தன டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Total Pageviews

8,866