பாகிஸ்தானுக்கு
இரண்டாவது அடி
உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில், அன்ரு ரசேலின் இருமுனைத் தாக்குதல் கைகொடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றிபெற்று புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த பாகிஸ்தான் - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கிறிசேச்சில் மோதலை ஆரம்பித்தன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று புத்துணர்ச்சி பெறுவதற்கு இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.
தமது ஆட்டத்தை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, போட்டியின் ஐந்தாவது ஓவரின் முடிவு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அணியின் சரவெடி வீரரான கிறிஸ்கெய்ல் தனது பங்குக்கு 4 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை சொகைல் கானின் பந்துவீச்சில் ஹரிஸ் சொஹைலிடம் பிடிகொடுத்து நடையைக்கட்டினார்.
தொடர்ந்து மற்றொரு நம்பிக்கை - ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஸ்மித் (23), அணி 28 ஓட்டங்களுடன் இருந்தவேளை ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், ஜோடி சேர்ந்த டெரன் பிராவோ - சாமுவேல்ஸ் ஜோடி அணியைத் தூக்கி நிறுத்தியது.
சிறப்பாக நகர்ந்துகொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளின் ஆட்டத்தின் 24.1ஆவது ஓவரில் அணி 103 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை சாமுவேல்ஸ் (38) ஆட்டமிழந்தார்.
பின்னர் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்த பிராவோ (49) அரைச்சதமடிக்கும் தருவாயில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக் காரணமாக இடைநடுவில் வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்களான ராம்டின் (51), சைமன்ஸ் (50), சமி (30), ரசேல் (42*) ஆகியோரும் சிறப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்க்க, 50 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 310 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தான் சார்பாகப் பந்துவீச்சில் ஹரிஸ் சொகைல் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் இப்ரான், சொலைல்கான், வாஹப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 311 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நோக்கிக் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் படுமோசமாக அமைந்தது.
முன்னிலை வீரர்களான நசிர் ஜாம்செட் (0), யூனிஸ்கான் (0), ஹரிஸ் சொகைல் (0) அஹமட் ஷெசாட் (1), மிஸ்பா உல்ஹக் (7) ஆகியோர் வருவதும் போவதுமாக பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இதனால், பாகிஸ்தான் அணி, 10.3 ஓவர்களுள் வெறும் 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது. இதனால், அந்த அணியால் 50 ஓட்டங்களைச் சேர்ப்பதே கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், ஜோடி சேர்ந்த சொஹைப் மஹ்சூட் - உமர் அக்மல் ஜோடி பொறுமையுடன் ஆடி அணியை தூக்கி நிறுத்த முனைந்தது.
எனினும், இந்த ஜோடியை சிறு இடைவெளியின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 105 ஓட்டங்களைச் சேர்த்திருந்தவேளை, சொஹைப் மஹ்சூட் (50) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அப்ரிடி சிறிது ஆறுதல் அளித்தார்.
எனினும், மறுமுனையில் நின்ற உமர் அக்மலின் (59) ஆட்டமிழப்பு, ஏனைய விக்கெட்டுகளையும் மளமளவென சரியவைத்தது. வாஹப் ரியாஸ் (3), ஷாகித் அப்ரிடி (28), சொஹைல் கான் (1) ஆகியோர் அடத்தடுத்து ஆட்டமிழந்தனர். மொஹமட் இப்ரான் (2) ஆட்டமிக்காது களத்தில் இருந்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி, 39 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 160 ஓட்டங்களையே சேர்த்திருந்தது.
இதனால்,மேற்கிந்தியத் தீவுகள் அணி, 150 ஓட்டங்களால் அபாரவெற்றிபெற்று, வெற்றிக்கான 2 புள்ளிகளையும் தனதாக்கிக்கொண்டது.
இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய ரெய்லர், ரசேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, எஞ்சிய விக்கெட்டுகளை ஹோல்டர், சமி (தலா ஒன்று) ஆகியோர் தமக்கிடையே பங்குபோட்டனர்.
துடுப்பாட்டம் - பந்துவீச்சு என இரு முனைகளிலும் தாக்குதலைத் தொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் ரசேல், ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றிமூலம் ‘பி’ பிரிவில் இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, அந்தப் பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment