இறுதியில் நடக்கப்போவது என்ன?
ரியோ ஒலிம்பிக்கில் வெற்றிகளாலும் பதக்கங்களாலும் அமெரிக்கா முன்னிலையில் வகித்தாலும் முதல் வெற்றி முதல் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றில் முதலிடம் பிடித்தவை வெவ்வேறு நாடுகள்தான்.
நடப்பு ஒலிம்பிக்கில் ஆரம்ப விழா கடந்த 5ஆம் திகதி நடைபெற்றபோதும் அதற்கு முன்னதாகவே உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் முதலில் நடந்த பெண்களுக்கான ஆட்டத்தில் சுவீடன் அணி 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேபோலத்தான் முதலாவது தங்கத்தை சைக்கிளோட்டப் போட்டியில் பெல்லியத்தைச் சேர்ந்த கிரேக் வன் அவெர்மெட் தானதாக்கிக் கொண்டார். வெள்ளிப்பதக்கத்தை டென்மார்க்கின் ஜாகோப் புக்கிள்சாங்கும், வெண்கலப்பதக்கத்தை போலாந்தின் ரபால் மஜ்காவும் கைப்பற்றினர். இதன்படி பதக்கப்பட்டியலில் முதல் முதலில் பெல்ஜியம்தான் முதலிடத்தில் இருந்துள்ளது.
பின்னர் போட்டிகள் சூடிபிடிக்க ஆரம்பித்த கட்டத்தில் அமெரிக்காவும் சீனாவும் முட்டிமோதிக்கொண்டிருந்தன - ஒன்றுக்கொன்று போட்டியாய் விளங்கின.
எனினும், நாட்கள் நகர நகர பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மேலோங்கவைத்தது. இதனால் சீனாவால் அமெரிக்காவை முந்த முடியாத நிலைமை ஏற்பட்டது.
சரி அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலாவது இருக்கலாம் என்று பார்த்த சீனாவுக்கு, பின்னால் வந்த பிரிட்டன் சவால் விடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்து சீனாவை சீண்டிப்பார்த்தது.
நேற்றுக் காலை வரையான நிலைவரப்படி அமெரிக்கா முதலிடத்திலும் பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருந்தன.
இரண்டாவது இடத்துக்கான போட்டி கடந்த இரு நாட்களாக கடுமையாக இருந்தபோதும் இன்றைய நிலையைப் பொறுத்தவரையில் பிரிட்டனுக்கே அந்த இடத்தைத் தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவாக உள்ளன.
ஏனெனில், இனிவரும் போட்டிகளில் சீனா பங்கேற்கும் - வெற்றிபெறக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமையே இதற்குக் காரணமாக அமைகின்றது.
சீனாவுக்கு இன்றைய தினம் பதக்கங்களை வெல்லக்கூடிய வகையில் மூன்று போட்டிகளே எஞ்சியுள்ளன. அதேவேளை, பிரிட்டனுக்கு 8 போட்டிகள் உள்ளன. இதனால் பிரிட்டனுக்கு வாய்ப்பு அதிகம். ஆனால் அமெரிக்காவுக்கு இவற்றை விட பல மடங்கு போட்டிகள் காத்தி ருக்கின்ற மையால் அமெரிக்கா வின் பதக்க வேட்டை இன்றும் தொடரும் என எதிர் பார்க்கலாம்..
எனவே, இன்று நடைபெறும் போட்டிகளின் அடிப்படையில் பார்த்தால் பதக்கப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை வகிக்கும் நாடுகளின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெரியளவில் இல்லை.
2008 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்த சீனா, அப்போது தமது பலமாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளைப் பயன்படுத்தியது. ஆனால் இம்முறை அந்தப் போட்டிகளில் அந்த நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்பட்டமையும், அந்தப் போட்டிகளில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியமையும் சீனாவின் பின்னடைவுக்குக் காரணமாக அமைகின்றது.
எது எப்படியோ, இன்று இறுதிநாள் என்பதாலும் 30 தங்கங்கள், 30 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 15 வெண்கலப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளமையால் கடைசிக் கட்டத்தில் தமது பதக்க எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஒவ்வொரு நாடும் போட்டிபோடும் என்பதால் சற்றுப் பரபரப்பாகவே இறுதிக்கட்டம் அமையும்.
இன்று நடைபெறும் போட்டிகளில் குழுநிலைப் போட்டியான பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அமெரிக்காவும் ஸ்பெய்னும் மோதவுள்ளன.
அதேபோல ஆண்களுக்கான உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் - ஜேர்மனி அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் ஜேர்மனி தங்கத்தையும், சுவீடன் வெள்ளியையும் கைப்பற்ற கனடா வெண்கலத்தைப் பெற்றது.
அதேவேளை, இன்று நடைபெறும் போட்டிகளில் மிகவும் பரபரப்பு மிகுந்ததாக 4து400 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டிகள் காணப்படும்.
இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 5.45 மணியளவில் நடைபெறும் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியே இறுதியாக நடைபெறும் போட்டியாக அமையவுள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து 9 வீர, வீராங்கனைகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். ஆனாலும் அவர்களால் எந்தவொரு பதக்கத்தையும் வெல்ல முடியவில்லை.
எமது அயல் நாடான இந்தியா தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றிருந்தது.
................
தங்கவேட்டை நடத்தும் அமெரிக்கர்களும்
வேகத்தைக் குறைக்காத ஜமைக்கா்களும்
பிரேஸிலின் ரியோ நகரில் கடந்த 5ஆம் திகதி பெருமெடுப்பில் ஆரம்பமான சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு விழா இன்றுடன் (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை) முடிவடையவுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்பது சாலச்சிறப்பாக இருக்கும்.
உலகமே திரண்டு வந்து முட்டி மோதி - எதிராளியை வீழ்த்தி - மார்தட்டி நிமிர்ந்து நின்று பதக்க வேட்டை நடத்தும் பெரும் விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டிகளில், ஒருவருக்கொருவர் சலித்தவர்கள் அல்லர் என்பது போல் முட்டி மோதி பதக்கங்களை வேட்டையாடியுள்ளனர் - வேட்டையாடவும் (இன்று-நாளை) உள்ளனர்.
இந்தப் போட்டிகளில் சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாளர்களாகக் கருதப்பட்ட குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட் மற்றும் அமெரிக்காவின் நீச்சல் மீன் என வர்ணிக்கப்படும் பெல்ப்ஸ் ஆகியோர் இம்முறையும் தமது கால் தடங்களைப் பதிக்கத் தவறவில்லை.
உசைன் போல்ட் பங்கேற்ற 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 4து100 மீற்றர் ஆகிய பிரிவுகளில் தங்கங்களை வென்று கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் இரு ஒலிம்பிக் போட்டிகளில் இத்தகைய பெறுபேற்றைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப் போலவே இவரது சக நாட்டு வீராங்கனையான எலைன் தொம்சன் 100 மீற்றர் 200 மீற்றர் போட்டிகளில் தங்கத்தை வென்று அசத்திய அதேவேளை, 4து100 தொடரோட்டப் போட்டியில் வெள்ளியை வென்றுள்ளார். இந்த தொடரோட்டப் போட்டியின் தங்கத்தை அமெரிக்காவும், வெண்கலத்தை பிரிட்டனும் தமதாக்கின.
இந்தப் பெறுபேறுகள் வேகமான மனிதர்கள் ஜமைக்கர்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை பறைசாற்றி
யுள்ளது.
குறுந்தூர ஓட்டத்துக்கு இவர்கள் என்றால் நெடுந்தூர ஓட்டத்துக்கு நாம்தான் என்பதை கடந்த சில வருடங்களாக பறைசாற்றிவரும் பிரித்தானிய வீரரான மோ பரா, இம்முறையும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
அதேபோல பெண்கள் பிரிவில் எதியோப்பிய வீராங்கனையான அல்மாஸ் அயானா தங்கத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
ஓட்டப் போட்டிகள் இவ்வாறிருக்க நீச்சலில் அமெரிக்காவின் பெல்ப்ஸ்,
தான் பங்கேற்ற ஆறு வகையான நீச்சல் போட்டிகளில் ஐந்து தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் வென்று கொடுத்துள்ளார் (இவர் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு அருகிலுள்ள அட்டவணையைப் பார்க்க).
அதேவேளை, ஒலிம்பிக்கில் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியாத எத்தனையோ நாடுகள் இருக்கின்ற நிலையில், சில தனி நபர்கள் அசால்டாக பல பதக்கங்களை அள்ளிச் செல்கின்றனர்.
அந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் அமெரிக்காவின் நீச்சல் வீரரான பெல்ப்ஸ்தான். இவர் இம்முறை 5 தங்கங்கள் மற்றும் ஒரு வெள்ளியைப் கைப்பற்றியுள்ளார்.
பிலிப்ஸின் சகநாட்டு வீராங்கனையான காடி லெடெக்கி 4 தங்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். இவரும் நீச்சலிலேயே இத்தனை பதக்கங்களை அள்ளியுள்ளார். மூன்றாவது இடத்தில் உள்ளவரும் ஒரு அமெரிக்கரே. ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்ற வீராங்கனையான சைமன் பிலேஸ் நான்கு தங்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப்பக்கத்தை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் மூன்று இடங்களிலும் அமெரிக்கர்கள் வீற்றிருக்க நான்காவது இடத்தைப் பிடித்த ஹங்கேரியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான கடின்கா ஹொஸ் மூன்று தங்கங்கள் மற்றும் ஒரு வெள்ளியைக் கைப்பற்றியுள்ளார்.
ஐந்தாவது இடததில் உள்ள பிரித்தானியாவின் சைக்கிளோட்ட வீரரான ஜோசன் கென்னி மற்றும் அமெரிக்காவின் நீச்சல் வீரர் ரியன் மர்பி ஆகியோர் தலா 3 தங்கங்களைக் கைப்பற்றி ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தொடரோட்டப் போட்டியில் தங்கம் வென்ற உசைன் போல்டும் இவர்களுடன் மூன்றாவது ஆளாக ஐந்தாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இரண்டு தங்கங்கள் மற்றும் இரண்டு வெள்ளிகளை வென்ற நீச்சல் வீராங்கனையான சைமன் மானுவேல், இரண்டு தங்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்ற மற்றொரு நீச்சல் வீராங்கனையான மடெலின் டிராடோ ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ள ஜமைக்காவின் எலைன் தொம்சன் இரண்டு தங்கங்கள் மற்றும் ஒரு வெள்ளியைப் பெற்றுள்ளார்.
முதல் பத்து இடங்களில் உள்ளவர்களுள் 6 பேர் அமெரிக்கர்களாகவும் இருவர் ஜமைக்காவைச் சேர்ந்தவர்களாகவும் தலா ஒருவர் ஹங்கேரி மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்தவராகவும் உள்ளனர்.
No comments:
Post a Comment