Tuesday, September 10, 2013

யு.எஸ். ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் நடால்

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 

நியூயார்க்கில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் "நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள ஸ்பெயினின் நடாலை எதிர் கொண்டார். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். மீண்டும் எழுச்சி கண்ட நடால் அடுத்த இரண்டு செட்களை 6-4, 6-1 என தன்வசப்படுத்தினார். சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் முடிவில், நடால் 6-2, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை தட்டிச் சென்றார். 
இரண்டாவது முறை:
இதன் மூலம், நடால் யு.எஸ்., ஓபன் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் 2010ம் ஆண்டு இத்தொடரை கைப்பற்றியிருந்தார். தவிர, ஒட்டுமொத்தமாக நடால் பெறும் 13வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு இத்தொடரில் முழங்கால் காயம் காரணமாக விலகிய இவர், பிப்ரவரி மாதம் மீண்டும் போட்டிக்கு திரும்பினார். இந்நிலையில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, யு.எஸ்., ஓபன் பட்டத்தை வென்றது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Total Pageviews

8,866