Sunday, August 14, 2016

மகிழ்ச்சி!


எஸ்.ஜெயானந்தன்
ரியோ ஒலிம்பிக்... இதுதான் தற்போதைய - உலக பரபரப்பு. ஆனால் நமக்கு அந்தப் பரபரப்பில் இணைந்துகொள்ள முடிந்தபோதும் எந்தவொரு ‘மகிழ்ச்சி’யும் இல்லை.
இதனால் நமக்குப் பரீட்சமான - தற்போது  எம்மைத் திரும்பிப் பார்க்க வைத்த விடயம் குறித்துப் பார்ப்போம்.

1999ஆம் ஆண்டு நடந்த அந்த ஒரு மோதலுக்கு முன்னதாக அதாவது 1983ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எதிர்கொண்ட எந்தவொரு மோதலிலும் இலங்கையரால் அவுஸ்திரேலியரை வீழ்த்த முடியாத சோகம் தொடர்ந்தது.
அது இலங்கையருக்குப் பெரும் தர்மசங்கடமான நிலையாக இருந்துவந்தது. இதை மாற்றியமைக்க வேண்டிய கட்டத்தில் 1999ஆம் ஆண்டு முக்கிய பெரும் படை பலத்துடன் 3 களங்களில் மோதலுக்குத் தயாரானது இலங்கைப் படை. இதன் முதல் மோதல் கண்டியில் மூண்டது.
வீழ்த்த முடியாத எதிரியாக இறுமாப்புக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய படை பலத்தை அந்த மோதலில் வைத்து சின்னாபின்னமாக்கியது இலங்கைப் படை. இதுவே இலங்கையர் கொண்டாடிய அந்தப் படை பலத்துக்கு எதிரான முதல் வெற்றி.
இது இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளின் 1999ஆம் ஆண்டுவரையான வரலாறு.
அந்த வெற்றிக் களிப்போது மீண்டும் 17 ஆண்டுகள் தொடர் தோல்விகளோடு புரண்டோடிய நிலையில், மீண்டும் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்குப் படை எடுத்து வந்து 3 மோதல்களுக்குத் தயாரானது. முக்கிய நட்சத்திரங்களை இழந்து பெருந்தோல்விகளைச் சந்தித்து வந்த இலங்கை அணியால் அவுஸ்திரேலியாவை என்னதான் செய்ய முடியும் என சந்தேகக் கண்கொண்டு - பரிதாபமாகப் பார்த்தன கிரிக்கெட் கண்கள்.
அந்த சந்தேகப் பார்வையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது கடந்த ஜூலை 26ஆம் திகதி. அன்றையதினம் ஆரம்பித்த முதல் டெஸ்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 117 ஓட்டங்களுடன் 34.2 ஓவர்களுள் சுருண்டது.
எனினும், பதிலுக்கு ஆடிய அவுஸ்திரேலியா 203 ஓட்டங்களுள் சுருண்டதலால் சிறு நிம்மதி.
இரண்டாவது இன்னிங்ஸில் வெகுண்டெழுந்த மெண்டிஸ் 176 ஓட்டங்களைக் குவிக்க இலங்கை அணி 353 ஓட்டங்களைச் சேர்த்தது.
எனினும், 268 என்ற சிறிய டெஸ்ட் இலக்கை எட்டிவிடலாம் என்ற நினைப்புடன் களம் கண்ட அவுஸ்திரேலியாவை சுழல் மன்னன் ஹேரத் ஆட்டிவித்தார். அந்த அணி 161 ஓட்டங்களுள் சுருண்டது. இதனால் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
எதிர்பாராத இந்தத் திடீர் திருப்பத்தால் 17 ஆண்டுகளாகக் காத்திருந்த மற்றொரு வெற்றிக்கனி இலங்கைக்குக் கிட்டியது. இந்த வெற்றி கொடுத்த புத்துணர்வு கடந்த 6ஆம் திகதி தொடங்கிய இரண்டாவது டெஸ்டிலும் பிரதிபலித்தது.
அந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடிய இலங்கை வீரர்கள் 229 ஓட்டங்களால் வெற்றியைப் பறித்து 17 வருடங்களின் பின்னர் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது மாத்திரமின்றி ஒரு தொடரையும் கைப்பற்றி சாதித்துக் காட்டினர்.
எத்தனையோ ஜாம்பவான்கள் வந்துபோன இலங்கை அணியால் வீழ்த்துவது கடினமாக இருந்து வந்த பெரும் அணியை, பலவீனமாகக் காணப்பட்ட இலங்கை அணியால் அதுவும் சர்வசாதாரணமாக எப்படி வீழ்த்த முடிந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் பெரும் அதிசமாயகத்தான் இருக்கும்.
இந்நிலையில், எப்படியாவது அவுஸ்திரேலிய அணியை வௌ்ளையடித்து அனுப்ப வேண்டும் என்ற அவாவுடன் நேற்றையதினம் ஆரம்பித்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் இலங்கை அணி களம் கண்டுள்ளது.
அந்த ஆட்டத்திலும் இலங்கை அணி வெற்றிபெற்றால் அவுஸ்திரேலிய அணி வரலாற்றில் பெரும் கரும் புள்ளியை இட்டுச்செல்லும் நிலைவரும்.
அதேவேளை, இலங்கை அணிக்கு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வரலாற்றில் முக்கியதோர் திருப்பமாக அமையும்.
அதேவேளை, தற்போதைய இந்த தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரமின்றி இனிவரும் போட்டிகளில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள ஏனைய அணிகளுக்கும் சற்றுக் கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.
இலங்கை அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தியைப் நோக்கும்போது‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்கிற கபாலி பட வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இது இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866