எஸ்.ஜெயானந்தன்
இலங்கைக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று உலகக் கிண்ணத் தொடர்கள் மற்றும் அவற்றுக்கிடைப்பட்ட காலங்களில் துடுப்பாட்டத்தில் மூன்று முக்கிய நட்சத்திரங்கள் ஜொலித்தவண்ணமிருந்தனர்.
அவர்கள், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் திலகரட்ண டில்ஷான் ஆகியோர் ஆவர்.
இவர்கள் மூவரும் இலங்கை அணியின் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய வகையில் திறன் அடிப்படையில் உச்சத்தில் இருந்தனர். ஒருவர் ஆட்டமிழந்தால் மற்றையவர் இருக்கிறார்தானே என்றளவுக்கு இலங்கை ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தவர்கள்.
இம்மூவரில் சங்கா, மஹேல இருவரும் ஓய்வுபெற்றுள்ள நிலையில் அண்மைக்காலமாக இலங்கை அணி சற்று பலவீனமானதோர் கட்டத்தை அடைந்தது.
இதனால் இலங்கை அணியில் எஞ்சியிருந்த அனுபவ வீரர்களான டில்ஷான் மற்றும் மத்யூஸ் மீது சற்று எதிர்பார்ப்பு மேலோங்கியது.
தொடர் தோல்விகளைக் கண்டி வந்த இலங்கை அணிக்கு டில்ஷான் பெரியளவில் கைகொடுக்கவில்லை.
தற்போது இலங்கையில் நடைபெற்றுவரும் போட்டிகளில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்து வெற்றிகளைக் குவித்துவருகிறது.
இந்த வெற்றிகளுக்கு டில்ஷானின் பங்கு சிறப்பாக அமையவில்லை. நடைபெற்று முடிந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் டில்ஷானின் பெறுபேறுகள் முறையே 22, 10 ஓட்டங்களாகவே இருந்தன. இதேவேளை, புதுமுக வீரர்கள் சிலர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், நடப்புத் தொடரிலிருந்து டில்ஷானை இடைநிறுத்தி வைப்பதற்கு கிரிக்கெட் சபை முயற்சிகளை மேற்கொண்டது.
இதையடுத்து இன்று தம்புள்ளையில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் தான் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் பின்னர் நடைபெறும் இரு இருபது-20 போட்டிகளுடன் அந்த வகைப் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக டில்ஷான் அறிவித்துள்ளார்.
இலங்கை அணியை பல்வேறு தருணங்களில் வெற்றிபெறச் செய்த பெருமைக்குரிய டில்ஷானின் ஆட்டங்கள் ரசிகர்களுக்குப் பெரு விருந்தா அமைவது வழமை.
அவர் துடுப்பு மட்டையுடன் தானும் திரும்பி பின் புறமாக விளாசும் ஆட்டம் தனி ஸ்டைல். இதேபோல வேறெந்த வீரர் ஆடினாலும் ‘டில்ஷான் ஷொட்’ என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு அவரது அந்த ஆட்டம் உலகப்பிரசித்தம்.
1976ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி களுத்துறையில் பிறந்த திலகரட்ண டில்ஷான், 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை சிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைத்தார்.
ஒருநாள் ே பாட்டிகளின் இவரது அறிமுகமும் சிம்பாப்வே அணிக்கு எதிராகவே 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நிகழ்ந்தது.
இவர் இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,248 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இவரது ஓர் இன்னிங்ஸின் ஆகச்சிறந்த ஓட்டமாக ஆட்டமிழக்காது 161 ஓட்டங்களைப் பெற்றமையைக் குறிப்பிடலாம்.
அதேவேளை, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் விளாசியுள்ள இவர், 1106 பௌண்டரிகளையும் 55 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.
இலங்கை அணி சார்பாக பத்தாயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர்களான ஜெயசூர்ய, மஹேல ஜெயவர்தன மற்றும் சங்கக்கார ஆகியோருக்கு அடுத்த இடத்தில் டில்ஷானே உள்ளார்.
சகலதுறை வீரரான இவர் பந்துவீச்சிலும் அவ்வப்போது அசத்தத் தறவில்லை.
106 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ள இவரது ஓர் இன்னிங்ஸின் சிறந்த பெறுபேறாக நான்கு ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றியமையைக் குறிப்பிடலாம்.
இத்தகைய கடந்த கால சிறந்த பெறுபேறுகளுடன் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள டில்ஷானை நாமும் வாழ்த்தி வழிஅனுப்புவோமாக....

No comments:
Post a Comment