Monday, February 2, 2015

பலமிழந்துவிட்டதா இலங்கை?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை அணி, அந்த அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியைச் சந்தித்தமை, உலகக்
கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி பங்கேற்ற போட்டிகள் குறித்து சிறிது பார்ப்போம்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் பங்கேற்ற இலங்கை அணி, இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து அத்தொடரைப் பறிகொடுத்தது.
இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடருக்கான தனது பலத்தை வெளிப்படுத்தவேண்டிய ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி களமிறங்கியது.
7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி (218/9),  நியூஸிலாந்திடம் (219/7, 43 ஓவர்கள்) தோற்றபோதும், இரண்டாவது போட்டியில் பதிலடிகொடுத்தது. இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூஸிலாந்து 248 ஓட்டங்களைச் சேர்க்க, இலங்கை அணி வெற்றியிலக்கைக் கடந்து 252 (4 விக்., 47.4 ஓவர்கள்) ஒட்டங்களைச் சேர்த்து வெற்றிபெற்றது.
இந்நிலையில், நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, 28.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களைச் சேர்த்த வேளை மழை குறுக்கிட்டமையல் ஆட்டம் முடிவை எட்ட முடியாமல் கைவிடப்பட்டது.
பின்னர் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 276 ஓட்டங்களைச் சேர்த்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணி, 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
23ஆம் திகதி நடைபெற்ற 5ஆவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரமே பறிகொடுத்து 360 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் வெற்றியிலக்கு நோக்கி ஆடிய இலங்கை அணி, 43.4 ஓவர்களில்  252 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால், இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் 6ஆவது போட்டியில் இலங்கை அணி சவால் விடுத்து ஆடும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், இலங்கை அணி நியூஸிலாந்து குவித்த 315 (8 விக்.) ஓட்டங்களை நெருங்கக்கூட முடியாமல் 40.3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால், இந்த ஆட்டத்திலும் பெருவெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி மீதமிருக்க 4-1 என்ற கணக்கில் தொடரை தன்வசப்படுத்திக்கொண்டது.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற ஏழாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இலங்கை அணி, சங்கக்காரவின் சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்களைச் சேர்த்தது.
பின்னர் வெற்றியிலக்கு நோக்கி ஆடிய நியூஸிலாந்து அணியால் 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 253 ஓட்டங்களையே சேர்க்க முடிந்தது. இதனால் 34 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு ஆறுதல் கிடைத்தது.
இத்தொடரை 4-2 என்ற கணக்கில் நியூஸிலாந்து தன்வசப்படுத்திக்கொண்டது. இத்தொடரின் நாயகனாக நியூஸிலாந்தின் வில்லியம்ஸன் தெரிவுசெய்யப்பட்டார்.
இத்தொடரில் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் இலங்கையின் டில்ஷான் (397), சங்கக்கார (321) ஆகியோர் ஒட்டுமொத்த போட்டிகள் (7) அடிப்படையில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றோர் வரிசையில் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளனர். மற்றொரு நட்சத்திர வீரரான மஹேல ஜெயவர்தன (278) ஐந்தாவது இடத்தில் உள்ளார். நியூஸிலாந்தின் வில்லியம்ஸன் (295), ரோசி (279) ஆகியோர் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். 
அந்த வகையில் இலங்கையின் முன்னிலை வீரர்கள் துடுப்பாட்டத்தில்  சிறப்பான நிலையில் உள்ளனர் என்பது புலனாகிறது.
எனினும், பந்துவீச்சுப் பெறுபேற்றைப் பொறுத்தவரையில், நியூஸிலாந்து வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருந்துள்ளது. 
அதாவது, மைக்கிளன்ஹம் (10), அன்டர்சன் (9), சௌத்தீ (7), மிலன் (5), பௌல்ட் (5) ஆகியோர் முறையே ஒன்று முதல் ஆறு வரையான இடங்களில் மூன்றாவது இடம் தவிர ஏனைய இடங்களைத் தமதாக்கிக்கொண்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் குலசேகர (9) உள்ளார்.
அந்த வகையில் நியூஸிலாந்தின் பந்துவீச்சுப் பலம் அதிகமாகக் காணப்படும் அதேவேளை, இலங்கையின் பந்துவீச்சு பின்தங்கிய வகையில் உள்ளதுபோன்ற தோற்றப்பாடு வெளிக்கொணரப்படுகிறது.
எனவே, உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கக்கூடிய இலங்கை அணியே நியூஸிலாந்துத் தொடரில் பங்கேற்றுள்ளமையால் இலங்கை  அணி, அவுஸ்திரேலிய-நியூஸிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரிலும் தாடுமாறும் வகையிலேயே ஆடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
எனினும், நியூஸிலாந்துத் தொடரில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான லஸித் மாலிங்க பங்கேற்றிருக்கவில்லை என்பதாலும், அவர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் என்பதாலும் பந்துவீச்சுப் பலம் அதிகரிக்கக்கூடிய நிலை உள்ளது. இதனால் இலங்கையின் பலம் சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இலங்கை மீதும் எதிர்பார்ப்பு வருவது தவிர்க்கமுடியாததாக இருக்கும்.
அதற்கும் அப்பால் நியூஸிலாந்துத் தொடரில் பந்துவீச்சில் விட்ட தவறுகளை உலகக் கிண்ணத் தொடரில் திருத்தியமைத்துக்கொண்டால் மேலும் பலம் சேரும்.

No comments:

Post a Comment

Total Pageviews

8,866