Monday, March 3, 2014

எஸ்.ஜெயானந்தன்

ஐ.பி.எல். பாணியில்
வருகிறது மற்றொரு
வசூல் லீக்

ற்காசியாவில் விளையாட்டு என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது கிரிக்கெட்தான். அந்தளவுக்கு கிரிக்கெட் இப்பிராந்தியத்தில் மிகவும் பிரபல்யமாகிவிட்டது. அதற்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உலகக் கிண்ணத்தை வென்றமை மிக முக்கிய காரணமாக உள்ளது.
அதுமாத்திரமின்றி தற்போதும் இந்த அணிகள் பெரியளவில் ஜொலித்துவருவதாலும் இப்பிராந்தியம் கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பிக் காணப்படுகிறது.
இதன் விளைவாகவே இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளை இந்தியா ஆரம்பித்தது. அதற்கான பெறுபேறுகளும் சிறப்பாகவே உள்ளன. ஏனைய நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளைவிட ஐ.பி.எல். போட்டிகளே பணம் கொழிக்கும் இடமாகவும் மாறியுள்ளது.
அந்த வகையில் இந்த வருடத்துக்கான ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்திய வீரரான யுவராஜ் சிங் சுமார் 2.2 மில்லியன் டொலர்களுக்கு விலை போயிருந்தார். இதுவே இந்த ஐ.பி.எல். தொடரில் ஒரு வீரர் விலைபோன ஆகக்கூடுதலான விலையாக உள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளுக்குப் பரீட்சயமான நாம் புதியதாக ஒரு தொடரையும் காணக்கூடியதாக அமையப்போகிறது. அதுதான் "சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்' (ஐ.பி.டி.எல்.).
இந்தப் போட்டிகளை நடத்த இந்தியாவின் மகேஷ் பூபதி தனது நிறுவனத்தின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தத் தொடரை நடத்துவது குறித்த ஓர் ஒப்பந்தத்தில் பிரிட்டனின் அன்டி முர்ரே ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது இத்தொடரை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன. போட்டிகள் இந்தாண்டு நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும். இத்தொடரில் பங்கேற்கும் அணிகளாக பாங்கொக், கோலாலம்பூர், மும்பை, சிங் கப்பூர் மற்றும் யஹாங்கொங் ஆகிய நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களிலேயே போட்டிகளை நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 போட்டிகள் நடைபெற வாய்ப்புண்டு. அதேவேளை, இதில் ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் மற்றும் மூத்த வீரர்கள் பங்கேற்கும் ஒற்றையர் ஆட்டம் என ஐந்து வகையில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் விளையாடுவதற்கு முன்னணி வீரர், வீராங்கனைகள் பலரும் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் பங்கேற்பதற்குரிய வீரர்களுக்கான ஏலம் இன்றையதினம் டுபாயில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தமது அணிக்காக வீரர்களைத் தெரிவுசெய்வதற்கு மொத்தம் 4.4 மில்லியன் டொலர்களை மாத்திரமே செலவு செய்யமுடியும் என்ற வரையறையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை இவ்வாறிருக்க, இத்தொடரில் பெரிதும் பேசப்பட்ட விடயமாகக் கருதப்படுவது, நடாலின் சம்பள விவகாரம்தான். அவர் இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும், அதாவது சுமார் 2 தொடக்கம் மூன்று மணித்தியாலங்களுக்கான சம்பளமாக அவருக்கு 1.1 மில்லியன் டொலர்கள் வரை வழங்கப்படவுள்ளது.
27 வயதாகும் நடால், இதுவரை மொத்தம் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் இவ்வருடம் மாத்திரம் விளையாட்டின் மூலம் கிட்டத்தட்ட 66 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவரை விட அதிகமாகச் சம்பாதித்துள்ள சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரருடனும் இந்தத் தொடர் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் விம்பிள்டன் சம்பியனான பிரிட்டனின் முர்ரே ஆகியோரும் இத்தொடரில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் மேலும் பல வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்களது சம்பள விவரங்கள் குறித்து எதுவும் அறியக்கிடைக்கவில்லை.
ஒவ்வொரு வீரர்களுக்கும் நிர்ணயிக்கப்படுகின்ற தொகைகள் மற்றும் அவர்கள் விலை போகின்ற தன்மைகள் என்பன இன்று நடைபெறும் ஏலத்தின்போதே தெரியவரும்.
அதேவேளை, மகளிர் பிரிவிலும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கான ஏலமும் இன்றையதினம் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே முன்னணி நட்சத்திரங்கள் சிலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். அந்த வகையில் மூன்றாம் நிலை வீரரான ஸ்ரான் வாவ்சிங்கா, ஆறாம் நிலை வீரரான தோமஸ் பெர்டிச் மற்றும் 9ஆம் நிலை வீரரான ரிச்சர்ட் ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவில் பல்கேரியாவின் விக்டோரியா அசரென்கா (4), டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி (11), போலாந்தின் ரத்வன்ஸ்கா (3) ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
அத்துடன், முன்னிலை வீராங்கனைகளான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் மரியா ­ரபோவா ஆகியோரும் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதுடன், அதற்காகக் காத்திருக்கின்றனர்.
இந்தத் தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்திற்கு மேல் இருக்காது. எனவே பார்வையாளர்களுக்கு இது பரபரப்பாக இருக்கும்.
அதேவேளை,  டென்னிஸ் போட்டிகளில் டேவிஸ் கோப்பை மற்றும் பெடரேசன் கோப்பை தவிர பெரும்பாலானவை தனி நபர் ஆட்டங்களாகவே நடைபெற்று வருகின்றன. அணியாக சேர்ந்து விளையாட வாய்ப்பு இல்லை. எனவே, அணி உணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச பிரீமியர் டென்னிஸ்  லீக்  விளங்கும்.
அத்துடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒன்றாக இணைந்து ஓரணியாக விளையாடும் புதியதொரு அனுபவத்தையும் இத்தொடர் மூலம் பெறுவர்.
அதேவேளை, இந்தியாவில் சென்னை ஓப்பன் மாத்திரமே இதுவரை நடைபெற்றுவந்துள்ளது. அதேவேளை, மகளிருக்கான போட்டி எதுவும் இல்லை. எனவே, இத்தொடர் அவர்களுக்கு சிறந்ததொரு விருந்தாக அமையும். இலங்கையிலும் இதன் தாக்கம் நிச்சயம் ஏற்படும்.
தவிர, ஆசிய அளவில் சர்வதேச போட்டிகள் குறைவாகவே இருப்பதால் ஆசிய ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையிலும், டென்னிஸ் தரம் உயரும் வகையிலும் ஆசியாவைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்கின்றன.
பெரும்பாலும் இத்தொடரிலும் ஐ.பி.எல். போட்டிகளை விட பல மடங்கில் கோடி ரூபாய்கள் புரளும் என்பது தெட்டத்தெளிவு. ஏனெனில், விளையாட்டு மூலம் அதிகம் சாம்பாதிக்கும் வீர, வீராங்கனைகள் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நட்சத்திரங்கள் பலர் டென்னிஸ் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866