உலகக் கிண்ணக் கிரிக்கெட் 10 அத்தியாயங்களைக் கடந்துள்ள நிலையில், 11ஆவது அத்தியாயம் எதிர்வரும் 14ஆம் திகதி நியூஸிலாந்தில் ஆரம்பிக்கிறது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலியா-நியூஸிலாந்து ஆகிய கிரிக்கெட் நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இதற்கான ஆரம்ப விழா இரு நாடுகளிலும் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 29ஆம் திகதியுடன் நிறைவுபெறும்.
போட்டிகள் இரு நாடுகளிலும் உள்ள தலா 7 மைதானங்களில் நடைபெறவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் அடிலெயிட், பிரிஸ்பேன், கான்பரா, ஹோபாரட், மெல்பேர்ன், பேர்த் மற்றும் சிட்னி போன்ற மைதானங்களில் 26 ஆட்டங்களும், நியுஸிலாந்தில் ஆக்லன்ட், கிறைஸ்ட்சேர்ச், துனெடின், ஆமில்டன், நேப்பியர், நெல்சன் மற்றும் வெலிங்டன் போன்ற மைதானங்களில் 23 ஆட்டங்களும் நடைபெறும். இறுதி ஆட்டம் மெல்பேர்னில் நடக்கும்.
இதில் மொத்தம் 14 அணிகளும், அங்கீகாரம் பெற்ற 400 வீரர்களும் கலந்துகொள்கின்றனர்.
இப்போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமை, 2011ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான உலகக்கிண்ணங்களை நடத்தும் நாடுகளுக்கான ஏலம் விடப்பட்டபோதே தீர்மானிக்கப்பட்டது.
அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாவது முறையாக இப்போட்டிகளை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே1992ஆம் ஆண்டும் இணைந்து நடத்தியிருந்தன.
பிரிவு ‘பி’யைச் சேர்ந்த அணிகளான நடப்புச் சம்பியனான இந்தியாவுக்கும் முன்னாள் சம்பியனான பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியின் நுழைவுச் சிட்டுக்கள் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சச்சின் டெண்டுல்கர் இச்சுற்றுத்தொடரின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
போட்டித்தொடர் வகை
2011ஆண்டின் உலகக்கிண்ணத்தைப் போலவே இந்தத் தொடரிலும் 14 அணிகள் இரு குழுக்களாக (்‘ஏ’, ‘பி’) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா ஏழு அணிகள் வீதம்
சேர்க்கப்பட்டு போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவிலும் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். பின்னர் இரு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.
14ஐ மையப்படுத்தும்
உலகக் கிண்ணம்
எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றையதினமே உலகக் கிண்ணத் தொடரும் ஆரம்பிக்கின்றமையால் அன்றையதினம் நடைபெறும் ஆட்டங்களில் நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய மைதானங்கள் காதலர்களால் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, தமது காதலைப் பிரபலப்படுத்துவதற்காக காதல் ஜோடிகள் ஏதேனும் சுவாரஷ்யமான நிகழ்வுகளை அரங்கேற்றவும் கூடும்.
அத்துடன், மற்றொரு விடயத்தையும் கூறவேண்டும். போட்டி ஆரம்பிப்பதும் 14. காதலர் தினமும் 14. விளையாடும் அணிகளும் 14. மொத்தத்தில் இந்த உலகக் கிண்ணத்தால் 14 பெருமைப்படுகின்றது.
இத்தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் இன்று (8) தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இன்றையதினம் நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகள் களம் காண்கின்றன.
நாளையதினம் நடைபெறும் பயிற்சியாட்டத்தில் இலங்கை அணி, தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. பின்னர் 11ஆம் திகதி சிம்பாப்வேயை எதிர்த்தாடவுள்ளது.
இலங்கைக்கு 13 கோடி ரூபா
இலங்கை அணி கிண்ணத்தை வென்றால் அந்த அணியினருக்கு 13 கோடி ரூபா பகிர்ந்து கொடுக்கப்படும் என கடந்த 6ஆம் திகதி இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரிசுத்தொகை
இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக ஐ.சி.சி. 10 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இது கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை விட 20 வீதம் அதிகமாகும். இப்பரிசுத்தொகையானது அணிகளின் பெறுபேற்றிற்கமைய பின்வரும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும்.
நிலை பரிசுத்தொகை மொத்தம்
(அமெ. டொலர்)
சம்பியன் 3,975,000 3,975,000
இரண்டாமிடம் 1,750,000 1,750,000
அரையிறுதியில் தோற்றோர் 600,000 1,200,000
காலிறுதியில் தோற்றோர் 300,000 1,200,000
குழுநிலையில் வெற்றி 45,000 1,890,000
குழுநிலையுடன் வெளியேற்றம் 35,000 210,000
மொத்தம் 10,225,000
ஓர் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைப் பெறும்பட்சத்தில் மொத்தப் பரிசுத்தொகையாக 4,245,000 டொலர்களையும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்று முதல் சுற்றுடன் வெளியேறுமாயின் 35,000 அமெரிக்க டொலர்களையும் பரிசாகப் பெறும்.
No comments:
Post a Comment