எஸ்.ஜெயானந்தன்
டென்னிஸ் போட்டிகளில் மிகப்பெரிய தொடர்களாக அவுஸ்திரேலிய ஓப்பின், பிரெஞ்ச் ஓப்பின், விம்பிள்டன் ஓப்பின் மற்றும் அமெரிக்க ஓப்பின் ஆகியன விளங்குகின்றன.
இவற்றுன் அவுஸ்திரேலிய ஓப்பின் வருடத்தின் ஆரம்பத்தில் ஜனவரி-பெப்ரவரி காலப்பகுதியிலும் பிரெஞ்ச் ஓப்பின் மே-ஜூன் காலப்பகுதியிலும், விம்பிள்டன் ஓப்பின் ஜூன்-ஜூலை காலப்பகுதியிலும் நடைபெறும் அதேவேளை அமெரிக்க ஓப்பின் ஓகஸ்ட் - செப்டெம்பர் காலப்பகுதியிலும் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழமை.
அந்த வகையில் முதல் மூன்று தொடர்களும் முடிவடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஓப்பின் தொடர் நாளையதினம் ஆரம்பிக்கின்றது.
நாளை 27ஆம் திகதி ஆரம்பிக்கும் இத் தொடர் செப்டெம்பர் 11ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.
136ஆவது கட்டமாக நடைபெறவுள்ள 2016ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஓப்பின் டென்னிஸ் தொடர், வழமை போல ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் போட்டிகளுடன் இளையோருக்கான போட்டிகள் என பல போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் தற்போதைய நடப்பு சம்பியனாக விளங்குபவர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் ஆவார். அதேபோல பெண்களுக்கான நடப்புச் சம்பியனாக இத்தாலியின் பிளவிய பென்னட்டா விளங்குகிறார்.
அமெரிக்க ஓப்பினைப் பொறுத்தவரையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரிச்சார்ட் சியேஸ், பில் லர்னெட், பில் ரைடன் ஆகியோர் அதிக தடவைகள் (7) சம்பியன் பட்டத்தை வென்றுள்ளவர்களாவர். அதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மல்லோரி 8 தடவைகள் சம்பியனாகியுள்ளார்.
இம்முறை நடைபெறும் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், தரவரிசையில் முன்னிலையில் உள்ள நோவாக் ஜோகோவிக், இரண்டாம் நிலையில் உள்ள அன்டி முர்ரே மூன்றாம் நிலையில் உள்ள ஸ்ரான் வாவ்ரிங்கா மற்றும் 4ஆவது இடத்திலுள்ள ரபேல் நடால் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, அண்மையில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜப்பான் வீரரான கெய் நிஸிகோரி மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது இடத்திலுள்ள ஜேர்மனியின் கேர்பர், ஸ்பெய்னின் முகுருஸா, அக்னிஸ்கா மற்றும் சைமனா ஹேலப் ஆகியோர் பிரதானமானவர்களாகவுள்ளனர்.
இத்தொடரில் ஆண்கள் பிரிவில் பிரதானமாக விளங்கக்கூடியவராக இருந்த சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் பெண்கள் பிரிவில் ஊக்கமருந்துச் சர்ச்சையில் சிக்கியுள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் இல்லாதமை ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமே. அதேவேளை, கடந்த காலத் தொடர்களைப் போல இத்தொடரிலும் சில அதிர்ச்சிகளும் நிகழலாம். அதாவது, முன்னணி நட்சத்திரங்களுக்கு சற்றும் எதிர்பாராத வீர, வீராங்கனைகள் அதிர்ச்சி வைத்தியம் பார்க்கவும் கூடும்.
எனவே, ஒவ்வொரு போட்டியின் முடிவையும் அந்தந்தப் போட்டிகளின் முடிவின் பின்னரே தீர்மானிக்கும் வகையில் அமையும். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment